இலக்கியம்

அழைப் பாணை | அகத்தில் அசையும் நதி 22

சு.தமிழ்ச்செல்வி

அறைக்குள் வந்த அந்தப் பெண் காவலர்கள் இருவரின் முகத்திலும் நட்புக்கான புன்சிரிப்பு இருந்தது. உட்காரச் சொன்னேன்.
“சாப்டீங்களா மேடம்?” “இன்னும் இல்ல.” “மணி அடிக்கிறத்துக்குள்ள நீங்க சாப்ட்டு வந்துருங்க மேடம். நாங்க வெயிட் பண்றோம்” என்றனர் இருவரும்.

“பரவால்ல இன்னக்கி கார்த்திகை விரதம். பழம் மட்டும்தான் சாப்புடுவேன். ஒண்ணும் பிரச்சனயில்ல” என்றேன். “அப்படின்னா சரிங்க மேடம், நீங்களும் ஒக்காருங்க” என்றனர். வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் போல அவர்களது விசாரிப்புகள் இருந்தன.

என்னுடைய தனிப்பட்ட குடும்ப விவரங்கள், பணி சார்ந்த விவரங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இருப்பவர்களைப் போல எனக்குத் தோன்றியது. எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று கேட்கவில்லை. தாமாகச் சொல்லட்டுமென்று அமைதியாய் இருந்தேன்.

“மேடம், ஒங்களுக்கு கோர்ட்லேருந்து ஒரு சம்மன் கொடுத்தனுப்பியிருக்காங்க. போஸ்டல்ல அனுப்புனா உங்களுக்குக் கிடைக்க லேட்டாகும்னு எங்க கைலயே கொடுத்தனுப்பியிருக்காங்க மேடம்.”“என்ன சம்மன் அது?” இதுபோல ஒரு விஷயத்தை இதுவரை நான் எதிர்கொண்டதில்லை என்பதால் மனதுக்குள் சின்னதாய் ஒரு நடுக்கம் ஏற்பட்டது.

“கையெழுத்துப் போட்டு வாங்கிப் பாருங்க மேடம்.” கவனமாகக் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு எனக்கான பிரதியைக் கொடுத்தார்கள். “என்ன இது?” “பயப்படாம பிரிச்சிப் பாருங்க மேடம்” என்றனர். பிரித்துப் பார்த்தேன். ஆனந்தி என்கிற பெயரைத் தவிர நீதிமன்ற வாசகங்களைச் சட்டென்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும், இதுவரை சத்துணவு ஆயாவும் இன்னும் இரண்டு பேரும் என்னிடம் பேசிச்சென்ற விஷயங்கள் தொடர்பானதுதான் என்பது தெரிந்தது.

“என்ன செய்யணும்” என்றேன். “மொதமொத நம்ம ஸ்டேஷனுக்கு வந்துருக்கிற ‘போக்ஸோ’ கேஸ் மேடம். அதனாலதான் நாளைக்கே விசாரணைக்கு வருது.

தேவையான டீடைல்ஸ எடுத்துக்கிட்டு வந்துருங்க மேடம்.” “நாளைக்கே வரணுமா?” “ஆமாம் மேடம்.” “எத்தன மணிக்கு வரணும்?” “ஒம்போதுக்கெல்லாம் அங்க இருக்குற மாதிரி போயிடுவோம் மேடம்.” “நீங்களும் வருவீங்களா?”“உங்கள கோர்ட்டுக்குக்கு அழைச்சிட்டு வர்ற பொறுப்ப எங்ககிட்டதான் மேடம் ஒப்படைச்சிருக்காங்க.”

“நானே வந்துர்றேன். நீங்க சிரமப்பட வேண்டாம்.” “அப்படியில்ல மேடம். இது எங்க வேல. நாங்க செய்துதான் ஆகணும்.” “சரி சரி. நான் அப்ப உங்க கூடவே வர்றேன்” என்றேன். “சொன்னதை எதையும் மறந்துடாதீங்க மேடம். கிளம்பி ரெடியா இருங்க. காலையில நானே உங்க வீட்டுக்கு வந்து கூட்டிட்டுப் போறேன்.”

