இலக்கியம்

ஆளுக்கொரு நியாயம் | அகத்தில் அசையும் நதி 23

சு.தமிழ்ச்செல்வி

மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை ஏதோவொரு காரணத்தைச் சொல்லி அந்தப் பெண் காவலர் கைபேசியில் என்னைக் கூப்பிட்டுப் பேசிக்கொண்டே இருந்தார். மறுநாள் காலை வீட்டுக்கே வந்து அழைத்துச் செல்வதாய்த் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.

என்னுடைய இருப்பையும் மறுநாள் என்னுடைய நீதிமன்ற வருகையையும் உறுதிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பது அவருக்கு விதிக்கப்பட்ட ஆணையாக இருக்கலாம் என்று தோன்றியது. இதற்கிடையே செல்வராசு தரப்பிலிருந்து கரடுமுரடான ஆட்கள் சிலர் சற்று மிரட்டும் தொனியில் பேச ஆரம்பித்திருந்தார்கள்.

“நாங்க எல்லாம் ஒரே சாதி, ஒண்ணுக்குள்ள ஒண்ணு. எங்களுக்குள்ள நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். நாங்களே பேசி சரிபண்ணிப்போம். நீங்க எங்களுக்கு எதிரா எதையுமே சொல்லக் கூடாது” என்றார் ஒருவர். “உண்மையச் சொல்றேன் அது இதுன்னு எதையாவது கோட்டுல போயி சொல்லி வச்சிட்டா அப்பறம் நடக்குறதே வேற. எங்களுக்கு எதிரா சாட்சி சொல்லிட்டுத் திரும்பவும் வந்து எங்க ஊருலயேதான வேலபாக்கணும்” என்கிற விதமாக முகத்தைக் காட்டாமல் கைபேசியில் மிரட்டிக்கொண்டிருந்தார்கள்.

செல்வராசு தரப்பினர் சொல்வதுபோலத் தேதியை மாற்றிச் சொல்லிவிட்டு நமக்கேன் வம்பு என்று இருந்துவிடலாமா என்றுகூடத் தோன்றியது. பெண்ணின் அண்ணன்கள், அப்பா எல்லாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஒரு விஷயத்தை நாம் மட்டும் ஏன் பெரிதாகக் கருதவேண்டும் என நினைத்தேன். ஆனால், ஆனந்தி பாவமில்லையா? அந்தப் பெண்ணுக்காக யோசிக்க அவளுடைய அக்கா கணவனைத் தவிர யாருமில்லையே என்று நினைக்கும்போது அவள்மீது பரிதாபம் ஏற்பட்டது.

ஆனந்தி பக்கம் நின்று அவளுக்கான நியாயத்தைச் செய்ய பெரிதாய்ச் சிரமப்பட வேண்டிய அவசியமும்கூட இல்லை. உண்மையை மட்டும் சொன்னாலே போதும். அதைச் சொல்லும் துணிச்சல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே போவதற்கு காரணம் என்னவாக இருக்கும்? ஊருக்குள் வந்து ஒழுங்காய் வேலைபார்த்துவிட்டுத் திரும்பிச் செல்ல முடியாது என்கிற மிரட்டலுக்கு பயந்துவிட்டேனா அல்லது செல்வராசுவின் மனைவி பிள்ளைகளைப் பார்த்து மனம் இரங்கிவிட்டேனா? ஒருபக்கம் உண்மையைத் தைரியமாகச் சொல்லுங்கள் என்கிற பெண் காவலரின் இடைவிடாத போன்.

இன்னொரு பக்கம் நீங்கள் உண்மையைச் சொன்னால் பல பேரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்கிற தொடர்ச்சியான நச்சரிப்பு. இதில் எதைச் செய்வது, எதை விடுவது என்கிற தடுமாற்றத்துடன் இரவு உறங்கி எழுந்தேன். விடிந்தும்கூடக் குழப்பம் தீரவில்லை. சொன்னபடியே காலை ஏழு மணிக்கெல்லாம் அந்தப் பெண் காவலர் தனது இருசக்கர வாகனத்தை வாசலில் நிறுத்திவிட்டுக் கதவைத் தட்டினார். மாவட்டத் தலைநகரில் இருந்தது நாங்கள் செல்ல வேண்டிய நீதிமன்றம்.

ஒன்றரை மணிநேரப் பேருந்துப் பயணம். ஒரே இருக்கையில் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து பயணம் செய்தோம். தன் குடும்பம், பணி, பணியிடத்தில் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சினைகள் என நிறைய சொல்லிக்கொண்டு வந்தார். கம்பீரமான தன் காக்கி உடைக்குள் இவ்வளவு காயங்களையும் மறைத்துக்கொண்டு எப்படி இவரால் இயல்பாய்ப் பணிசெய்ய முடிகிறது என நினைத்தேன். அவரைப் பற்றிய சிந்தனையில் ஆனந்தி பற்றிய எண்ணங்களைச் சற்று மறந்து போயிருந்தேன்.

“எனக்கு அதான் மேடம் ஒரே எண்ணம். தப்பு செஞ்சவங்களத் தப்பிக்க விடவே கூடாது. அதனாலதான் ஒங்களுக்கு ஓயாம போன் பண்ணி தொந்தரவு கொடுக்க வேண்டியதா போயிட்டு” என்றார் வருந்தும் தொனியில்.

