இலக்கியம்

வயசை மாத்த முடியுமா? | அகத்தில் அசையும் நதி 21

சு.தமிழ்ச்செல்வி

“பம்பாய்க்கு ஓடி ரெண்டு வருஷம் அங்கயே கெடந்து பட்டுத் திருந்தி வந்துருப்பான்னுதான்மா எல்லாருமே நெனச்சோம். ஆனா அவன் ரவகூட திருந்தலம்மா.” ஆயாவின் பேச்சுக்கிடையே நான் எதுவும் குறுக்கிட வேண்டாமென்று நினைத்து அவர் முகத்தையே பார்த்தபடி இருந்தேன். “நல்லது கெட்டத வாங்கிக் குடுத்து அந்தப் புள்ளய மறுபுடியும் அவன் சொல்லுபேச்ச கேக்குற மாதிரி மாத்திட்டான்மா.

இது யாருக்குமே தெரியல. அந்தப் புள்ள வெடவெடன்னு ஊதிவுட்டா பறந்துடற மாதிரிதாம்மா இருப்பா. திடீருன்னு பாத்தா வயிறு மட்டும் சாலபானை மாதிரி தெரியுது. அதுக்கப்பறமாத்தான் சந்தேகப்பட்டு எல்லாம் விசாரிக்குது. பங்காளிங்க எல்லாருமா சேந்து மறச்சி மண்ணள்ளிப் போட்டுடலாம்ன்னுதான் நெனச்சோம். ஆனா அது முடியாம போயிட்டுது.

அந்தக் குட்டியோட அக்காகாரி ஒருத்திய காட்டுபுரத்துல கட்டிக் கொடுத்துருக்கு. அவளுக்குச் சேதி சொல்லிவுட்டு வரவச்சோம். கையில கெடைச்ச காசுபணத்தக் கொடுத்து வயத்த சுத்தம் பண்ணிக்கிட்டு வந்துருன்னு சொன்னோம். நாலு மாசம் தாண்டிடுச்சி, வீணாக்குறது செரமமுன்னு சொல்லிருக்காங்க.

‘அய்யோ அப்புடியெல்லாம் சொல்லிடாதீங்க. தாயத்த பொண்ணு. யாந்தங்கச்சி வாழவேண்டிய பொண்ணு. எப்புடியாவுது வயத்த சுத்தம்பண்ணிக் கொடுத்துருங்க நீங்க நல்லாருப்பீங்க’ன்னு கால்ல வுழுந்து அழுது, கையப் புடிச்சி கெஞ்சி எப்புடியோ சுத்தம் பண்ணிக்கிட்டு வந்துட்டாம்மா.

இந்த விசயம் வெளில தெரிஞ்சா நமக்குத்தான்டா கேவலம் அப்படி இப்புடின்னு சொல்லி அண்ணங்காரனுங்க மூணு பேரயும் அசமடக்கியாச்சி. ஆனா அவளோட அக்கா புருசன் இருக்கானே காட்டுபுரத்தான், அவன மட்டும் என்ன சொல்லியும் படியவைக்க முடியலம்மா. அனுக்குத் தெரிஞ்ச வக்கீலு மூலமா கேசு கொடுத்துட்டாம்மா. இப்ப கேசு நடந்துகிட்டுருக்கு.

இவனுங்களும் கஷ்டவாளிதாம்மா. இவனுக்குக் கட்டிக்குடுக்குற வயசுல ஒரு பொட்டபுள்ள இருக்கு. கல்யாணம் பன்ற வயசுல ரெண்டு பயலுவ இருக்காய்ங்க. குடியிருக்குற அந்த மூணு செண்டு எடத்தத் தவர வேற ஒண்ணுமில்லம்மா. இதெல்லாம் வெளில தெரிஞ்சா அந்த வீட்டுக்கு யாராவது பொண்ணு குடுப்பாங்களா, பொண்ணு எடுப்பாங்களாம்மா? நீங்கதாம்மா பெரிய மனசு பண்ணி ஒதவி செய்யணும்” என்றார் ஆயா.

“நான் ஏதோ நீங்கல்லாம் ஆனந்திக்காக வந்துருப்பீங்கன்னு நெனச்சேன். ஆனா அந்தப் பொண்ணுக்கு எதிராளியால்ல இருக்கீங்க?” “அம்மா, ஆனந்தியோ அவ அண்ணனுங்களோ எங்களுக்கு எடஞ்சலா இல்லம்மா. அவ அக்கா புருசன் மட்டும்தாம்மா எங்களுக்கு எதிரியா வந்து நின்னுட்டான்.”

