பட்டியல் வடிவிலான தரவுகளை மட்டுமே கொண்டுள்ள இந்த நூல் தமிழில் அரிதான முயற்சி. கற்பித்தல், கல்வி நிறுவனங்களில் முக்கியமான பொறுப்புகளை வகித்தல், சொற்பொழிவு, நூல் எழுதுதல், பல்வேறு அமைப்புகள் மூலம் செயல்படுதல் எனத் தமது வாழ்வைத் தமிழர்களின் மேன்மைக்காகவே அமைத்துக்கொண்டவர் காலஞ்சென்ற க.ப. அறவாணன். அவரின் 50 ஆண்டுத் தமிழ்த்தொண்டுகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
1967லிலிருந்து 2017ஆம் ஆண்டு வரைக்கும் அறவாணன் செய்த பணிகளைப் பற்றிய விசாலமான பார்வையை இத்தொகுப்பு அளிக்கிறது. அவர் எழுதிய கட்டுரைகள், அவை வெளியான இதழ்கள், அவரது சொற்பொழிவுகளின் தலைப்புகள், அவை நிகழ்ந்த இடங்கள், ஏற்பாடு செய்த அமைப்புகள், அவரது வானொலி உரைகள் ஒலிபரப்பான நாள், நேரம் உள்ளிட்ட தரவுகளைக் காண்கையில் அறவாணன் என்கிற ஆளுமை மீது நமக்குக் கூடுதல் மரியாதை தோன்றுகிறது.
அறவாணனை நேர்காணல் செய்த பத்திரிகையாளர்களின் பெயர்களும்கூட இடம்பெற்றுள்ளன. தன் பணி விவரங்களைப் பராமரிப்பதில் அறவாணனுக்கு இருந்த கவனமும் இவற்றைத் தொகுப்பதில் அவரின் மனைவியும் தமிழறிஞருமான தாயம்மாள் அறவாணன் செலுத்திய உழைப்பும் நம்மை வியக்கச் செய்கின்றன.
தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் முதலானவற்றைப் படித்துப் பரப்புரை செய்வதில் அறவாணன் அடைந்த பெருமகிழ்ச்சி, ஒரு மானுடவியலாளராக மேற்கு ஆப்பிரிக்கர்களிடையே திராவிடச் சமூகத்தின் இயல்புகளைக் கண்டதில் அவருக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சி, தமிழர்கள் ஒரு சமூகமாகத் தோல்வி அடைய நேரும் சந்தர்ப்பங்கள் குறித்து அறவாணன் கொண்டிருந்த கவலை போன்றவை இதில் வெளிப்படுகின்றன. கல்விக்கடன் வழங்கப்படும் முறை இன்றும் விவாதத்தில் இருக்கும் சூழலில், ‘கல்விக் கடன் வழங்கும் அதிகாரத்தைக் கல்லூரி முதல்வர்களிடம் தர வேண்டும்’ என்கிற ஆலோசனையை இவர், 2007இல் முன்வைத்திருக்கிறார். - ஆனந்தன் செல்லையா
க.ப.அறவாணரின் 50 ஆண்டுத் தமிழ்த் தொண்டு (1967-2017)
தொகுப்பாசிரியர்: தாயம்மாள் அறவாணன்
தமிழ்க் கோட்டம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 95977 17485
செம்பதிப்புகள் குறித்த ஆய்வு: உலகின் மிகச் சிறந்த செவ்வியல் இலக்கியங்கள் கொண்ட மொழிகளில் ஒன்று தமிழ். சங்க இலக்கியம் என்று சுட்டப்படும் நூல் தொகுதிகளே இந்தப் பெருமைக்குக் காரணம். சங்க இலக்கியங்கள் வாய்மொழியாகவும், பிறகு ஓலைச்சுவடிகளில் பிரதியெடுக்கப்பட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டன. இப்படிப் பிரதியெடுக்கப்படும்போது, பிரதியெடுப்பவர்கள் செய்த மாற்றங்கள் பிரதிபேதம், பாடவேறுபாடுகளாக மேற்கண்ட இலக்கியங்களில் இருந்தன.
