வண்டியை விரைந்து ஓட்டிக்கொண்டிருந்தேன். இவ்வளவு வேகமாக இதுவரை நான் ஒரு நாள்கூட ஓட்டியது கிடையாது. நாற்பதைத் தாண்டி ஒருபோதும் வேகம் போகக் கூடாது என்பது கணவர் மற்றும் பிள்ளைகளின் உத்தரவு. எப்போதாவது ஐம்பதில் போவேன்.
அதைத் தாண்டி போனது கிடையாது. ஸ்பீடாமீட்டரைப் பார்ப்பதை வலுக்கட்டாயமாகத் தவிர்த்தேன். திரைப்படங்களில் வரும் கதாநாயகர்களைப் போல எதிர்படும் தடைகளை இடமும் வலமுமாய் ஒதுக்கி ஒதுக்கி விரைந்து கொண்டிருந்தேன். ஒரு சாகச மனோபாவம் எனக்குள் ஏற்பட்டிருந்ததை என்னால் நன்றாக உணர முடிந்தது.
நல்ல அகலமான சாலைதான். நடுவில் வெள்ளைக்கோடு போட்டுச் சாலையை இரண்டாக்கிக் காட்டியிருந்தார்கள். அதனால், எதிர்திசையிலிருந்து வரும் வாகனங்களைப் பற்றிய கவலை இல்லாமல் இருந்தது. பின்னால் இருந்தவன் எதுவும் பேசவில்லை. இதையெல்லாம் அவன் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டான். என்னுடைய இந்தச் செய்கையும் இந்த வேகமும் அவனுக்கு அதிகப்படியான வியப்பையும் ஆறுதலையும் தந்திருக்கக்கூடும் என்று தோன்றியது. “தம்பி கவலப்படாத. பரீச்ச எழுதிடலாம்.” “சரிக்கா.”
அக்காவா? ஐம்பத்து நாலு வயதாகுது எனக்கு. நான் அக்காவா? என் வேகத்தைப் பார்த்துத் தப்புக் கணக்கு போட்டு விட்டானோ! உச்சந்தலை முடியெல்லாம்கூட வெள்ளையாய்த் தெரிகிறது. அதைப்பார்த்தும்கூட அக்கா என்கிறான். பரவாயில்லை சொல்லிவிட்டுப் போகட்டும். இவ்வளவு நேரமும் பொத்தாம் பொதுவாய் வாங்க போங்க என்றே பேசிக்கொண்டிருந்தவன் இப்போதுதான் சற்று நெருங்கிவந்து அக்கா என்கிறான்.
அந்த அளவிற்கான நம்பிக்கை இந்த மிகக் குறுகிய காலத்திற்குள் என் மீது அவனுக்கு ஏற்பட்டிருப்பது நல்ல விஷயம்தானே. முன்பின் தெரியாத ஒருவரை உறவாய் நினைப்பதும் உறவுமுறை சொல்லி அழைப்பதும் அந்த இருவர் மனதிலும் நுட்பமான சில மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது. அது அதற்குப் பிறகான அனைத்து விஷயங்களையுமேகூடச் சற்று சுலபமாக்கிவிடுகிறது.
“பன்னிரண்டாம் வகுப்புப் பரீச்சை எவ்வளவு முக்கியமானது. இவ்வளவு தூரம் வேற போகவேண்டியிருக்கு. மொத நாளே எல்லாத்தையும் எடுத்து வச்சிருக்க வேண்டா மாப்பா?” என்னுடைய வார்த்தைகள் எதுவும் அவனை மறுபடியும் கலவரப்படுத்திவிடக் கூடாது என நினைத்து மென்மையான தொனியில் கேட்டேன். அவனிடமிருந்து பதிலேதும் வரவில்லை. எங்கள் விரைவான பயணத்திற்கு இடையூறாகப் பெரியதொரு பசுக்கூட்டம் சாலையை அடைத்தபடி சென்று கொண்டிருந்தது.
இதைக் கடந்து செல்வது அவ்வளவு சுலபமான காரியமாகப்படவில்லை. வண்டியின் ஒலிப்பானை அழுத்தியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கூட்டத்தை ஊடறுத்து முன்னேறி அப்பாடா என நிமிர்ந்து பார்த்தால் சற்றுத் தொலைவில் மற்றொரு பசுக்கூட்டம், அதற்கும் முன்னால் இன்னொன்று என அரை கிலோமீட்டர் இடைவெளியில் நான்கைந்து கிடைமாட்டுக் கூட்டங்கள் போய்க்கொண்டிருந்தன.