இருவரும் பள்ளியைவிட்டுக் கிளம்பிச் சென்ற அடுத்த விநாடியே அந்த இருவரும் சத்துணவு ஆயாவுடன் வந்து நின்றார்கள். “எதுக்கும்மா போலீஸ் வந்துட்டுப் போகுது?” “இந்த லெட்டர குடுத்துட்டுப் போக வந்தாங்களாம்.”

“என்ன லெட்டரும்மா அது?”“இப்பதான கொடுத்துட்டுப் போறாங்க. இனிமேதான் பாக்கணும்.” “ஒங்களுக்கு உண்மையாவே தெரியா தாம்மா? “தெரியாது ஆயா.” “எங்க ஆளுங்ககிட்ட வக்கீலு சொல்லிட்டாரும்மா. போலீசு வரும். பள்ளிக்கூடத்து எச்எம்ம பாத்துப் பேசிடுங்கன்னு.” “எனக்குக் கொஞ்சம் வேல இருக்கு ஆயா.” “சரின்னு ஒரே ஒரு வார்த்த மட்டும் சொல்லுங்கம்மா. நாங்க போயிடுறோம்.” “ஆயா என்னால இப்ப எதுவும் சொல்ல முடியாது. நான் இன்னும் பதிவேட்ட பாக்கல.”

“கொஞ்சம் பாத்துதான் சொல்லுங்களேம்மா. நீங்க நல்லா இருப்பீங்க.” “என்னோட கையில நீதிமன்ற அழைப்பாணைய வாங்கி வச்சிக்கிட்டு ஒங்ககிட்ட இதப்பத்தியெல்லாம் பேசுறது தப்பு ஆயா. என்னோட வேலை போகணும்னு ஆசப்படுறீங்களா?” “அப்புடியெல்லாம் நெனைப்பமாம்மா.

எங்களுக்கு ஒங்களவிட்டா வேற யாரும்மா ஒதவுவாங்க?” “ஆயா மத்தியான பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப் போவுது. எனக்குத் தொந்தரவு கொடுக்காம நீங்க இவங்க ரெண்டு பேரையும் இங்கேருந்து கூட்டிட்டுப் போங்க மொதல்ல.” சற்றுக் கடினமாகப் பேசினாலன்றி அவர்கள் அவ்விடத்தை விட்டு அகல மாட்டார்கள் எனத் தோன்றியது.

நான் அவர்களுக்கு உதவப் போவதில்லை என்பதைத் தெரிந்துகொண்டவர்களைப் போல வாடிய முகத்துடன் அங்கிருந்து சென்றார்கள். இப்போது சமூக அறிவியல் பாடவேளை. இந்தப் படத்தை ஆரம்பித்தால் அவ்வளவுதான். கதை கதையாகப் பிள்ளைகளைக்குச் சொல்ல ஆயிரம் விஷயங்கள் வளர்ந்துகொண்டே இருக்கும். கடைசியாகப் பார்த்தால் ஒரு பத்தியை நடத்தி முடித்திருக்க மாட்டேன்.

எனவே, நேற்று நடத்திய செய்யுள் பகுதியைக் கரும்பலகையில் எழுதிப்போட்டுப் படித்து மனப்பாடம் செய்யச் சொல்லிவிட்டு அலுவலக அறைக்கு வந்தேன். அலமாரியிலிருந்த பழைய கட்டுகளில் உரிய பதிவேட்டை எடுத்து ஆனந்தியின் பெயரைத் தேடினேன். எளிதாகவே கண்டுபிடிக்க முடிந்தது. பெயருக்கு நேராகக் கடைசி களத்தில், ‘ஐந்தாம் வகுப்புத் தேர்ச்சி’ என்று மட்டும் சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்தது. பதிவுத்தாள் வழங்கியதற்கான குறிப்பு எதுவும் இல்லை. பிறந்த தேதியைப் பார்த்தேன்.

கணக்கிட்டுப் பார்த்தால் இன்றைய தேதியில்கூடப் பதினெட்டு வயது நிறைவடையாமல் இருந்தது. கல்விச்சான்று படிவத்தில் அனைத்து விவரங்களையும் குறித்துக்கொண்டேன். ஒருமுறைக்கு இருமுறை பதிவுகள் அனைத்தையும் சரியாக எடுத்து எழுதியிருக்கிறேனா என்று சரிபார்த்துக் கொண்டேன்.

