இலக்கியம்

போர்க்கதைகளின் அணிவகுப்பு | நூல் நயம்

செய்திப்பிரிவு

ரஷ்ய சிறுகதைகள், பெரும்பாலும் போர்க்​கதைகளின் மொழிபெயர்ப்​பு இந்நூல். இத்​தொகுப்​பில் அலெக்ஸி டால்​ஸ்​டா​யின் ‘ருஷ்ய கதா​பாத்​திரம்’ கதையை குறிப்​பிட்​டுச் சொல்​லலாம். இச்​சிறுகதை போரின் வலியை, வாழ்​வின் இழப்​பை, தாயின் தவிப்பை நம்​முள் கடத்தி விடு​கிறது.

எகோர், இளைஞன். ராணுவ லெப்​டினென்ட்​டாக டாங்கி பிரி​வில் பணி​யாற்​று​பவன். போரில் அவனுக்கு நேர்ந்த பாதிப்பு நம் நெஞ்சை உலுக்​கு​கிறது. ஒரு​நாள், எதிரி​கள் அடி​வாங்​கி, புற​முதுகிட்டு ஓடும்​போது, டாங்​கிமீது தாக்​குதலை நிகழ்த்​தி​விட்டு ஓடு​கின்​றனர். குண்​டு​வீச்​சில் டாங்கி எரி​கிறது. டாங்கி டிரைவர், லெப்​டினென்ட்டை காப்​பாற்​றுகிறான். ஆனால் உடலில் தீக்​கா​யங்​கள்​... முகமே மாறி​விடு​கிறது.

சிகிசிச்​சைகள் எல்​லாம் முடிந்து எட்டு மாதம் கழித்து ஊருக்கு பெற்​றோரை, காதலியைக் காணச் செல்​கிறான். தீப்​பா​திப்​பு​கள் கண்டு பெற்​றோரும் காதலி​யும் பயந்​து​விடு​வார்​கள் எனக்​கரு​தி, பெயரை மாற்றி “எகோர் நண்​பன் நான்” எனக் கூறுகிறான். எகோரின் அன்பைத் தெரிவிக்க வந்​தத​தாக​வும் கூறுகிறான்.

மறு​நாளே விடை​பெறுகிறான். பதினைந்து நாட்​களில் அவன் தாய் அவனுக்கு கடிதம் எழுதுகிறாள், ‘மக​னே, உன் நண்​பன் என சொல்​லிக்​கொண்டு ஒரு​வன் வந்​தான். ஆனால் அவன் நடவடிக்​கைகள் உன்​னைப்​போலவே இருந்​தன. சொல் மகனே, வந்​தது நீதானே!’ என்​று... புகழ்​பெற்ற எழுத்​தாளர்​களான புஷ்கின், துர்க்​க​னேவ், டால்​ஸ்​டாய், தாஸ்​தாயெவ்​ஸ்​கி, செகாவ், கார்க்கி உள்​ளிட்​டோரின் கதைகளும் இந்​நூலில்​ அணிவகுக்​கின்​றன. - பால்நிலவன்

ருஷ்யக் கதைகள்
தமிழாக்கம்: நா.பாஸ்கரன்
விலை ரூ.350
முல்லை பதிப்பகம்,
தொடர்புக்கு: 9840358301

அன்பும் அறமும்: தனித்தனி சிதறல்களாய் உருவான, 40க்கும் மேற்பட்ட சிறுசிறு கட்டுரைகள் ஒருசேரத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு மனிதன் நேர்மையாக வாழ்வதற்கே உலகின் அமைப்புகள் உதவ வேண்டும். ஆனால், உண்மை அப்படி இல்லையே என்கிற நூலாசிரியர் மு.அஸ்வின் ரோம் பொன் சரவணனின் ஆதங்கம், நூல் முழுவதும் வெளிப்படுகிறது.

அன்பை போதிக்கவே ஆன்மிகம் என்ற நிலையில், மதங்களின் பெயரால் நடைபெறும் வன்முறைகள் பற்றி தனது கவலையை வெளிப்படுத்துகிறார். ஆயுதமேந்திய போராட்டங்களால் உலக மேம்பாட்டுக்கு எந்த நன்மையும் விளைவிக்க முடியாது என்று கூறும் நூலாசிரியர், மக்களைப் பிரித்து வைத்திருக்கும் அனைத்து வகையான தடைகளையும் தகர்த்து, அன்பும், அறமும் நிறைந்த மனித மனங்களால் மட்டுமே உலக மக்களை ஒன்றிணைக்க முடியும் என்று இந்நூலின் கட்டுரைகளில் கூறியுள்ளார். - பால்

எல்லைகள் இல்லா உலகம்
மு.அஸ்வின் ரோம் பொன் சரவணன்
விலை ரூ.300
ரோமரிஷி வெளியீடு
தொடர்புக்கு: 7550350468

மரபும் ஓவிய அழகும்: இந்தியாவின் முதல் நவீன நகரமான சென்னையில் மரபுத் தளங்கள் நிறைய உள்ளன. அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்வதும், அவற்றைப் பற்றி அறிய முயலும் ஆர்வமும் சமீப காலத்தில்தான் அதிகரித்துவருகின்றன.

இதற்கிடையே பல மரபுச் சின்னங்களை, கட்டிடங்களை இழந்துவிட்டோம். இப்படிப்பட்ட மரபுத் தளங்களை ஆவணப்படுத்தும் முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. ஒளிப்படம் மூலம் ஆவணப்படுத்துவது ஒரு முறை என்றால், ஓவியம் வழியே ஆவணப்படுத்துவது அதனினும் அழகுணர்ச்சி மிக்கது.

பாலச்சந்தர் எம்., யூசுப் மதியா ஆகிய இருவரும் இந்த நூலில் அந்தச் சின்னங்களை ஓவியங்களாகப் படைத்துள்ளனர். நீர்வண்ண ஓவிய முறையில் பாலச்சந்தர் உருவாக்கியுள்ள படைப்புகள் உயிர்ப்புடன் திகழ்கின்றன.

இதில் பல்வேறு மதச் சின்னங்கள், வரலாற்று நினைவிடங்கள், மரபுத் தளங்கள் என முக்கியமான 58 இடங்கள் இடம்பெற்றுள்ளன. ராயபுரம் நெருப்புக் கோயில், அடையாறு இசைக் கல்லூரி வளாகத்தில் உள்ள பழைய மெட்ராஸ் கிளப் கட்டிடம், லஸ் தேவாலயம் போன்ற பரவலாக அறியப்படாத சின்னங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. - அன்பு

சென்னை பாரம்பரியத்தின் வழிகாட்டி,
பாலச்சந்தர். எம். யூசுப் மதியா,
தமிழில்: கிருஷ்ண பிரபு,
எதிர் வெளியீடு,
விலை ரூ. 699

SCROLL FOR NEXT