“நீங்க கொண்டு வர்ற எவிடன்ஸ் இந்த கேசப் பொறுத்தவரைக்கும் ரெம்ப முக்கியமானது மேடம். ஏதோ ஒரு காரணத்தால நீங்க இன்னைக்கு வராம போயிருந்தா அவ்வளவுதான் மேடம். என்னைத் தொலைச்சிக் கட்டிருவாங்க. நான் பார்ட்டிகிட்ட பணம் வாங்கிக்கிட்டு ஏதோ வேல செஞ்சுட்டதா பழி சொல்லிடுவாங்க மேடம்.”

“அப்படியா?” “ஆமாங்க மேடம். இந்த வேலயப் பொறுத்த வரைக்கும் நான் நல்லவளா இருந்தா மட்டும் போதாது. எனக்கு வந்து வாய்க்கிற வங்களும் ஒங்கள மாதிரி நல்லவங்களா இருந்தா மட்டும்தான் நான் நல்ல பேரு எடுக்க முடியும்” என்றார்.
எனக்கு அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இருவரும் நீதிமன்றத்தை அடைந்தோம். என்னை இன்னொரு காவல் அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு அவர் நிம்மதிப் பெருமூச் சொன்றை விட்டதை உணர்ந்தேன்.

தேவையான ஆவணங்களுடன் வந்திருக்கிறேனா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார். நீதிமன்ற முறைகளை விளக்கினார்.
நீதிமன்ற வளாகத்திற்குள் ஆனந்தி, அவள் அக்கா, அக்கா கணவர் மூவரும் நின்றிருந்தார்கள். இன்னொரு பக்கம் செல்வராசு தரப்பினரும் நின்று கொண்டிருந்தார்கள்.

செல்வ ராசுவின் மகன்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்கள் இருவரும் வந்திருந்தனர். ஏனோ கல்யாணத்திற்குத் தயாராய் நிற்கும் மகளையும் அழைத்து வந்திருந்தார்கள். செல்வராசுவின் மனைவி தினமும் மழையிலும் வெயிலிலும் வயலில் கூலி வேலை செய்பவள். அழுது வீங்கிய முகத்தோடு நின்றுகொண்டிருந்தாள்.

செல்வராசு செய்த காரியத்தை அறிந்த பிறகும் குடும்பம் மொத்தமும் அவன் பின்னால் நிற்கிறதே, அவனைக் காப்பாற்றிவிடத் துடியாய்த் துடிக்கிறதே என்று வியப்பாக இருந்தது. இதற்கு அவன் மீது கொண்ட பாசம் மட்டும் காரணமல்ல என்பதைச் சத்துணவு ஆயா சொல்லியிருந்தார். அவர்களுக்கென்று தெருவில் இருக்கும் அந்த மூன்று சென்ட் இடமும்தான் காரணம்.

செல்வராசு தண்டனை பெற்று அபராதம் கட்ட வேண்டும் என்றாலோ ஆனந்திக்கு இழப்பீடு தரவேண்டும் என்றாலோ அவர்கள் வாழ்ந்துவரும் அந்த மூன்று சென்ட் இடத்தில்தான் கைவைத்தாக வேண்டும். அந்த இடமும் அதில் வேயப்பட்டிருக்கும் கூரையும் இல்லையென்றால் அவர்கள் அடையாளமற்றவர்களாக, போக்கிட மற்றவர்களாகத் தெருவில் நிற்பார்கள்.

படித்து, மதிப்பு மரியாதையோடு தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமென ஆசைப்பட்ட பிள்ளைகள் அவமானப்பட்டு நிற்க வேண்டும். இதை யெல்லாம் நினைத்துத்தானோ என்னவோ ஊராட்சித் தலைவர் உட்பட மொத்த சனங்களும் செல்வராசுக்குத் தண்டனை கிடைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். அதேநேரம் சுற்றத்தாரின் ஏச்சு, பேச்சுக்களை வாங்கிக்கொண்டு ஆதரவற்ற நிலையில் நிற்கும் ஆனந்தியின் உருவமும் மனதைப் பிசைவது போலிருக்கிறது. என்ன செய்யலாம்? மனதில் மறுபடியும் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது.

நான் ஒரு அரசு அலுவலர். அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டியது என்னுடைய கடமை. என்னுடைய சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு இங்கே இடமில்லை. மனதைத் திடப்படுத்திக்கொண்டேன். வாழ்க்கையில் முதல்முறையாக நீதிமன்றப் படிகளை மிதிக்கிறேன். சினிமாக்களில் பார்த்த நீதிமன்றம் கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கிறது.

ஆனால், இங்கே நடிப்பவர்கள் யாரும் இருப்பதாகத் தோன்றவில்லை. உண்மை, பொய், நம்பிக்கை, நயவஞ்சகம், ஏமாற்றம், துரோகம் போன்ற உணர்வுகளுடனும் ரத்தமும் சதையுமாய் அதன் ரேகைகள் முகத்தில் படிந்திருக்கும் மனிதர்களைக் கொண்டதாக இருக்கிறது இந்த நீதிமன்றம். ஒரு மெல்லிய பதற்றம் என் உடல் முழுவதும் பரவுவதை உணர்ந்தேன். என் பெயரைச் சொல்லி சாட்சிக்கூண்டுக்கு என்னை அழைத்தார்கள். மீதியை அடுத்த வாரம் சொல்கிறேன்.

(நதி அசையும்)

- thamizhselvi1971@gmail.com

SCROLL FOR NEXT