இலக்கியம்

கெவருமெண்டு வேலை! | அகத்தில் அசையும் நதி 27

சு.தமிழ்ச்செல்வி

கொளஞ்சியம்மாள் ஆயா தன் மகனை இழந்த துக்கத்தி லிருந்து மீள முடியாமல் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். அன்று நடந்த அத்தனை விஷயங்களையும் என்னிடமும் ஒருமுறை சொல்லி அழுதால்தான் தீரும் என்பதுபோல சொல்லிக் கொண்டிருந்தார்.

“ஒத்த புள்ளையின்னு நான் ஓவியமா வளர்த்தேம்மா. அவன் செத்துக் கெடக்கயில அவன் தலமாட்டுல குந்தி அழ முடியலம்மா...” என்னது புள்ளை பக்கத்துல உட்கார்ந்து அழக்கூட முடியலைன்னு சொல்லது. யாரு தடுத்திருப்பாங்க? அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்றபோதும் ஆயாவே சொல்லட்டுமென்று எதுவும் குறுக்கிட்டுக் கேட்காமல் இருந்தேன்.

“என்ன யாரும் தடுக்கலேம்மா. பாழாப்போன பணம் மட்டும் இருந்திருந்தா எந்தங்கத்தத் தொட்டு அழுதிருப்பேன். அவன்மேல கட்டி பொரண்டிருப்பேன். நெஞ்சுல முட்டி களைச்சிருப்பேன்.” “என்னாச்சிது ஆயா?” பொறுத்திருக்க முடியாமல் கேட்டுவிட்டேன். “யம்மா, என்னோட இந்த தொயரம் யாருக்குமே வரக் கூடாதும்மா. அவன் குடிச்ச சரக்கு வெஷமாயி ஈரல் வெடிச்சி செத்தான்னு சொல்லியில்லொ என் வாசலுல கொண்டுவந்து போட்டாங்க.

எம்புள்ள ஒடம்புக்குள்ள பூதம்தான் பூந்துச்சிதோ என்னமோ தெரியலம்மா. நெறம் கறுத்து ஒடம்பு ஊதிகிட்டே போவுதும்மா. வெடிச்சிருமோங்குற மாதிரி மினுமினுன்னு இருக்கு. பாக்குற சனம் பயந்து கிட்டவர மாட்டங்குது. ‘இதப் போட்டு வைக்கக் கூடாது. ஒடனவே தூக்கிறணும்’னு சொல்றாங்க. எங்கையில பத்து பைசாகூட இல்லம்மா.

பொணத்தத் தூக்கணும்னா இருவத்தஞ்சாயிரமாவது வேணுங்குறாங்க. அவ்வளவு பணத்துக்கு நான் எங்கம்மா போவேன்? புள்ள போயிட்டானேன்னு அழுவுறத விடவும் அவனத் தூக்கிப் போட பணமில்லையேன்னுதாம்மா நான் அந்த நேரம் அழுதேன்.

மனசார சொல்றேம்மா மகன் செத்துக் கெடக்குறான், அவன் தலைமாட்டுல ஒக்காந்து அழாம வீடு வீடா ஓடுனம்மா. ஊருக்குள்ள இருக்குற காசுகார மகராசனுங்க கால்ல எல்லாம் உழுந்து கையேந்தி நின்னேம்மா. ‘ஐயா எம்மவன் செத்துப்போயிட்டான்யா. அவன அடக்கம் பண்ண பணம் கொடுங்க. நான் திருப்பிக் கொடுத்திடுவேன்’னு கெஞ்சினேம்மா. அஞ்சிம் எட்டுமா நாலஞ்சி பேரு கொடுத்தும் ஒதவுனாங்க. ஆனா என்ன.. காசோட வந்து பாத்தா எம்புள்ளய பாடயில ஏத்த என்ன எதிர்பாத்து ரெடியா இருக்காங்கம்மா.

குளிப்பாட்டவும் இல்ல ஒண்ணும் பண்ணல. தண்ணிய தெளிச்சி பேருக்கு சாங்கியம் பண்ணி எம்புள்ளய கொண்டு போயிட்டாங்கம்மா. அவன் மொகத்தகூட நான் கண்நெறஞ்சி காணலம்மா. பெத்த வயிறு பதறுதும்மா.

