‘பாரதி தினத்தை ஒட்டி பாரதியைப் பற்றி நான் கண்டறிந்த உண்மைகளைக் கட்டுரை வடிவில் வழங்கி வருவதை ஒரு கடமையாகவே மேற்கொண்டு வந்துள்ளேன்’ என ‘பாரதி - சில பார்வைகள்’ நூலுக்கான முன்னுரையில் கூறுகிறார் எழுத்தாளர் தொ.மு.சி. ரகுநாதன். வாழ்நாள் முழுதும் அவரை ஆட்கொண்டுவிட்ட ஆளுமையாக பாரதியார் இருந்தார்.
1982இல் பாரதியின் முதல் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட நேரத்தில் இந்நூலின் முதல் பதிப்பு வெளியானது. இதில் உள்ள 11 கட்டுரைகள் மூலமாக, புதிர்போலத் தோற்றமளிக்கும் பாரதியின் சில படைப்புகளுக்குப் பிந்தைய – நாம் அறியாத காரணிகளை ரகுநாதன் சுவைபட முன்வைக்கிறார்.
பாரதியின் படைப்புத்திறன் குறித்த பல்வேறு பரிமாணங்களைத் தமிழ்ச் சமூகம் ஓரளவுக்கு இன்று உள்வாங்கியுள்ளது. மக்கள் மனதில் பாரதி என்கிற பெயர் நுழைந்த அளவுக்கு, வீடுகளில் அவரது நூல்கள் நுழையாமல் இருந்த காலத்தில் பாரதியின் சிறப்புகளையெல்லாம் ஆய்வுக்கட்டுரைகளாகப் பதிவு செய்தவர்களில் முதன்மையானவர் ரகுநாதன்.
பாண்டவர்கள் கவுரவர்களின் சூழ்ச்சியால் துயருற்றதும், எழுச்சிக்குப் பிறகு கவுரவர்களைப் போரில் வென்றதும்தான் மகாபாரதக் கதையின் வடிவமாகக் காலங்காலமாக இருந்து வருகிறது.
‘துன்பத்திலிருந்து இன்பத்துக்கு’ என்கிற தடத்தில்தான், தமிழில் வெளிவந்த பல காப்பியங்களும் கதை சொல்லும் முறையைக் கையாளுகின்றன. மகாபாரதம் இயற்றிய வியாசரும், அதைத் தமிழில் இயற்றிய ஸ்ரீவில்லிப்புத்தூரார் போன்றோரும் வனவாசம் சென்ற பாண்டவர்கள் இறுதியில் நல்வாழ்வு பெற்றதோடு கதையை நிறைவு செய்கின்றனர்.
பாரதியார் இயற்றிய ‘பாஞ்சாலி சபதம்’ இதற்கு விதிவிலக்காக இருக்கிறது. பாரதியாரின் அணுகுமுறை, அர்ச்சுனனும், பாஞ்சாலியும் சூளுரைப்பதோடு கதையை முடித்து வாசகர்களுக்கு ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இதற்குப் பின்னால் உள்ள பாரதியாரின் முதிர்ந்த பார்வையை ரகுநாதன் ‘முடியாத கதை’ என்கிற கட்டுரையில் கூறுகிறார்.
‘கரும்புத்தோட்டத்திலே- அவர்/கைகளும் கால்களும் சோர்ந்து விழும்படி /வருந்துகின்றனரே’ என்கிற பாடல், பிஜி தீவுக்கு ஒப்பந்தக் கூலிகளாகக் கூட்டிச் செல்லப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் விலங்குகள்போல நடத்தப்பட்ட நிலையைக் கூறுகிறது.
பாரதியாரை இப்பாடலை எழுதச் செய்த அரசியல் சூழல் ‘கரும்புத் தோட்டத்திலே’ என்கிற கட்டுரையில் விவரிக்கப்படுகிறது. இது பாரதி உலகளவிலான அரசியல் பார்வையையும், எல்லைகள் கடந்த மனித நேயத்தையும் கொண்டிருந்ததைக் கூறுவதோடு, ஒப்பந்தக் கூலிமுறை ஒழிப்புக்காக முதலில் காந்தியடிகள் கையில் ஏந்திய ஜோதி, கோபாலகிருஷண கோகலே கைகளுக்கு மாறி, இறுதியில் சி.எஃப். ஆண்ட்ரூஸிடம் நிலைகொண்டதையும் ஒரு புதினம்போலச் சித்திரிக்கிறது. - ஆனந்தன் செல்லையா
பாரதி சில பார்வைகள்
தொ.மு.சி.ரகுநாதன்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 98409 52919
ஆழி விழுங்கிய ‘குட்டி சிங்கப்பூர்’ - பாட்டாளியாக வாழ்க்கையின் முற்பாதியைக் கழித்த முதியவர் கருப்பையாவின் நினைவலை ‘பேரலையின் சாட்சியம் (1964, டிசம்பர் 23)’. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் கதை, கடலோர கவிதை பாடும் தனுஷ்கோடிக்கு இரவோடு இரவாக நம்மைக் கடத்திச் செல்கிறது.
