இயற்கையாகத் தோன்றிய மலைகளும், பாறைகளும், பள்ளத்தாக்குகளும் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத பல ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கின்றன. நம் புரிதலில் உள்ள குழப்பத்தால் புவியீர்ப்புக்கு நேரெதிராகக் காட்சியளிக்கும் காந்த மலை, இயற்கை இழைத்த பிழையால் கண்கொள்ளாக் காட்சியாக மாறிய இயற்கை வளைவு, சிற்பியால் அல்ல, இயற்கையால் செதுக்கப்பட்ட உலகக்கோப்பை வடிவிலான பாறை என இந்நூலில் பேசப்படும் பலவிதமான நிலப்பரப்புகள் வாசிக்கும்போதே சிலிர்ப்பை உண்டாக்கக் கூடியவை.
‘வானவில் மலைகள்’, ‘ஏழு வண்ணங்களின் மலை’ பற்றி அடுத்தடுத்து வாசிக்க நேரும்போது இயற்கையில் இத்தனை அதிசயங்களா என்கிற ஆச்சரியம் மென்மேலும் மேலோங்குகிறது. ஒவ்வொரு இடம் பற்றிய விவரிப்பின் மூலம் அந்தப் பகுதியை தத்ரூபமாக கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ.
உலகப் புவியியல் அதிசயங்கள்
ஏற்காடு இளங்கோ
விலை: 250
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு : 7401296562
திண்ணை | சு.தேன்மொழி படைப்பரங்கம்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஒருங்கிணைக்கும் எழுத்தாளர் சு.தேன்மொழியின் படைப்பரங்கம் தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் இன்று (26-07-2025, சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி, முனைவர் ச.சந்திரசேகரன், முனைவர் சு.மகேஸ்வரி, முனைவர் சு.இராஜேந்திரன், கவிஞர் வீரத்தமிழ் மகா, எழுத்தாளர் சு.தேன்மொழி உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
ஓவிய, சிற்ப கண்காட்சி: சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் 1998 – 2002ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்கள் கலைகள் மூலம் மீண்டும் ஒன்று கூடும் நிகழ்வு சென்னை லலித் கலா அகாதமியில் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
முன்னாள் மாணவர்களான 28 கலைஞர்களின் ஓவிய, சிற்பக் கண்காட்சி நடைபெறும். ஆகஸ்ட் 1 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள தொடக்க விழாவில் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கவிதா ராமு, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் ஓவியர் எம். ட்ராட்ஸ்கி மருது உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கலாப்ரியா 75: கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் எனப் பல்வேறு பரிமாணங்களில் கிளை பரப்பி வரும் முதுபெரும் இலக்கிய ஆளுமை கலாப்ரியாவின் 75வது பிறந்தநாளை ஒட்டி, பிரம்மாண்டமான பவளவிழாவைப் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
ஜூலை 27 ஞாயிறு அன்று சங்கரன்கோவிலில் உள்ள கிருஷ்ண ஹாலில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. தமிழ்நாட்டின் இலக்கிய ஆளுமைகள் பலர் பங்கேற்கும் இவ்விழாவில் நூல்களும் வெளியிடப்பட இருக்கின்றன.