தமிழின் பெருமைமிகு அறநூலான திருக்குறளில் பொதிந்துள்ள மேலாண்மை தத்துவத்தை அகழ்ந்தெடுத்து, வாசகர்களின் தலைமைப் பண்பையும், ஆளுமையையும் வளர்க்க குறள் காட்டும் வழிகளைத் திரட்டி, வாரா வாரம் இந்து தமிழ் திசை நாளதழின் ‘வணிகவீதி’ இணைப்பிதழில் எழுதினார் சோம வீரப்பன்.
வாசகர்களிடம் பெரும் வரவேற்றைப் பெற்ற இந்தத் தொடர், ‘குறள் இனிது’ என்ற தலைப்பில் 2018ஆம் ஆண்டு இந்து தமிழ் திசை பதிப்பகத்தின் சார்பில் நூலாக வெளிவந்ததது. 125 கட்டுரைகளைக் கொண்ட இந்த நூல் கடந்த ஏழு ஆண்டுகளில் எட்டு பதிப்புகளுடன் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
இந்நூலில் இடம்பெற்ற 60 கட்டுரைகள் மட்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 'The Art of jogging with your Boss' எனும் தலைப்பில் முதல் பாகமாக வெளியானது. பின்னர் இந்நூல் இந்தி, பஞ்சாபி மற்றும் ஓடியா ஆகிய மொழிகளில் வெளியானது. விரைவில், பிரெஞ்சு, குஜராத்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளிவர உள்ளது.
இந்நிலையில், ‘குறள் இனிது' நூலில் இடம்பெற்ற மேலும் 65 கட்டுரைகள் ‘Trusting & Entrusting' எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் இரண்டாம் பாகமாக தற்போது வெளிவந்துள்ளது. ஈரடி குறளின் சாரத்தை பழச்சாறுபோல பிழிந்து தருவது சாதாரணமான பணியல்ல. ஆனால் அதை திறம்படச் செய்துள்ளார் நூலாசிரியர் சோம வீரப்பன். அவருக்கே உரிய பகடியான நடையுடன் திருக்குறள் வலியுறுத்தும் மேலாண்மை கருத்துகளை மிகவும் சுவையாகவும், எளிமையாகவும் எழுதியுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற மேலாண்மைத் துறை நிபுணர்களின் கருத்துகளை திருக்குறள் வலியுறுத்தும் கருத்துகளோடு ஒப்பிட்டு, உலகம் முழுவதிலுள்ள மனித குலத்துக்கு வழிகாட்டும் சான்றோனாக திருவள்ளுவரை உயர்த்திப் பிடிக்கிறார். தனி நபர்கள், அரசு, தனியார் நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள் முதல் உலகெங்கும் கிளைகளைக் கொண்ட பன்னாட்டு பெருந்தொழில் நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் பணிபுரியும் அனைத்து வகைத் தொழிலாளர்கள், ஊழியர்கள், மேலாளர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் வணிகம், பொருளியல், மேலாண்மைத் துறைகளில் பயிலும் மாணவர்கள் என அனைவரும் ‘மேலாண்மை’ எனும் ஆளுமைத் திறனில் சிறந்து விளங்குவது எப்படி என்பதற்கு சோம வீரப்பன் எழுதியுள்ள இந்நூல் நல்ல வழிகாட்டியாக திகழ்கிறது. இந்நூலை வாசிப்பது நிச்சயமாக அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
TRUSTING & ENTRUSTING
சோம. வீரப்பன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.250
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562