இனி எப்பம்மா எம்புள்ளய தொட்டுப்பாக்கப்போறன், கன்னம் வழிக்கப்போறன், கட்டி கொஞ்சப்போறன்...” கண்ணீர் பெருக அழுதுகொண்டிருந்தார் கொளஞ்சியம்மா ஆயா. என் கண்களிலிருந்தும் கண்ணீர். ஆயாவைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவர் கைகளை மட்டுமே பற்றிக்கொள்ள முடிந்தது. “பள்ளிக்கொடத்து வேலைக்கி போற.

கையில காசில்லாம எப்புடி இருக்குற? வச்சிக்கிட்டு பஞ்சவேஷம் கட்டுறியா, பொய் சொல்றியா, ஏமாத்துறியான்னு ரோஷ ரோஷமா தெருவுல எல்லாரும் கேக்குறா ளுங்கம்மா. ஒங்களுக்கே தெரியும்.

எனக்குப் பள்ளிக் கொடத்துச் சம்பளம் எவ்வளவும்மா வருது? மாசத்துக்கு நூத்தி இருவது ரூபா. வருசத்துக்கு ஒரு தடவதான் சம்பளம். அதுவும் பதினோரு மாசச் சம்பளம்தான். மொத்தமா ஆயிரத்து முன்னூத்தி இருவது ரூவா. இத வச்சி நான் ஒரு வருசத்த ஓட்டணும். நல்லது கெட்டது செய்யணும். கோயிலு கொளத்துக்குப் போவணும். போதுமாம்மா இந்தச் சம்பளம்.

ஏதோ புண்ணியத்துக்கு எறங்கி நீங்க மாசா மாசம் ஒங்க கைகாசுல எனக்கும் செலவுக்குத் தர்றீங்க. பொங்க, தீவாளிக்குத் துணிமணி எடுத்துத் தாறிய. இல்லயின்னா என்ன பண்ண முடியும் சொல்லுங்க. ஊருல ஒருத்தி தவறாம எல்லாரும் மகளிர் பணம் மாசம் ஆயர்வா வாங்குறாளுங்க. எனக்கு வருதா? ‘யாம்பேரையும் எழுதிவுடு சாமி. நானும் மகளிர்தான’ன்னு அந்தப் பயலுககிட்ட தலைகீழா நின்னு தண்ணி குடிச்சிப் பாத்துட்டேன். முடியாதுன்னுட்டான்.

‘நீ கெவர்மண்டு சம்பளம் வாங்குற. ஒனக்குக் கெடைக்காது’ன்னுட்டான். ஊட்டுல ஒக்காந்து ஊருகத பேசுறவ எல்லாம் மாசம் ஆயர்வா வாங்குறாளுங்க. நான் ஒரு நாளுவிடாம மாங்கு மாங்குன்னு மூணு கட்டடம் கூட்டி வாரிகொட்டிபுட்டு மாசத்துக்கு நூத்தி இருவது ரூவா வாங்குறன்.

அதான் அவளுவளுக்கு என்னயக் கண்டா அவ்வளவு எளக்காரமா போவுது. மூணு கட்டடத்துலயும் சேத்து ஏழு ரூமு. மேசைய நகத்தி, டெஸ்க தள்ளி கூட்டி வாறதுக்குள்ள இடுப்பு எலும்பு இத்துப் போவுது. கணக்குப் பண்ணுனா நாளு ஒண்ணுக்கு நாலு ரூவாத்தான் சம்பளம். ஒரு டீ குடிக்கிறதுன்னாக்கூட இன்னக்கி பத்து ரூவா வேணும்.

நாலு ரூவா சம்பளத்த வாங்கி அதையும் நான் சேத்து வைக்கணுமாம். பள்ளிக்கூடத்தக் கூட்டித் தள்ளிட்டு வந்துடுவேன். நூறு நாளு வேலக்கி எனக்கும் அட்ட கொடுங்கடான்னு கெஞ்சி கூத்தாடிப் பார்த்திட்டேன். ‘நீ கெவுருமெண்டு சம்பளம் வாங்குற, ஒனக்கு நூறு நாளு வேலை திட்டத்துல அட்டையும் கெடையாது வேலையும் கெடையாது’ன்னுட்டானுங்க. வேற வருமானத்துக்கு நான் என்னதான் செய்வேன் சொல்லுங்க. வூட்டுகாரன் செத்துத் தாலியறுத்தா விதவைங்க பணமுன்னு எல்லாருக்கும் வருதாம்.

