‘மாற்றத்திற்கான எழுத்துழவு’ எனும் முழக்கத்தோடு அரையாண்டு இதழாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து வெளிவரும் இதழிது. தமிழ் அறிவுசார் செயல்பாட்டு மரபின் தொடர்ச்சியாக வந்துள்ள இந்த இதழில், காத்திரமான கருப்பொருள்களை உள்ளடக்கமாகக் கொண்ட படைப்புகள் இதழெங்கும் நிறைந்துள்ளன.
‘படைப்புகள் நிலத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்க வேண்டும்’ என்று சொல்லும் எழுத்தாளர் சோ.தர்மனின் மிக நீண்ட நேர்காணலோடு தொடங்கி , இருபதுக்கும் மேற்பட்ட ஆழமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் ஓலைச்சுவடிகள் அழிக்கப்பட்டு வரும் அவலத்தைச் சொல்லும் நாக.இளங்கோவனின் கட்டுரை, பஞ்சமி நிலங்கள் தொடர்பான குணாவின் கட்டுரை, வேளாண் சூழலியலோடு வாழ்வியல் பின்புலத்தை அலசும் சு.வேணுகோபாலின் கட்டுரை, ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் அமரந்தாவின் கட்டுரையும் தனித்து கவனிக்கத் தக்கவையாக உள்ளன.
மு.மகேந்திரபாபு, வெற்றிச்செல்வன், தங்கேஸ், அய்யனார் ஈடாடி உள்ளிட்டோரின் சிறுகதைகளும், சி.மோகன், தீபச்செல்வன், வெய்யில் உட்படபலரின் கவிதைகளும் அடர்த்திமிகு இதழாக்கியுள்ளன. எழுத்தாளர் மகாராசனை முதன்மை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இந்த இதழில், மொழிபெயர்ப்புக் கவிதைகளும் நூல் அறிமுகங்களும் இடம்பெற்றுள்ளன. - மு.முருகேஷ்
ஏர் - அரையாண்டு இதழ்
தனி இதழ்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 9080514506
திண்ணை | மதுரை புத்தகத் திருவிழா 2025: மதுரை புத்தகத் திருவிழா செப்டம்பர் 5 முதல் 15ஆம் தேதி வரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. பள்ளிக் கல்வித்துறை, பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடந்தும் இந்தப் புத்தகத் திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட முன்னணிப் பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை வாசகர்கள் புத்தகத் திருவிழாவைக் காணலாம்.
இந்தப் புத்தகத் திருவிழாவின்போது தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்கும் ‘சிந்தனை அரங்கம்’ நடைபெற உள்ளது. ‘இந்து தமிழ் திசை' பதிப்பகத்தின் நூல்கள் அனைத்தும் 142வது அரங்கில் கிடைக்கும். அனைத்து நூல்களுக்கும் வாசகர்களுக்கு 10 சதவீதம் சிறப்புக் கழிவு வழங்கப்படும்.
சீர் விருது விழா: சீர் வாசகர் வட்டத்தின் 2025ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா 07-09-2025 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு ஈரோடு வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள மல்லிகைஅரங்கில் நடைபெற உள்ளது. பெரியாரின் குடியரசு நூல் தொகுப்புப் பணிகளுக்காக, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள இந்த விருது வழங்கப்பட இருக்கிறது.
இந்நிகழ்வின்போது, காம்ரேட் கேங்ஸ்டா குழுவினரின் பாப் இசை நிகழ்ச்சி, இயக்குநர் நேகாவின் திரு.Queer என்ற நவீன நாடகம், கொளத்தூர் மணி பற்றிய The Man of Masses என்ற ஆவணப்பட வெளியீடு, ‘கொளத்தூர் மணி பேச்சும் எழுத்தும்’ என்ற தலைப்பில் இரு தொகுதிகளின் நூல் வெளியீடு ஆகியவை நடைபெறும். இந்நிகழ்வில் பேராசிரியர் வீ.அரசு உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
வள்ளியப்பா இலக்கிய வட்ட அறிவிப்பு: கடந்த 2022, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் வெளியான குழந்தைகளுக்கான சிறந்த அறிவியல் சிறுகதை நூல் தேர்வு செய்யப்பட்டு, வள்ளியப்பா இலக்கிய விருதும், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் நூலின் 3 பிரதிகளை அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, குன்றக்குடி அடிகளாரின் இலக்கியப் பணி அல்லது குன்றக்குடி அடிகளாரின் சமுதாயப் பணி ஆகிய தலைப்புகளில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது.
இதில் ஏதேனும் ஒரு தலைப்பில் ஏ4 அளவு தாளில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும். அனுப்ப வேண்டிய முகவரி: தேவி நாச்சியப்பன், குழந்தைக் கவிஞர் இல்லம், 3/ 628, 9ஆம் வீதி வடக்குப் பிரிவு, சுப்பிரமணியபுரம், காரைக்குடி - 630003.