இலக்கியம்

தமிழில் இதுவரை சொல்லப்படவில்லை | நூல் நயம்

செய்திப்பிரிவு

ஆங்கில வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான அறிஞர் எஸ்.ஜெயசீல ஸ்டீபனின் நூல்கள் அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் மொழிபெயர்ப்புகளால் தமிழ் அறிவுலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழின் நவீன கால வரலாற்றை இந்நூல்களைத் தவிர்த்துவிட்டு எழுதுவது கடினம்.

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியுடன் வளர்ந்த அறிவு மரபை மையமிட்டவை இவரின் ஆய்வுகள். அந்த வகையில் புதுவை சீனு.தமிழ்மணியின் அழகிய மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள தமிழ் உரைநடை வரலாறு குறித்த நூல் முக்கியத்துவமுடையது. தமிழில் தோன்றிய வாழ்க்கை வரலாற்று நூல்கள், தருக்க நூல்கள், கதை, சிறுகதை, புதினம் ஆகிய உரைநடை வடிவங்களை மையமாக வைத்து ஆராய்கிறது இந்நூல்.

இதனுள், தமிழர் ஒருவரைப் பற்றி ஜெர்மானிய மொழியில் ஜெர்மானியர்களாலேயே எழுதப்பட்ட முதல் நூல், ஆரோன் என்பவரைப் பற்றியது எனும் செய்தியும் முதல் இந்திய மதப் பரப்புநரான இவரின் வாழ்க்கை வரலாறும் ஆர்வம் தரத்தக்கன.

சேசுநாதர் சரித்திரம், இக்னேஸியஸ் இலயோலா, பச்சையப்ப முதலியார் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் பற்றிய அரிய செய்திகளும் ஆராயப்பட்டுள்ளன. கத்தோலிக்கர் x புராட் டஸ்டண்டுகள், சைவர் x மதம் மாறிய கிறித்துவர், வைணவர் ஆகியோர்களுக்கு இடையில் நடந்த தருக்க வரலாற்றையும், உரைநடை வளர்ச்சியையும் ஒருங்கே விளக்குகிறது இந்நூல். மேலும் சிறுகதை, கதை, புதினம் உள்ளிட்டவை தோன்றிய சூழலையும் வரலாற்றையும் இந்நூலின் வழி விளக்கியுள்ளார்.

இப்பொருண்மை குறித்து எழுதிய நா.வானமாமலை, அ.மு.பரமசிவானந்தன், வி.செல்வநாயகம் போன்றோரின் நூல்களில் இல்லாத அரிய பல தகவல்கள் வரலாற்றியல் ஓர்மையோடு வழங்கப்பட்டுள்ளன என்பதால், இந்நூல் தமிழின் தனித்துவமானது. இந்த நூலுக்கான தரவுகளை இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய, அமெரிக்க ஆவணக் காப்பகங்கள், நூலகங்கள் எனப் பல்வேறு இடங்களில் தேடித்தேடிச் சேகரித்துள்ளார் நூலாசிரியர். அந்த வகையில் இந்நூலின் செய்திகள் தமிழில் இதுவரை சொல்லப்படவில்லை எனலாம். - கா.விக்னேஷ், ஆய்வாளர், ஜே.என்.யு.

மெல்லத் திறந்த தமிழ் உரைநடை இலக்கியத்தின் கதவு
எஸ்.ஜெயசீல ஸ்டீபன்
புதுவை
சீனு.தமிழ்மணி
என்.சி.பி.எச்.
044-26251968, 26258410

பெண் மனதின் தளும்பல்கள்: ஆண் - பெண் சமம் என்று நாம் பொதுவில் சொன்னாலும், ஆண் எப்படி தன்னளவில் ஒரு முழுமையானவனோ, அப்படியே ஒரு பெண்ணும் தன்னளவில் முழுமையானவளே. ஆணோடு பெண்ணையோ, பெண்ணோடு ஆணையோ ஒப்பீடு செய்வதென்பது விவாதத்திற்குரியதே. அவரவரின் சுயசிந்தனையும், சிந்தனைக்கேற்ற செயல்பாடுகளுமே நம்மை யாரென்று இச்சமூகத்தின்முன் அடையாளப்படுத்தும் காரணியாகும்.

சமூகத்தால் ‘லூசு’ என்று சுட்டப்படும் ஒரு பெண்ணின் மனச்சித்திரங்களே இந்த நூலெங்கிலும் காட்சிகளாக விரிந்துள்ளன. இவை டைரி குறிப்புகளாக, வாழ்வின் காட்சிச் சித்திரங்களாக, ஒவ்வொன்றும் ஒரு சிறுகதையாக, மொத்தமாகப் படிக்கையில் ஒரு நாவலாக விரிகின்றன.

