சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று இஸ்ரோவின் ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டுவருகிறார் விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா. இந்தப் பின்புலத்தில் இஸ்ரோவின் சாதனைகளை விரிவாகத் தெரிந்துகொள்ள உதவுகிறது 'இஸ்ரோ: எக்ஸ்புளோரிங் நியூ ஃபிராண்டியர்ஸ்' என்கிற நூல்.
விண்வெளி ஆய்வுகளில் சாதனை படைத்துவருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவமான இஸ்ரோ. நிலவு, சூரியன், செவ்வாய், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது எனத் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெற்றிகரமான திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, விண்வெளி அறிவியலாளர் விக்ரம் சாராபாய் ஆகியோரின் கனவும் அறிவு முதலீடுமே இந்த வளர்ச்சிக்கு அடித் தளமாக அமைந்தன.
இடையில் தோல்விகளைக் கண்டாலும் அடுத்தமுறை இன்னும் வீரியமாக தன் செயல்பாடுகளை கவனத்துடனும் துல்லியத்துடனும் அமைத்துக்கொள்கிறது. உலகிலேயே மிகக் குறைந்த செலவில், சுயமான தொழில்நுட்பங்களை உருவாக்கியும் வருகிறது. திருவனந்தபுரம் அருகே தும்பா கடற்கரையில் ஒரு தேவாலயத்துக்குச் சொந்தமான நிலத்தில் 1963 நவம்பரில் எடுத்துவைக்கப்பட்ட முதல் அடியில்தான் இஸ்ரோவின் சாதனைப் பயணம் தொடங்கியது.
அந்த முயற்சிக்குத் தேவையான சவுண்டிங் ராக்கெட்டின் முனைப்பகுதி சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட ஒளிப்படம் மிகப் பிரபலம். அதேபோல் காந்தப் புல சூழல் இல்லாத வகையில் பரிசோதனை நடத்துவதற்காக ஆப்பிள் செயற்கைக்கோள் மாட்டுவண்டியில் கொண்டுசெல்லப்பட்டது. இப்படி படிப்படியாக அடியெடுத்து வைத்த இஸ்ரோ, இன்றைக்கு நிலவுக்குக்கு சந்திரயான் 1, 2, 3, மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் மங்கள்யான், சூரியனை ஆராய ஆதித்யா எல்1, ககன்யான் குறித்த பரிசோதனைகள் வரை இஸ்ரோ வளர்ந்துள்ளது.
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய் குறித்து யு.ஆர்.ராவ், கே.கஸ்தூரிரங்கன், மிருணாளினி சாராபாய் ஆகியோர் விரிவான கட்டுரைகளை எழுதியுள்ளனர். சதிஷ் தவான் குறித்த கட்டுரை, மயில்சாமி அண்ணாதுரை எழுதிய கட்டுரை, கே.சிவன் குறித்த கட்டுரை, நூல் வெளியானபோது இஸ்ரோ தலைவராக இருந்த சோம்நாத், அப்துல் கலாம் ஆகியோரின் பேட்டிகள், இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வர் ஆகியோரைப் பற்றிய கட்டுரை என முக்கிய அம்சங்கள் நூலில் விரிவாக அணிவகுத்துள்ளன.
இந்தியாவின் பல்வேறு ஏவூர்திகள், முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா தொடங்கி, செயற்கைக்கோள்களின் பயன்கள், நிலவில் பிரக்யான் உலாவி தரையிறங்கியது, ககன்யான் வரை அனைத்து அம்சங்களும் பதிவசெய்யப்பட்டுள்ளன. அனைத்துமே கட்டுரைகளாக அல்லாமல் பல்வேறுபட்ட தரவுகள், வரைபடங்கள், விளக்கப் படங்களுடன் இந்த நூல் அமைந்துள்ளது. இஸ்ரோவின் 60 ஆண்டுகளைக் கடந்த வெற்றிப் பயணத்தை இந்த நூல் படைத்துள்ளது.
இஸ்ரோவின் வளர்ச்சியில் தென்னிந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. புவியியல் ரீதியில் கடல் சூழ்ந்த தீபகற்பப் பகுதியாக இருப்பது, நில நடுக்கோட்டுக்கு அருகே இருப்பது போன்ற காரணங்களால் திருவனந்தபுரம், பெங்களூரு, ஹரிகோட்டா, தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் புரொபல்ஷன் வளாகத்தை அடுத்து தற்போது குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளமும் அமைக்கப்பட உள்ளது. இஸ்ரோவை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்திய ஆளுமைகள், செயல்வீரர்கள் பலர் தமிழர்கள், தென்னிந்தியர்கள்.
முன்னோடித் திட்டங்களின் இயக்குநர்களாக இருந்தவர்கள் மயில்சாமி அண்ணாதுரை, அருணன், வீரமுத்துவேல், நிகர் ஷாஜி உள்ளிட்ட தமிழர்கள். கே.சிவனைத் தொடர்ந்து தற்போது இஸ்ரோ தலைவர் நாராயணனும் தமிழர். இப்படி இஸ்ரோவுடன் தொடர்புடைய திட்டங்கள், இடங்கள், ஆளுமைகள், வளர்ச்சி குறித்த விரிவான தகவல்கள், 500க்கும் மேற்பட்ட அரிய ஒளிப்படங்களுடன் இந்த நூல் உருவாகியுள்ளது.
பல விண்வெளித் தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் திறனுடன், இன்றைக்குப் பல நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவும் தளமாக இஸ்ரோ உள்ளது. தனியார் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியிலும் இஸ்ரோ சமீப காலமாக இறங்கியுள்ளது. இது ஓர் அறிவியல் நூல் என்றாலும், துல்லியமான தகவல் சார்ந்து தேடுபவர்களுக்கும், இந்திய அறிவியலில்-விண்வெளி ஆராய்ச்சியில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கும் நூலாக இருக்கும்.
ISRO: Exploring the New Frontiers: To the Moon, the Sun & Beyond
The Hindu group
publishing private limited
விலை ரூ. 2999
தொடர்புக்கு: https: //publications.thehindugroup.com/bookstore/
- தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in