இலக்கியம்

வாழ்க்கையின் அர்த்தம் தேடுவோருக்கான நூல்

செய்திப்பிரிவு

தொழிற்புரட்சியை அடுத்து ஐரோப்பிய நாகரிகம் அடைந்த அதீத வளர்ச்சியும் வறட்டு அறிவியல் முன்னேற்றமும் ஒரு கட்டத்தில் உலகை இயந்திரகதியாக்கியது. வாழ்க்கையை இலகுவாக்கும் இடத்திலிருந்து அதிவிரைவாக மனித மனம் வெளிநடப்பு செய்தது. ஒருவரை ஒருவர் அழித்து ஆதிக்கத்தை நிலைநாட்டும் வக்கிரம் காற்றில் விஷம்போல் பரவியது. இதனால் அத்தனையும் அர்த்தமற்று போன வெறுமையை மனித இனம் உணரத் தொடங்கியது. அதுவரை உலகைத் தாங்கிப்பிடித்த சித்தாந்தங்களும் கோட்பாடுகளும் காகிதக் கட்டிடம்போல் மளமளவெனச் சரிந்து விழுந்தன.

இருத்தலின் உறுத்தல் மனிதர்களை வாட்டியது. நான் நானாக இருக்கின்றேனா? இருக்கத்தான் முடியுமா? என்பன போன்ற நூற்றுக்கணக்கான கேள்விக்கணைகள் மனதைத் துளைத்தன. உறங்கவிடாமல் துரத்தின. எதன் மீதும் நம்பிக்கை அற்ற ஊசலாட்ட நிலை உண்டானது.

இப்படி துயரத்தின் உச்சிக்கு மனிதர்கள் தள்ளப்படுவதைச் சுதாரித்து, அதையொட்டி பல கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான விடைகளைக் கண்டடைய முற்பட்ட தத்துவப்போக்கு இருத்தலியம். இதனை கோட்பாடு என்றழைப்பதைக்கூட இருத்தலியல் வாதிகள் விரும்புவதில்லை. தத்துவப்புலம், அரசியல் களத்திலிருந்து இலக்கியம், சிற்பக் கலை, சினிமா என பல ரூபங்களில் இருத்தலியம் படர்ந்து பரவியது.

இந்நிலையில், மனிதனின் இருப்பு, வாழ்க்கையின் அர்த்தம், மனித உறவுகளையும் வலிகளையும் ஆழமாக அலசி ஆராய்ந்த கீர்கேகார்ட், நீட்சே, சார்த்தர், காம்யு, தஸ்தாயெவ்ஸ்கி உள்ளிட்ட இருத்தலியலாளர்களின் சிந்தனா முறையின் சாரங்களைச் சுருக்கமாக அறிமுகம் செய்திருக்கும் நூல், ‘இருத்தலியம் ஓர் அறிமுகம்’.

ஓய்வுபெற்ற தத்துவத்துறை பேராசிரியர் இரா.முரளி, தத்துவம் குறித்த காணொலிகளை ‘சாக்ரடீஸ் ஸ்டூடியோ’ யூடியூப் சேனல் வழியாக வழங்கி வருகிறார். இருத்தலியம் குறித்து இவர் அளித்த விளக்கங்களுக்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக அவற்றின் விரிவாக்கம் தற்போது நூல் வடிவம் பெற்றிருக்கிறது. வாழ்க்கைக்கான அர்த்தப் பாட்டை தேடும் எவரும் தவற விடக்கூடாத நூல்.- ம.சுசித்ரா

‘இருத்தலியம் ஓர் அறிமுகம்’
இரா. முரளி
பரிசல் புத்தக நிலையம்
விலை: ரூ.185
தொடர்புக்கு: 93828 53646, 88257 67500

SCROLL FOR NEXT