வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களைப் பற்றிய வரலாற்றைச் சொல்லும் புத்தகம். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, வடகிழக்கில் அசாம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா ஆகிய 4 மாநிலங்கள் மட்டுமே இருந்தன.
பின்னர் பிரிக்கப்பட்டு மேலும் சில மாநிலங்கள் உருவாகின. இதில் அசாம் மாநிலத்துக்குப் பெரும் வரலாறு இருக்கிறது. அதன் கலை, இலக்கியம், பண்பாடு அனைத்தும் தாய்லாந்து நாட்டை சார்ந்தவை என்பதையும் பல்வேறு காலகட்டங்களில் அப்பகுதியின் அரசர்கள், அவர்கள் எதிர்கொண்ட போர்கள் உள்ளிட்ட விஷயங்களை, வரலாற்றுத் தகவல்களோடு விவரிக்கிறார் ஆசிரியர்.
அதே போல நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், சிக்கிம் பிறந்த வரலாறு ஆகியவற்றைப் பேசியிருக்கிற ஆசிரியர், நேபாளத்தின் வீர வரலாறு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் தேவைகள் என்ன என்பதையும் இதில் குறிப்பிட்டிருக்கிறார். பல தகவல்கள் வியப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன. - அழகு
வட கிழக்கு இந்தியா
இரா. உதய்பாஸ்கர்
அசோக்குமார் பதிப்பகம்
விலை ரூ.350
தொடர்புக்கு: 9940678478
பழங்குடியினரின் உயரிய பெருமைகள்: இந்திய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்பின் அடிப்படையில் இந்த ஆய்வு நூல் எழுதப்பட்டுள்ளது. திரௌபதி முர்மு (2022), கே.ஆர்.நாராயணன் (1996), ராம்நாத் கோவிந்த் (2017) ஆகியோர் நாட்டின் இந்த உயர் பதவிக்கு வந்தபோது, பட்டியலினத்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் என்ற பெருமையை வழங்கியவர்கள் நாங்கள் தான் என்பவர்களைப் பார்த்து, “பட்டியலினத்தவர்கள் அரசின் உயரிய பெருமைகளுக்கு தகுதியற்றவர்கள் என்று கூற வருகிறீர்களா?” என்ற கேள்வியை எழுப்புகிறார் நூலாசிரியர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் இப்போதும் கூட தங்கள் இருக்கையில் அமர அனுமதி மறுக்கப்படுவது பற்றியும் இந்நூல் பேசுகிறது. உண்மையில் பட்டியலின/பழங்குடியின மக்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் என்பதை நிறுவ இந்த நூல் முற்படும் விதத்தில் புதிய ஆய்வுப் பாதைகள் நமக்குக் கிடைக்கின்றன.
வடமேற்கு இந்திய பலூச்சிகள் தொடங்கி இமாச்சலின் காடிஸ், ஜார்கண்டின் செரோஸ், வடகிழக்கின் நாகர்கள், தவிர, ராஜபுத்திரர்கள், தென்னிந்தியாவின் கோண்டு இன மக்கள், பறையர் சமூகத்தினர் என ஏராளமான பட்டியலினத்தவர்களும், விவசாயம், வேட்டை, உணவு சேகரித்தல் மூலம் வாழ்க்கை நடத்திய இவர்கள் இந்தியா முழுவதும்பெரும் நிலப்பரப்பிற்கு சொந்தக்காரர்களாக இருந்திருக்கிறார்கள், வைதீக சமயத்தை மறுத்ததோடு சமண, பௌத்த கொள்கைகளை பின்பற்றி தனித்து இயங்கியனார்கள் என்று என்சிஆர்டி தரவுகளை முன்வைத்து பெரும்விவாதங்களை முன்னெடுக்கிறார் பேரா.கேப்டன் எஸ்.கலியபெருமாள்.
அவர்கள் அரசர்களாகவும் இருந்திருக்கும் வாய்ப்புகளுக்கான கலாச்சார, வாழ்வியல்புகளை தகர்க்க முற்பட்ட மைய நீரோட்ட சாதி, தீண்டாமை சதிகளைப் பற்றியும் இவர் தர்க்கரீதியாக பேசிச்செல்லும் இந்நூலை மிலிந்தா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.- பால்நிலவன்
நாடாளும் இந்தியப் பழங்குடி
பேரா.கேப்டன்
எஸ்.கலியபெருமாள்
மிலிந்தா பதிப்பகம்,
விலை ரூ.150
தொடர்புக்கு: 9176186934