இலக்கியம்

உண்மைச் சம்பவ பின்னணியில் ஒரு நாவல் | நூல் நயம்

செ. ஏக்நாத்ராஜ்

தொன்மத்தைப் பின்னணியாகக் கொண்டு நாவல்கள் வெளிவருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வெளியாகி இருக்கிற ‘தொரசாமி’ நாவலும், தொன்மத்தை முன் வைத்து சாம்பவர் மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது.

கதையின் நாயகனான மதிக்குமாரின் வழியாக சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிற இந்நாவல், கல்வி மட்டுமே சாதிய இழிவை அழிக்கும் ஆயுதம் என்பதை ஆழமாகச் சொல்கிறது. ஏற்கெனவே சொல்லப்பட்ட விஷயமாக இருந்தாலும் இன்னும் சாதிக்குள் ஆழ்ந்து கிடக்கிற, இந்த சமூகத்துக்குத் தொடர்ந்து கூவிக்கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதைப் பிரச்சாரமாக இல்லாமல் கதையோடு இணைந்து உரக்கச் சொல்கிறது இந்நாவல். அதனடிப்படையில் இந்த நாவல் பேசும் விஷயங்கள் முக்கியமானவை.

நாகர்கோவில் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிற இந்நாவலில் அந்த பகுதி வட்டார வழக்கு சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது. கதைக்குள் வருகிற, மதம் பற்றி விமர்சிக்கிற நண்பர்களான மாணிக்கம், ஏசு, இங்கிலாந்தில் இருந்து வரும் ‘தொரசாமி’யின் பேரன் ஆர்ச்சிபோல்டு, ’கணக்கு’ சொல்லும் ஸ்டாலின், மதிக்கு உதவுகிற பிருந்தா மேடம், பட்டிமன்றம் பேசும் பேராசிரியர் கலைவாணன், சாதியால் பிரிகிற திவ்யா மீதான மதியின் காதல் என கதையில் வரும் கதாபாத்திரங்களும் கிளைக்கதைகளும் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.

‘களவையும் கற்பையும் போற்றி வளர்த்த தமிழ்ச் சமூகம்தான். ஆனா, இப்ப கொஞ்சம் கெட்டுப் போய் கெடக்கு’ என்று போகிற போக்கில் அவர் சொல்லிவிட்டுச் செல்கிற சில அரசியல் உரையாடல்கள் கவனம் ஈர்க்கின்றன. முதல் நாவலை எழுதியிருக்கிற இந்நாவலாசிரியர் ஜெ.அன்புக்கு மொழி வளமும் இனிமையான, எள்ளலான எழுத்து நடையும் சிறப்பாகக் கைகூடி வந்திருக்கிறது. அதுவே கதைக்குள் இழுத்துச் செல்வது இந்நாவலின் சிறப்பு.

தொரசாமி
ஜெ.அன்பு
அறம் பதிப்பகம்
விலை ரூ. 299.
தொடர்புக்கு: 9150724997

SCROLL FOR NEXT