எதுவானபோதிலும் ஒவ்வொரு சின்னச்சின்னக் காட்சியும் நம் வீட்டில், நம் தெருவில், நம் ஊரில் நடக்கும் காட்சிகளை நம் மனக்கண் முன் கொண்டுவந்து காட்டுகின்றன. ஒரு பெண் மனதின் உணர்வுகள் எழுத்தின் வழி தளும்பி, நம் இதயத்தை அடைவதில் வெற்றியடைந்துள்ளன. - மு.முருகேஷ்

அன்பு அம்மாவும் அக்கு ஆன்மாக்களும் – லூசுபெண்
அன்பாலயம் வெளியீடு
விலை: ரூ.550/- தொடர்புக்கு: 9042049269

இன்றைய சூழலுக்கும் பொருத்தமான நூல்: இந்த தொகுப்பு நூலில் உள்ள அயோத்திதாச பண்டிதரின் அரசியல்விமர்சனக் கட்டுரைகள் 120 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை. எனினும், அவரது எழுத்துகள் இன்றைய அரசியல் சூழலுக்கும் பொருந்திப்போவது ஆச்சரியமாக உள்ளது. ‘ஒரு பைசா தமிழன்’ வார ஏட்டில் 1907 முதல் 1914 வரையிலான காலகட்டங்களில் அவர் மொத்தம் 325 தலைப்புகளில் 524 அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில் 85 மட்டும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

அன்றைய காலகட்டங்களில் புழக்கத்தில் இருந்த வார்த்தைகளை கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள் அவை. பண்டிதருக்கு சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் தெரியும் என்பதால் பெரும்பாலான கட்டுரைகள் இந்த மொழிக் கலப்புடனே இருந்திருக்கின்றன.அதை இன்றைய தலைமுறையினர் வாசித்தால் புரிந்து கொள்வது சிரமம் என்பதால், எளிய தமிழில் சிறிய வாக்கிய அமைப்புகளாக தந்திருக்கிறார் நூலின் ஆசிரியர்.

உயர் சாதியினர் ஆதிக்கம் மிகுந்த அன்றைய காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை பல இடங்களில் விமர்சித்துள்ள பண்டிதர், அடித்தட்டு மக்களின்விழிப்புணர்வுக்காக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அன்றையகாலட்டங்களில் இந்தக் கருத்துகள் எல்லாம் முற்போக்கானவை. இதன்மூலம் பெரியாருக்கு முன்னோடியாக அயோத்திதாசபண்டிதர் திகழ்ந்திருக்கிறார்.

குடிமக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே பண்டிதரின் பெரும் அவாவாக இருந்திருக்கிறது. அதிலும் அவர்கள் அரசாங்கஉத்தியோகம் பெற்று உயர வேண்டும் என விரும்பியிருக்கிறார். உயிரினங்கள் வாழ, மழை வேண்டும். அந்த மழை இல்லாமைக்கு ஒழுக்கம்நிறைந்த அறிவாளிகளும் உயர்ந்தோரும் இல்லாதுதான் காரணம் எனத் தொடங்கி சங்கிலி தொடர்போல காரணங்களை அடுக்கி, ஆட்சியாளர்கள் நல்ல ஆட்சியைவழங்குவதற்கு குடிமக்களின் நடத்தை முக்கிய காரணமாக இருக்கும் என அறிவுரை வழங்கியிருக்கிறார்.

சாதியற்ற, தாழ்வு இல்லாத ஆதிதிராவிடர்கள் இந்த தேசத்தின் பூர்வகுடிகள் என்றும், இவர்களை தென்னாட்டில் தமிழர்கள் என்றும், வடநாட்டினர் திராவிடர்கள் என்றும் அழைத்ததாக ஒரு தகவலை பதிவிடுகிறார். மேலும் இலங்கையின் சாஸ்திரங்களிலும் வரலாற்றிலும் இந்த பூர்வ குடிமக்களைத் திராவிட பவுத்தர்கள் என எழுதப்பட்டுள்ளதாகவும் விளக்குகிறார் பண்டிதர். பல தகவல்களின் களஞ்சியமாக உள்ள இந்த நூல், அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்றாகும். - பா.அசோக்

அயோத்திதாச பண்டிதரின்
அரசியல் விமர்சனக் கட்டுரைகள்
தொகுப்பு: க.கலாமணி சங்கபாலா
பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம் வெளியீடு
விலை: ரூ.200,
தொடர்புக்கு: 99622 14491

SCROLL FOR NEXT