எனக்கு அதையும் வாங்கித்தர மாட்டேன்னுட்டாய்ங்க. கேட்டா, ‘கெவுருமெண்டு சம்பளம் வாங்குறே. ஒனக்குக் கெடையாது’ங்குறாய்ங்க. கெவுருமெண்டு வேலைன்னா நான் என்ன கட்டுக்கட்டாவா சம்பளம் வாங்குறேன். இதயெல்லாம் எடுத்துச் சொன்னா அதுக்கும் ஒரு நொடிப்பு காட்டுறாளுங்கம்மா.

‘நீ சோத்துக்குச் செத்தவ மாதிரி பள்ளிக்கொடத்து சோத்த வாங்கித் தின்னுட்டு பள்ளிக்கொடமே கெதின்னு கெடந்தா எங்கேருந்து வரும் சம்பாத்திய’முன்னு கேவலமா பேசுறாளுங்கம்மா. யான்டா இந்த உசுர வச்சிக்கிட்டுக் கெடக்குறோமுன்னு இருக்கும்மா.”
“அப்புடியெல்லாம் சொல்லாதீங்க ஆயா.”

“வாழவேண்டிய வயசுல யாம் புள்ளயே போயிட்டான். நான் இருந்து என்ன செய்யப்போறன்னு வருதும்மா. நாலஞ்சி பேருகிட்ட கைநீட்டி பணம் வாங்கிட்டேன். எப்புடியாவுது வாங்குன கடனைத் திருப்பிக் கொடுத்திடணும். அது ஒண்ணு மட்டும்தான் எனக்கு இப்ப. அது மட்டும் இல்லயின்னா யாம்புள்ள போன எடத்துக்கே நானும் போய்ச் சேர்ந்துருவேன்.” ஆயாவுக்கு எந்த ஆறுதலையும் என்னால் சொல்ல முடியவில்லை. ஏதாவது உதவி என்று கேட்டாலாவது செய்யலாம். பணமாகக் கொடுத்தால் வாங்கிக்கொள்ளும் ரகமில்லை.

“ஆயா, இந்தக் கடனை அடைக்க என்ன செய்யப் போறீங்க?” “அதாம்மா எனக்கும் தெரியல. யோசிக்க முடியாத நெலமயில கடன வாங்கிட்டேன். இப்ப தெக்குதெவ தெரியாதவ மாதிரி முழுச்சிக்கிட்டு நிக்கிறேன்.” “ஆயா நான் ஒரு யோசனை சொன்னா கேப்பீங்களா?” “சொல்லுங்கம்மா. “முப்பது முடிஞ்சிச்சா?” “இன்னும் இல்லம்மா. இன்னக் கோட இருவது நாளுதாம்மா ஆவுது.” “சரி, முப்பது முடிஞ்சதும் வீட்டு வேலைக்கு வர்றீங்களா? எங்க வீட்டுக்குத்தான். மாசம் மூவாயிரம் சம்பளம்.”

“வேற யாரோ செய்றாங்கன்னு சொன்னீங் களேம்மா?” “அவங்க வேற எடத்துக்குப் போயிட்டாங்க. நானும் ஊருக்குப் போயிருந்தேன். நாங்க ரெண்டு பேரு மட்டும்தான. நானே பாத்துக்கலாமுன்னு இருந்தேன். நீங்க வாங்காயா. வேல ஒண்ணும் செரமமா இருக்காது.” “அய்யோ வேலக்காவல்லாம் பயப் படலம்மா. நான் வர்றேன். எனக்கு ஒரு வழிய காட்டுறீங்க. நீங்க நல்லா இருப்பீங்கம்மா.”

“காலையில வரும்போது மட்டும் பஸ்ல வந்துட்டீங்கன்னா போதும். திரும்பி வரப்ப என்னகூட வண்டிலயே வந்திடலாம்.” “சரிம்மா நான் வந்தர்றேன்.” மகனை இழந்த சோகத்தைத் தாண்டியும் ஆயாவின் முகத்தில் சிறியதொரு நம்பிக்கையின் இழை படர்ந்திருந்தது.

(நதி அசையும்)

- thamizhselvi1971@gmail.com

SCROLL FOR NEXT