தேசியக் கல்விக்கொள்கை 2020 என்பது கல்வியை அரசியலாகப் பார்க்கும், கல்வியில் அரசியல் செய்ய முற்படும் பிரிவினரால் எழுதப்பட்டது. இது மனித குலத்திற்கு எதிரானது; சமூக நீதிக்கு எதிரானது; அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது; மதத்தின் பெயரால் மனிதர்களைப் பிரித்து, அடிமைப்படுத்தி, நசுக்க நினைக்கும் மதம்பிடித்த யானைகளை ஒத்தது என்பதை ‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’ என்ற நூல் அறிவுப்பூர்வமாக நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்நூலை எழுதியுள்ளார். மொத்தம் 14 தலைப்புகளில், 135 பக்கங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் கல்விக்கான வளர்ச்சிக் கட்டமைப்பில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் அணுகுமுறையைப் பின்பற்றினால் கல்வியில் அடையவேண்டிய இலக்கை ஒட்டுமொத்த இந்திய தேசமும் அடைந்துவிடலாம்.
கல்வித் திட்டம் என்பது வளர்ச்சியை நோக்கி அழைத்துச்செல்ல வேண்டும். மாறாக, வீழ்ச்சியை நோக்கி வீசியெறிவதாக இருக்கக் கூடாது என்கிற கவலை நூலாசிரியருக்குள் இருக்கிறது. 3ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு, 5ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு, 8ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு, 12ஆம் வகுப்பிற்கு பிறகு எந்த உயர் படிப்பில் சேர வேண்டுமென்றாலும் அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு என்பதெல்லாம் கல்வி என்பது அனைத்து மக்களிடமும் சென்று சேர்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது என்பதை இந்நூலின் மூலம் ஆசிரியர் நிறுவியுள்ளார்.
ஒன்றிய அரசு வெளியிட்ட தேசியக் கல்விக் கொள்கை என்பது, கல்விக் கொள்கையே அல்ல. நாட்டிலுள்ள எந்த மாநிலத்துடனும் கலந்து ஆலோசிக்காமல், மதச்சார்பு கொண்ட 13 அமைப்புகளை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்ட கொள்கை இது என்று கூறுகிறார் நூலாசிரியர்.
அனைத்து மாநிலங்களின் சுயாட்சி உரிமையைப் பறிப்பதற்கான முயற்சியின் முன்னேற்பாடு என்றும், இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்புக்கான முன்மொழிவு என்றும் நூலில் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டிய மிக முக்கியமான நூல் இது.
இந்தப் புத்தகத்தில் குழந்தைப்பருவம் என்பது கற்பித்தலுக்கான களமா அல்லது போட்டித் தேர்வுக்கான போர்க்களமா என நூலாசிரியர் எழுப்பியுள்ள கேள்வி இந்நூலைப் படிக்கும் எல்லோருக்குள்ளும் எழும். ‘தேசிய கல்விக்கொள்கை 2020 எனும் மதயானை’ என்னும் தலைப்பே படிப்போரை தலைநிமிர வைக்கும். இந்நூலைப் படித்து முடிக்கும்போது, மனிதச் சமூகம் எந்தச் சூழலிலும் வீழ்ந்துவிடக் கூடாது என்னும் பெரும் அக்கறையோடும், உரிமைகளைக் காக்கும் வேட்கையோடும் இந்நூலில் உரத்தக் குரல் எழுப்பப்பட்டுள்ளது என்பது புரியும்.
இது தமிழ்நாட்டு மாணவர்களின் குரல் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய மாணவர்களின் குரலாக, இந்தியாவின் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் குரலாக, ஒட்டுமொத்த பெற்றோர்களின் குரலாக ஒலிக்கிறது. இந்தக் குரல் தேசியக் கல்விக்கொள்கையைத் தடுத்து நிறுத்தும். இல்லையேல் நிச்சயமாகத் திருத்தும்.
- சிகரம் சதிஷ்குமார் எழுத்தாளர், அரசுப் பள்ளி ஆசிரியர்
தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அன்பில் பதிப்பகம், சென்னை.
விலை: ரூ.300
தொடர்புக்கு: 7358500250