இந்தப் பின்னணியில் மூல நூலை அதன் இயல்புடன் வெளிக்கொண்டுவரும் முயற்சிகள், ‘செம்பதிப்பு’ என்கிற பெயரில் முன்னெடுக்கப்பட்டன. சில நூறு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தப் பணிகளின் பின்னணியில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றுடன் பத்துப்பாட்டு நூல்களின் செம்பதிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக ‘தமிழ்த்தடம்' இதழ் மலர்ந்துள்ளது. பேராசிரியர் இரா.அறவேந்தன் சிறப்பாசிரியராகச் செயல்பட்டு இந்த இதழைக் கொண்டுவந்துள்ளார். - நேயா
தமிழ்த்தடம் (8) செம்பதிப்புச் சிறப்பிதழ்
பரிசல் வெளியீடு
விலை: ரூ.180
தொடர்புக்கு: 88257 67500
சமகால சினிமாவின் மினி கையேடு: டிஜிட்டலுக்கு மாறிவிட்ட பிறகு, சினிமா அனைவரின் கைகளுக்கும் அடக்கமாக வந்துவிட்டது. மொபைலில் படம் பார்க்கத் தொடங்கி விட்டார்கள், பார்வையாளர்கள். பெருகிவிட்ட ஓடிடி தளங்களும் கணக்கிலடங்காத திரைப்படங்களை அதில் குவித்து வைத்திருக்கின்றன. கரோனாவுக்கு பிறகு, திரைப் படங்களுக்கு மொழி தாண்டியும் வரவேற்பு இருப்பதால், எதைப் பார்க்கலாம், எதை தவிர்க்கலாம் என்கிற குழப்பம் ஏற்படுவது நியாயமானதுதான்.
அந்தக்குறையை போக்கும்விதமாக, தான் பார்த்து ரசித்த பல்வேறு மொழித் திரைப்படங்களை இந்தப் புத்தகத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார், திரைப்பட இயக்குநர் ஜோசப் டி’சாமி (ஜேடி). நீண்ட கட்டுரையாக இல்லாமல், ஒவ்வொரு திரைப்படம் மற்றும் வெப் தொடர்கள் பற்றிய கதை சுருக்கம், அதில் என்ன சுவாரஸ்யம் என்கிற எளிய அறிமுகமாக எழுதப்பட்டுள்ள இதில், தமிழ்ப் படங்களை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார்.
250 திரைப் படங்களைப் பற்றிய அறிமுகம் கொண்ட இப்புத்தகத்தில், ஆங்கிலம், கொரியா, மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களுடன் உலக கிளாசிக் திரைப்படங்கள் பற்றிய விவரங்களும் இருக்கின்றன. முன்னுரையில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமி கூறியிருப்பதைப் போல, இந்நூல் சமகால உலக சினிமாவின் மினி கையேடாகவே இருக்கிறது. - அழகு
ஓடிடி சினிமா -சில பதிவுகள்
ஜோசப் டி’ சாமி
ஜேடி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 87545 07070
மணிரத்னம் சினிமா: மாற்றுப் பார்வை: தமிழ்நாட்டின் நவீன கால முக்கிய இயக்குநராக மணிரத்னம் முன்வைக்கப் படுகிறார். ஊடகங்கள், வெகுமக்கள் சினிமா விமர்சகர்கள் அவரைப் பெரும்பாலும் கொண்டாடுகின்றனர். அவரது திரைப் பங்களிப்பு குறித்து ஆங்கிலத்தில் விதந்தோதும் நூல்கள் வந்திருக்கின்றன. ஆனால், அவருடைய அனைத்துத் திரைப்படங்கள் குறித்த மதிப்பீடுகள் வெளிவரவில்லை. அதை இந்த நூலில் மேற்கொண்டிருக்கிறார் யமுனா ராஜேந்திரன். மணிரத்னத்தின் படங்கள் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டவையாக முன்வைக்கப்படுகின்றன.
அதேநேரம், அந்தத் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு கேளிக்கையாக மட்டும் இல்லாமல், என்ன உணர்வுகளைக் கடத்தின என்பது குறித்து பெரிய விவாதங்கள் நடைபெறவில்லை. மணிரத்னத்தின் காதல் படங்கள் பிரபலமடைந்தாலும் அரசியல் மையக்கருக்களைக் கொண்ட படங்கள் காரணமாகவே தேசிய அளவிலும் ஓரளவுக்கு சர்வதேச அளவிலும் அவர் அறியப்பட்டிருக்கிறார். அந்த வகையில் மணிரத்னம் படங்கள் என்னவிதமான கருத்தியல் அடிப்படைகளைக் கொண்டிருந்தன, மக்களிடையே எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்று இந்த நூலில் உள்ள கட்டுரைகள் அலசுகின்றன.- அன்பு
மணிரத்னம்: அழகியலும் கருத்தியலும்,
யமுனா ராஜேந்திரன்,
உயிர் வெளியீடு,
விலை: ரூ.360
தொடர்புக்கு: 98403 64783