இலக்கியம்

வஞ்சகனை ஒழிக்கத் தயக்கம் வேண்டாம் | அகத்தில் அசையும் நதி 30

சு.தமிழ்ச்செல்வி

எனது ‘ஆறுகாட்டுத் துறை’ நாவலை எழுதி முடித்திருந்த நேரம். எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார் ரமேஷ். எனது எழுத்தைப் பற்றி விசாரித்தார். “புதிய நாவல் ஒன்றை எழுதி முடித்திருக்கிறேன். அச்சுக்கு கொடுக்க வேண்டும்” என்றேன். “நான் ஒருமுறை பார்க்கட்டுமா?” என்றார்.

புதினம், கவிதை, கட்டுரை என இலக்கியத்தின் அத்தனை பரிமாணங்களிலும் அவர் ஜாம்பவான் என்கிற மதிப்பை அவர்மீது கொண்டிருந்தவள் நான். அதுமட்டுமல்லாமல் அவரது சிந்தனையை, பேச்சைக் கேட்கும் போதெல்லாம் நமக்குமுன் வாழ்ந்த யாரையோ நினைவுபடுத்துவது போலிருக்கும்.

ரமேஷைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் இதுபோல் தோன்றும். பிறகு பட்டினத்தாரோடு சிலவேளைகளில் அவரைப் பொருத்திப் பார்த்திருக்கிறேன். இன்னும் சில வேளைகளில் தாயுமானவரோடு. ரமேஷ் தன் சிந்தனையாலும் சில செயல்களாலும் இருவருடனுமே பொருந்திவரக்கூடியவராக இருந்தார்.

தாயுமானவர் என்கிற பெயரின் பொருளுமேகூட அவருக்குப் பொருத்தமானதுதான். இப்படி என் மனதில் உயர்ந்து நிற்கும் ஒருவர் என் நாவலைப் படித்துப் பார்க்கிறேன் (திருத்தம் தேவைப்பட்டால் சொல்வதற்கும், நாவலின் கட்டுமானத்தில் ஒழுங்கைக் கொண்டுவருவதற்காகவும்) என்கிறாரே என்று மகிழ்வோடு கொடுத்தேன். அப்போது கையெழுத்துப் பிரதியாகவே நாவல் இருந்தது. “படிக்கச் சிரமப்படுவீர்களே” என்றேன். “உங்கள் கையெழுத்து தெளிவாகவும் அழகாகவும்தானே இருக்கிறது” என்று வாங்கிச்சென்றார்.

நான் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமத்திலிருந்து வந்தவள். அந்தக் கிராமத்தில் வாழும் பெண்களைப் போலவேதான் குடும்பம், கணவன், பிள்ளைகள் பற்றிய சிந்தனை எனக்கும் இருந்தது. ஒரு ஆண் தன் மனைவிக்கு எப்படிப்பட்ட துன்பங்களையும் தீங்கையும் இழைத்தாலும் மனைவி ஒருபோதும் அவனுக்கு எதிராக மனதால்கூட யோசிக்க மாட்டாள்.

என் அம்மா, அத்தை, பெரியம்மா, அக்காள்கள் எல்லாரும் இந்த மனப்பான்மையை இயல்பாகக் கொண்டிருந்தார்கள். எனக்கும் அதையே கற்பித்திருந்தார்கள். ஆனால், ‘ஆறுகாட்டுத்துறை’ நாவலில் இதற்கு மாறான ஒரு முடிவை அதில் தந்தாக வேண்டிய கட்டாயம்.

நள்ளிரவு நேரம். நாவலின் மைய கதாபாத்திரம் சமுத்திரவல்லியை அவளுடைய கணவன் சாமுவேல் தந்திரமாகக் காதல் வார்த்தைகளைப் பேசி, கட்டுமரத்தில் நடுக்கடலுக்கு அழைத்துச்செல்வான். அங்கே மீண்டுவர முடியாத சுழலில் அவளைத் தள்ளிவிட்டுச் சாகடிக்க வேண்டும் என்பது அவனது திட்டம்.

இதைச் சற்றும் சிந்தித்துப் பார்க்காத சமுத்திரவல்லி, கணவனின் காதல் மொழிகள் தரும் சுகத்தை மறுக்க விரும்பாதவளாக அது தந்த போதையில் கடலின் ஆபத்தான பகுதிக்கு சாமுவேல் இட்டுச்செல்வதைக்கூட அறியாதவளாக மயங்கிக் கிடப்பாள்.

கடைசி நிமிடத்தில்தான் சாமுவேல் தன் வன்மத்தை வெளிப்படுத்துவான். அதைக் கேட்டுத் திடுக்கிடும் சமுத்திரவல்லிக்குப் பேரதிர்ச்சியாக இருக்கும். வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் தன் பிள்ளைகள் நினைவுக்கு வருவார்கள். அவர்களுக்காக அவள் உயிருடன் கரைக்கு மீண்டாக வேண்டும். சுதாரித்துக்கொள்ளவதற்கான நேரம்கூட அவளிடம் இல்லை. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அவளை அவன் சுழலுக்குள் தள்ளிவிடப் போகிறான். மரம் வலிக்கும் துடுப்பு அவன் கையில் இருக்கிறது.

