அமெரிக்காவின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர், அமெரிக்க இலக்கிய தந்தை எனப்படும் மார்க் ட்வைன். இவர், தனது படைப்புகளின் வழியே, அமெரிக்க சமூகத்தின் முரண் பாடுகளை, போலித்தனங்களை, நகைச்சுவையாக விமர்சித்ததால் அதிக வாசகர்களைப் பெற்றார்.
அவர் படைப்புகள் அதிக வரவேற்பைப் பெற்றன. தனது எழுத்தில் பேச்சுவழக்கை பயன்படுத்திய அவர், ஒரு தனித்துவமான அமெரிக்க இலக்கியத்தை உருவாக்கவும் பிரபலப்படுத்தவும் உதவியாக இருந்தவர் என்கிறார்கள்.
நாவல்கள், சிறுகதைகள், பயணக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனம் என பல்வேறு தளங்களில் இயங்கிய அவருடைய, 14 சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்நூல். நகைச்சுவையை எழுத்தில் கொண்டுவருவது சுலபமல்ல. அதை எளிமையாகவும் இனிமையாகவும் அசல் தமிழ்ப் படைப்பைப் போலவே மொழிபெயர்த்திருக்கிறார் ஆசிரியர் ச.சுரேஷ். அதுவே இந்தப் புத்தகத்தின் பலமாகவும் இருக்கிறது.
இடைக்கால நூற்றாண்டு ஒன்றின் காதல் கதை, விவசாய பத்திரிகையின் பதிப்பாசிரியராக வேலை செய்த கதை, டாம் சாயர் மரவேலிக்கு வெள்ளையடித்த கதை, விஷமக்கார சிறுவனின் கதை, விஞ்ஞானமா, அதிர்ஷ்டமா, இரண்டு சிறுகதைகள் என ஒவ்வொரு கதையிலும் நகைச்சுவையை உணர முடிகிறது.
‘மின்னலும் திருமதி மெக்வில்லியம்ஸும்’ கதையை கணவன் - மனைவிக்கான உரையாடலாக படைத்திருப்பதும் அதன் வழி வருகிற சம்பவங்களும் புன்னகைக்க வைக்கிற நகைச்சுவையும் சுவாரசியம் தருகின்றன. நூறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதைகள் என்றாலும் இப்போதும் அதே ரசனையை தருவது மார்க் ட்வைனின் தனித்துவம். சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகின்றன, இக்கதைகள். - அழகு
மார்க் ட்வைன் சிறுகதைகள்
தமிழில்: ச.சுரேஷ்
சந்தியா பதிப்பகம்
விலை ரூ.240
தொடர்புக்கு: 98409 52919