உப்புக்காற்றின் வாசம் நாசியைத் துளைக்க, ஒவ்வொரு பக்கத்தையும் புரட்ட நேரிடுகிறது. புனைவின் ஊடே கடலுக்குள் மூழ்கிய வரலாற்றை 95 பக்கங்களே கொண்ட இந்தக் குறுநாவல் நம் மனத்தில் ஆழப் பதித்து விடுகிறது.
காதலின்றி கதையா? “கருவக்காட்டுல வீசுற வெப்பக் காற்றை சுவாசிச்ச எனக்கு இதமான கடல் காற்றோடு தென்றல் வீசுனது மாதிரி இருந்துச்சு... இந்த உலகத்தில் என்னை நேசித்த முதல் மனுஷி” என்கிற நாவலாசிரியர் கு.காந்தியின் வர்ணனையால், நம்மை அறியாமல் உள்ளுக்குள் காதல் கொப்பளிக்கிறது.
கடந்த காலத்தில் மிதந்து கொண்டிருக்கும்போதே கதையோட்டத்தை இடைமறித்து நிகழ்காலத்துக்குச் சட்டென அவ்வப்போது அழைத்துவரும் உத்தியை நாவலாசிரியர் கையாண்டிருக்கும் விதம் அடுத்தது என்ன என்கிற சுவாரசியத்தைக் கூட்டுகிறது.
‘குட்டி சிங்கப்பூர்’ என்பதாக ஆங்கிலேயர் காலத்தில் கோலோச்சிய தனுஷ்கோடி, இன்று அதே வனப்புடன் நீடித்திருந்தால் தமிழ்நாடு மேலும் எட்டியிருக்கக்கூடிய பாய்ச்சலை எண்ணி, ஏக்கப் பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை. அட்லாண்டிக் பெருங்கடலில் மிதந்த ராட்சதப் பனிப்பாறையில் மோதி, 1,500 பேரின் உயிரைக் குடித்த டைட்டானிக் சொகுசு கப்பல் விபத்தை உலகறியச் செய்தது ‘டைட்டானிக்’ திரைப்படம்.
அதுபோலவே, ஒரு கடல் கிராமத்தையும், அதில் வாழ்ந்த 1,800க்கும் மேற்பட்ட உயிர்களையும் ஒரேயடியாக விழுங்கிய 1964-ம் ஆண்டு நிகழ்ந்த ஆழிப்பேரலை பெருந்துயரை, ரத்தமும் சதையுமாக உணரும்படி செய்கிறது ‘பேரலையின் சாட்சியம்’. - ம. சுசித்ரா
‘பேரலையின் சாட்சியம் (1964, டிசம்பர் 23)
கு.காந்தி
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 044-24332924
கவிதை போன்ற கதைகள்: கவிதை, நாவல், சிறுகதை என பன்முகம் கொண்டவர் எழுத்தாளர் நர்சிம். சமீபத்தில் இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு ‘சொம்புநீர்ப்பூ. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளின் தலைப்பே வாசகர்களைக் கவரக்கூடியதாகப் பழந்தமிழ்ச் சொற்களில் இருக்கிறன. நர்சிம் இயல்பில் ஒரு கவிஞர் என்பதால், கவிதைக்குரிய பண்புகளுடன் பல கதைகள் எழுதப்பட்டுள்ளன. பேரிளம் பெண்ணோடுக் கடலை ஒப்பிடும் அதே நேரத்தில் குழந்தையின் கொட்டாவியையும் கடலோடு ஒப்பிடும்பக்கங்களை வாசிக்கும்போது இதனை உணரலாம்.
தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகளும் ஒன்பது கதைக் களத்தைக் கொண்டுள்ளன. ‘நுரை’ சிறுகதையில் நீர்க் குமிழிகளையும், பாம்பு தீண்டியதால் வரும் நுரையினையும் ஒருசேர சிறுவனின் மனதில் காட்சிப்படுத்தியது குறும்படத்திற்கு இணையானதாக உள்ளது. ‘குழி’ சிறுகதையில் வெளிப்படும் சமகாலத் தன்மை சிறப்பாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அலுவலக வாழ்க்கையைப் பற்றியும் நவீன காலயுகத்தைப் பற்றியும் காதாப்பாத்திரங்கள் வாயிலாகவே பேசியிருப்பது சிறப்பு. - சு. தீபிகா
சொம்புநீர்ப்பூ
நர்சிம்
எழுத்து பிரசுரம், சென்னை
விலை: ரூ100
தொடர்புக்கு: 89250 61999