“சரி ஆயா... இதுல நான் என்ன செய்ய முடியும். என்கிட்ட எதுக்கு இதையெல்லாம் சொல்றீங்க?” “அம்மா அந்த உருப்புடாத பய கேசு குடுத்துட்டான்மா. போலீசும் இவனப் புடிச்சிக்கிட்டு போயிட்டு. கேசு கட்டு கோர்ட்க்கு போயிட்டுதாம்மா.” “அதுக்கு?” “இவனுங்களும் ஒரு வக்கீல புடிச்சி நிறுத்திட்டானுங்கம்மா.” “சரிங்க ஆயா. அதுக்கு நான் என்ன செய்யணும் சொல்லுங்க.”“அந்தக் குட்டி படிச்சப்ப வயசு, பொறந்த தேதியெல்லாம் பதிஞ்சிருக்குமாமுல்லம்மா.”

“ஆமா இருக்கும்.” “அத மட்டும் கொஞ்சம் சரிபண்ணி வாங்கிக்கிட்டு வரச்சொன்னாராம்மா வக்கீலு.” “என்னாயா கேக்குறீங்க?” “பாவம்மா. அவன வுடுங்க, அவன் தப்பு பண்ணுனவன். ஆனா அவன் பொண்டாட்டி புள்ளைவொள பாருங்கம்மா. அதுங்கல்லாம் வெளிய தலகாட்ட முடியாம கெடக்குதுங்க.”

“பொறந்த தேதி என்னவா இருந்தாத்தான் என்ன ஆயா. தேதிய மாத்துனா செஞ்ச தப்பு இல்லன்னு ஆயிடுமா?” “ஒங்களுக்குத் தெரியாததாம்மா? இந்த பிரச்சின நடந்தப்ப அந்தக் குட்டிக்குப் பதினெட்டு முடிஞ்சிருந்தா போதுமாம்மா. கேசே இல்லாம பண்ணிடலாமாம்.”

“அது எப்புடி ஆயா முடியும்?” “அந்தக் குட்டியே வந்து நான் விருப்பப் பட்டுதான் அவருகூட இருந்தன்னு சொல்லிட்டா போதுமாமுல்ல.” “ஆனந்தி அது மாதிரி வந்து சொல்லுமா ஆயா?” “அதெல்லாம் அவ வந்து சொல்லுவாம்மா. நம்ம என்ன சொல்றமோ அத அப்புடியே செய்வாம்மா. அதுலயெல்லாம் அவள தப்பே சொல்ல முடியாதும்மா.”

“அப்புடியா?” “ஆமாம்மா. அவ பொறந்த தேதிய மட்டும் பதினெட்டு முடிஞ்ச மாதிரி மாத்திக் கொடுத்தா போதும்மா.” “ஆயா படிப்புச் சான்றுல மட்டும்தான் பொறந்த தேதி இருக்குமுன்னு ஒங்களுக்கு யாரு சொன்னது. ஆதார் கார்டு இருக்கு. ரேஷன் கார்டு இருக்கு. இதையெல்லாம் போயி சரிபண்ணி வாங்குவீங்களா?” “இல்லம்மா.

ஆதாரு அட்டையே அவளுக்கு இல்ல. யாரும் மெனக்கெட்டுப் புடிக்கல.” “ரேஷன் கார்டு?” “நம்ம நல்ல நேரம் போலருக்கும்மா. அதுல அரசாங்கமே வயச கூட்டிப்போட்டுதான் கொடுத்திருக்கு. நீங்க மட்டும் மனசு வச்சா போதும்மா. இந்த கேசுலேருந்து ஈசியா வெளிய வந்துரலாம்மா.”

“இது அஞ்சாவுது வரைக்கும் படிச்ச பள்ளிக்கூடம்தான் ஆயா. ஆறாவதுக்கு பெரிய பள்ளிக்கூடம் போயிருக்குமுல்ல.” “நீங்க வேற யேம்மா. அது மாதிரி யெல்லாம் எடுத்துக்கட்டி செய்ய ஆளுருந்தா இந்தக் குட்டிக்கு யாம்மா இந்த நெலம வரப்போவுது? அஞ்சாவது படிச்ச சர்டிபிட்டயே கிழிச்சி வாங்கலயாம்மா. இங்கயேதான் இருக்குதாம்.”“ஆனந்திக்கு இந்தப் பிரச்சின நடந்தப்போ பதினெட்டு வயசு ஆயிருக்காதுன்னு நெனைக்கிறீங்களா ஆயா?” “ஆமாம்மா.