அவனிடம் அழுது கெஞ்சுவதால் பயனில்லை. ‘கடல் தாயே காப்பாற்று’ என்று இறைஞ்சுகிறாள். கடல் தாய் அந்த அற்புதத்தை நிகழ்த்துகிறாள். சுழலில் தள்ளிக் கொல்லவும் தப்பிப் பிழைத்துக் கரை சேரவும் நடக்கும் போராட்டத்தில் சாமுவேல் சுழலுக்குள் விழுந்துவிடுகிறான். தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சுகிறான்.

இப்போது அவள் கையில் துடுப்பு இருக்கிறது. அவள் நினைத்தால் அதை நீட்டி அவனைக் காப்பாற்ற முடியும். ஆனால், அதிர்ச்சியில் சுய நினைவற்றவளாகக் கடலை வெறித்தபடி கட்டுமரத்தில் உட்கார்ந்துவிடுகிறாள். ஆரவாரமற்று தெளிந்து கிடக்கும் அந்தக் கடல் தன் சின்னசின்ன அலைகளால் கட்டுமரத்தைத் தட்டித்தட்டி கரைக்குக் கொண்டுபோய் சேர்க்கும். இதோடு நாவல் முடிந்திருக்கும். இந்த இடத்தில் முற்றுப்புள்ளியை வைக்கச்சொன்னவர் ரமேஷ். ஆனால், நான் எழுதியிருந்ததில் இன்னும் பதினைந்து பக்கங்கள் கூடுதலாக இருந்தன.

அந்தப் பதினைந்து பக்கங்களுமே அவள் மனதில் எழும் குற்றவுணர்வு குறித்தவை. ஒரு பெண் தன் கணவனை உயிர் பிழைக்கவைக்க வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாமல் எப்படி வரலாம், அதை இந்தச் சமூகம் அவளை எப்படிப் பார்க்கும்? கண்ணெதிரே கணவன் உயிருக்குப் போராடுவதைக் கண்டும் கல்மனதோடு எப்படித் தன்னால் வர முடிந்தது? அவன் கணவனாகவே இருக்க வேண்டாம்.

வேறு யாரோ ஒருவராக இருக்கட்டுமே. உயிருக்குப் போராடும் ஒருவரைக் கைகொடுத்துக் காப்பாற்றாமல் வருவது சரியா? அறச்சிந்தனையும் தர்ம நெறியும் மாறாத மக்களைக் கொண்ட ஆறுகாட்டுத்துறையில் பிறந்தவளா நான்? இதையா என் ஊரும் உறவுகளும் எனக்குக் கற்றுத்தந்திருக்கிறார்கள்? - இப்படியாக அவள் குற்றவுணர்வில் துடிப்பதைப் போல எழுதியிருப்பேன்.

“தமிழ், இந்தப் பதினைந்து பக்கங்களையும் உங்கள் நாவலிலிருந்து ஈவு இரக்கம் இல்லாமல் நான் வெட்டிப் போட்டதாக நினைத்துக்கொள்ளுங்கள். சமுத்திரவல்லிக்கு இப்படியொரு குற்றவுணர்வு தேவையில்லை. குண்டலகேசி கதை தெரியுமா உங்களுக்கு? அதில்வரும் சத்துவானுக்குக் கொஞ்சமும் சளைத்தவனல்ல இந்த சாமுவேல். அதில் தன்னைக் கொல்ல நினைத்த சத்துவானை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுத் தப்பிப்பாள் பத்தரை. ஆனால், நீங்கள் கடல் அன்னையைத் துணைக்கு அழைக்கிறீர்கள்.

கொல்லவும் பிழைக்கவுமான தள்ளுமுள்ளுப் போராட்டத்தில் சாமுவேல் தானே சுழலுக்குள் தவறி விழுந்துவிடுவதாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு வஞ்சகனைக் கொல்வதில் உங்களுக்கு எதற்கு இவ்வளவு தயக்கம்? ஆணை எப்போதும் நீங்கள் ஒரு பரிசோதனைக் கூடத்து எலி மாதிரியெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டாம். அவன் நல்லவனா, கெட்டவனா என்பது போல ஆய்வுபண்ண வேண்டிய அவசியமுமில்லை.

அவன் உங்களுக்கு உகந்தவனாக இல்லையா, விலக்கி விடுங்கள். உங்களுக்குத் தொந்தரவு தருபவனாக இருக்கிறானா அவன்மேல இரக்கமெல்லாம் காட்டாதீங்க. ஒரே அடில கொன்னுடுங்க” என்றார். அன்று அவர் பேசியது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஒரு ஆணாக இருந்துகொண்டு இவரால் இப்படிப் பேச முடிகிறதென்றால் இவர்தான் உண்மையான பெண்ணியவாதி என்று நினைத்தேன்.

அவர் மீதான மதிப்பு மனதில் இன்னும் சற்று உயர்ந்திருந்தது. இதைப்போலவே அவரை ஒரு தாயாக உணர்ந்த தருணங்களும்கூட எங்கள் குடும்பத்திற்குக் கிட்டியுள்ளன. அவர் இன்று நம்மோடு இல்லை. அவர் உதிர்த்த சொற்களும் அவை தந்த தெளிவும் என்றும் எங்களோடு இருக்கும். போய்வாருங்கள் ரமேஷ் பிரேதன் என்னும் தாயுமானவரே!

(நிறைவடைந்தது)

- thamizhselvi1971@gmail.com

SCROLL FOR NEXT