ரஷ்யாவில் முற்போக்குப் புத்தகங்கள் மீது போர் நிகழ்த்தப் பட்டுவருவதாக மொழிபெயர்ப்பாளரும் பத்திரிகையாளருமான அன்னா அஸ்லான்யன், ‘தி கார்டியன்’ தளத்தில் வெளியான தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 1990களின் தொடக்கத்தில் ரஷ்யாவில் புத்தகங்கள் மீதான தணிக்கை முழுவதுமாக அகற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து எழுத்தாளர்கள் தங்களது கருத்துகளை எவ்விதத் தணிக்கையுமின்றி வெளியிடும் நிலை சில காலத்துக்கு நிலவியது. 2022 இல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா தன் சொந்த நாட்டு பால்புதுமையர் படைப்புகளை இயற்றுவது சட்டப்படி குற்றம் என அறிவித்தது.
2023இல் பால்புதுமையர் அமைப்புகளைத் தீவிரவாத அமைப்புகளாக அறிவித்ததுடன், அது தொடர்பான புத்தகங்களையும் தடை செய்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 48 புத்தகங்களின் பெயர் கொண்ட பட்டியலோடு ரஷ்யக் காவல்துறையினர் புத்தகக் கடைகளைச் சோதனையிட்டனர்.
பட்டியலில் உள்ள புத்தகங்களை விற்பனை செய்யக் கூடாது எனவும், புத்தகங்கள் இருப்பில் இருந்தால் அவற்றை உடனே அழித்து விடும்படியும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது. முற்போக்குப் புத்தகங்களைப் பதிப்பிக்கும் மூவரைக் கைதுசெய்து வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
ஒருவர் தனக்குப் பிடிக்காத புத்தகத்தின் சில பகுதிகளைச் சமூக ஊடகத்தில் வெளியிட்டால் கூடப் போதும். சட்டப்படி அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட புத்தகத்தைத் தடைசெய்துவிடலாம் என்பது மோசமானது என அன்னா தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். எழுத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவான குரல்கள் ரஷ்யாவில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.