இலக்கியம்

புதுவடிவம் கொள்ளும் மண்டோதரி | நூல் நயம்

செய்திப்பிரிவு

எண்டமூரி வீரேந்திரநாத், ஒல்கா, முகம்மத் கதீர்பாபு, அப்பூரி சாயாதேவி, என்.ஸ்ரீதர் உள்ளிட்ட தெலுங்கு எழுத்தாளர்கள் 15 பேர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. மொழிபெயர்ப்புப் பணியில் பல ஆண்டு அனுபவம் உள்ள கௌரி கிருபானந்தன் இவற்றை மொழிபெயர்த்துள்ளார்.

உறவுகளை எடை போட்டே பழகி விட்ட இன்றைய நவீன காலத் தலைமுறையின் தடுமாற்றத்தை ‘அத்தைமடி’ சிறுகதை சித்திரிக்கிறது. அப்பா இல்லாத நிலையில் அம்மாவின் அரவணைப்பிலேயே வளர்ந்த ஒருவனின் திருமண வாழ்க்கை எத்தகைய பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பதை ’அம்மா சொல்படி’ கதை காட்டுகிறது.

ராவணனின் அத்துமீறலைக் கையறு நிலையில் அணுக நேர்ந்த மௌன சாட்சியாகவே நம் மனங்களில் பதிந்துபோயிருக்கும் அவன் மனைவி அறமும் ஆளுமையும் கொண்டவளாக தலைப்புச் சிறுகதையான ‘மண்டோதரி’யில் வலம் வருகிறாள். ராமன் - சீதை, ராவணன் - மண்டோதரி என்கிற இணைகளின் கதை, இந்திய வரலாற்றில் தொடர்ந்துகொண்டே இருக்கும் ஒரு கருத்து மோதல் குறித்த உரையாடலாக எழுத்தாளர் ஒல்கா மூலம் மாற்றப்பட்டிருக்கிறது.

மண்டோதரி (தெலுங்கு சிறுகதைகள்);
தமிழில்: கௌரி கிருபானந்தன்;
பதிப்பகம்: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்,
விலை: ரூ.150
தொடர்புக்கு: 04259-236030/40

அக்கறை கொண்ட தொகுப்பு: நேர்காணல் எனும் வடிவம் பத்திரிகைத் தொழிலில் மிகவும் முக்கியமானது, எளிமையாக விஷயங்களைக் கடத்த வல்லது. தொழிற்சங்கவாதியான பீட்டர் துரைராஜ், சமூகத்தின் பல்வேறு தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுமைகளை இந்த நூலில் நேர்காணல் செய்திருக்கிறார். ஒரு தொழில்முறை பத்திரிகையாளராக இல்லாதபோதும், தன்னார்வத்துடன் துறை சார்ந்த ஆளுமைகளைத் தேடிப் பேட்டி கண்டிருக்கிறார்.

ஓவியர் ரவி பேலட், பெரியாரிய அறிஞர் வாலாசா வல்லவன், எழுத்தாளர்கள் யமுனா ராஜேந்திரன், கே.ஜீவபாரதி, சம்சுதீன் ஹீரா என சமூகத்துக்காக உழைக்கும், சிந்திக்கும் இவர்களில் பலரும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள். இந்த நூலில் இதுபோல் 35 பேட்டிகள் இடம்பெற்றுள்ளன. - அன்பு

அறம் நேர்காணல்கள், பீட்டர் துரைராஜ்,
பொன்னி வெளியீடு,
விலை:ரூ.250,
தொடர்புக்கு: 8248338118

SCROLL FOR NEXT