பள்ளி முத்திரையைப் பதித்துக் கையெழுத்திட்டேன். மடித்து அழைப்பாணையுடன் உறைக்குள் வைத்து வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பையில் வைத்துக்கொண்டேன். மறுபடியும் வகுப்பறைக்குச் செல்ல நினைத்த நேரத்தில் நான்கைந்து பேர் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தார்கள். அந்தப் பகுதியின் வார்டு உறுப்பினர், அவருடைய கணவர் உள்ளிட்டோர். எனக்கு அவர்கள் வருகையின் நோக்கம் புரிந்தது. இருந்தாலும் ஒன்றும் தெரியாதது போல விசாரித்தேன்.

“நாங்க எல்லாருமே ஒண்ணுக்குள்ள ஒண்ணுதான். யாரு ஒருத்தங்களத் தண்டிச்சாலும் கண்டிச்சாலும் மான அவமானமும் பழியும் பாவமும் எல்லாருக்கும்தான். அதனால, எங்களுக்குள்ள பேசித் தீர்த்துக்கிர்றோம்.

இந்த ஒரு உதவிய மட்டும் பண்ணுங்க.” என்றனர்.“பதிவேட்டுல என்ன இருக்கோ அதத்தான் கொடுக்க முடியும். யாரும் என்ன தயவுசெய்து தொந்தரவு பண்ணாதீங்க.”கையெடுத்துக் கும்பிட்டு அனுப்பி வைத்தேன். பள்ளி விடுவதற்குச் சற்று முன்னதாக ஊராட்சித் தலைவரும் ஆனந்தியின் பெரியண்ணனும் வந்தார்கள்.

நிச்சயமாக இவர்கள் பிறந்த தேதியை மாற்றித் தரும்படி வற்புறுத்த மாட்டார்கள் என நினைத்தேன். மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. உட்கார வைத்து விசாரித்தபோதுதான் தெரிந்தது, ஆனந்தியின் அண்ணனுமேகூடத் தன் பங்காளிக்குப் பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் வந்திருக்கிறார் என்பது.

ஆனந்திக்கு உண்மையான வயது ரேஷன் கார்டில் இருப்பதுதானாம். அம்மா இல்லாத பிள்ளையை வீட்டில் வைத்துப் பார்க்க ஆளில்லாமல் மூன்று வயதிலேயே பள்ளியில் கொண்டுவந்து விட்டுவிட்டார்களாம். அப்போதிருந்த தலைமையாசிரியர் ஆனந்திக்கு ஐந்து வயதென்று உத்தேசமாய் ஒரு தேதியைப் போட்டுச் சேர்த்துவிட்டார்களாம்.

எனவே, ஆனந்தியின் உண்மையான பிறந்த தேதி என்று அவர்கள் குறித்துக்கொடுத்திருக்கும் தேதியைப் பதிவில் ஏற்றி அதையே நான் நீதிமன்றத்துக்கும் தரவேண்டுமாம். ஒரு விண்ணப்பக் கடிதம் எழுதி அதில் ஆனந்தியின் அப்பா கையொப்பமிட்டுக் கொடுத்திருந்தார். வாங்கிப் பார்த்ததும் எனக்கு ஒரு விநாடி தலை சுற்றுவது போலிருந்தது.

‘ஆனந்தி உண்மையிலேயே ஒங்க அம்மா வயத்துல பொறந்த ஒங்க தங்கச்சிதானா? இல்ல எங்கயாவது குப்பக்குழியில கெடந்து எடுத்து வளக்குற புள்ளயா?’ கோபத்தில் வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கியபடி “இதெல்லாம் இப்ப திருத்தம் செய்ய முடியாது. படிச்சிக்கிட்டு இருந்தப்பவே மெனக்கெட்டிருந்தா செய்திருக்கலாம்”. இன்னும் வரும்

(நதி அசையும்)

- thamizhselvi1971@gmail.com

SCROLL FOR NEXT