எங்க தெருவுலயே இந்தக் குட்டி ஈட்டுப் பொண்ணு ஒண்ணு இப்ப பன்னண்டாவுது படிச்சிக்கிட்டுருக்கு. அந்தப் புள்ள சர்டிபிட்ட வாங்கிப் பாத்தாச்சி. வருசம் மட்டும் மாத்துனா போதுமாம்மா.” “சரி ஆயா, நான் பதிவேட்ட எடுத்துப் பாக்குறேன் என்ன இருக்குன்னு.” “சரிம்மா. எப்ப வந்தாம்மா வாங்கிக் கலாம்?” “என்ன ஆயா?” “சர்டிபிட்டு தாம்மா.”

“இப்புடியெல்லாம் யாரு வந்து கேட்டாலும் படிப்புச் சான்று தர முடியாது ஆயா. புள்ளைங்க இல்லன்னா பெத்தவங்க கேட்டா மட்டும்தான் அதுவும் கையெழுத்து வாங்கிக்கிட்டு கொடுக்க முடியும்‌.” “பாக்குறேன்னு சொன்னீங்களேம்மா.” “அந்தப் பொண்ணு படிச்ச பதிவு இருக்கா, பொறந்த தேதி வருசம் என்ன இருக்குன்னு பாக்குறேன்னுதான் சொன்னேன் ஆயா.” “அப்ப நீங்க மாத்தித் தர மாட்டீங்களாம்மா?” “கண்டிப்பா பதிவுல இருக்குற எதையும் மாத்த முடியாதும்மா.” “அப்பன்னா என்ன இருக்கோ அதயாவுது குடுங்களேம்மா.”

“அது எதுக்கு ஆயா?” “வக்கீலு கேட்டாராம். அத கொண்டுபோயி குடுத்தா அத பாத்துட்டு அதுக்குத் தக்கண ஏதாவுது செய்வாருல்லம்மா.” “ஆயா கோச்சிக்காதீங்க. அப்புடி யெல்லாம் தர முடியாது ஆயா” “பணங்காச குடுத்தாவது பொறந்த வருசத்த சரி பண்ணிடுங்கன்னு கண்டிச்சி சொல்லிருக்கரும்மா வக்கீலு. நீங்க பணங்காசிக்கு ஆசப்பட மாட்டீங்க. ஆனா அவன் புள்ளகுட்டிய நெனைச்சிப் பாத்து எரக்கப்பட்டுக் குடுப்பீங்கன்னு நெனைச்சம்மா.”

“அது மாதிரியெல்லாம் செய்யக் கூடாது ஆயா.” “என்னம்மா, எரக்கம் காட்டுங்கம்மா. ஒரே ஒரு எழுத்துதானம்மா.” “ஆயா, ஒங்களுக்கு எப்புடிச் சொல்லிப் புரிய வைக்குறதுன்னே தெரியல ஆயா. இப்புடியெல்லாம் நான் செய்யக் கூடாது ஆயா.” இதுவரை வாசல் ஓரம் உட்கார்ந்து ஆயாஎன்னுடன் பேசுவது அனைத்தையும் கேட்டுக்கொண்டு அவ்வப்போது ஆயாவுக்குச் சில விஷயங்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த இருவரும் எதையோ கண்டு பதுங்குவதைப் போல மெதுவாக அங்கிருந்து நழுவி சமையல் கட்டுப் பக்கம் சென்றார்கள்.

ஏன் திடீரென்று இப்படி நடந்துகொள்கிறார்கள் என நினைத்தேன். அதேநேரம் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்திருந்தது அந்த இருசக்கர வாகனம். அதிலிருந்து இறங்கிய இரண்டு பெண் காவலர்கள் என் அறையை நோக்கி வந்தார்கள். அவர்கள் கையில் அந்தக் கடிதம் இருந்தது. என்ன கடிதம் அது? அடுத்த வாரம் பார்ப்போம்.

(நதி அசையும்)

- thamizhselvi1971@gmail.com

SCROLL FOR NEXT