இன்றைக்கென்று பார்த்தா இப்படியெல்லாம் நடக்க வேண்டும். பின்சீட்டில் உட்கார்ந்திருந்த அவன் இருப்பு கொள்ளாமல் தவித்தான். அவனிடம் ஏதாவது பேசினால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. “இவங்கல்லாம் ராமநாதபுரம் மாவட்டத்து லேருந்து வந்து இங்க கெடை போடுறவங்க.
மழைக்காலம் முச்சூடும் காட்டுல இருப்பாங்க. இப்ப சிதம்பரம் பக்கம் கெடைய எடம் மாத்திக் கொண்டுபோறாங்க. அங்கயெல்லாம் தையில நெல்லு அறுவடையாகி தாளடியா வெதச்ச பச்சப்பயறு உளுந்தயும் அறுவடை செய்யிற நேரம் இது. மாடுகளுக்கு நல்ல மேய்சல் இருக்கும். வயலு வரப்புல கெடைபோட்டுக் கெடை கூலியும் வாங்கலாம். அதான் இப்புடி ஓட்டிக்கிட்டு போறாங்க.” கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்த்தேன். மலங்க மலங்க விழித்தபடி மந்தை மாடுகளையும் சாலையையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“கவலப் படாத தம்பி போயிறலாம்” என்றேன். பத்து மணியாகத் தோராயமாக இன்னும் முப்பத்தைந்து நாற்பது நிமிடங்கள் இருக்குமென்று தோன்றியது. அவன் ஏதோ சொல்வதுபோல இருந்தது. கெடைமாடுகள் பலவற்றின் கழுத்தில் மணி கட்டப்பட்டிருந்தது. மாடுகளின் நடைவேகத்திற்கு ஏற்றபடி ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக ஒலித்தன.
அந்த மணியோசை, மாடுகளிள் குளம்படி ஓசை, சிறுகன்றுகளின் குணாரிக்க ஓசை, தாய் பசுக்களின் கமறல் ஓசை, கூடவே அவற்றைக் கடக்கும் வண்டிகளின் ஹாரன் சத்தம் என எல்லாம் கலந்த அந்த இரைச்சலில் அவன் என்ன சொன்னான் என்பது தெரியவில்லை.
ஒருவழியாகக் கெடைமாட்டுத் தடைகளைக் கடந்து வெளியேறினோம். மறுபடியும் வேகத்தைக் கூட்ட ஆக்ஸலேட்டரைத் திருகினேன். அவன் என்ன சொன்னான் என்று நான் கேட்கவில்லை. அவனும் எதுவும் வாய் திறக்கவில்லை. கம்மாபுரம் கடைத்தெருவைத் தாண்டிப் போகப் போக அவன் கழுத்து நீண்டதுபோலத் தோன்றியது. கையும் காலும் பரபரத்தது. விட்டால் வண்டியிலிருந்து குதித்து வண்டியை விடவும் வேகமாய் ஓடிவிடுவான் போலத் தோன்றியது.
“தோ அங்கதான்கா வீடு. அதோ மதவு இருக்கு பாருங்க.” சிறு சிறு வீடுகள் வரிசையாய் இருந்தன. வீட்டுக்கும் ரோட்டுக்கும் இடையே வெங்காயத் தாமரை பூத்த ஓடை. “அந்த ரெண்டாவது வீடுதான்கா.” நான் வண்டியை நிறுத்துவதற்குள் அவன் குதித்தேவிட்டான். இவன் வண்டியிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்துவிட்டு ஓடிவந்தாள் அந்தப் பெண்.
அவளுடைய கையில் இவன் தவறி விட்டுச்சென்ற ஹால்டிக்கெட் இருந்தது. “ஏன்டா இங்க வார? அப்புடியே போயி செத்து ஒழிஞ்சிருக்க வேண்டியதுதான?” அவள் மிகுந்த கோபத்துடன் இருந்தாள். அவள் பேசியது எதையும் அவன் காதில் வாங்கிக் கொண்டதாய்த் தெரியவில்லை.
அவள் நீட்டிய ஹால்டிக்கெட்டை வெடுக்கென பறித்துக்கொண்டு ஓடிவந்தான். அதற்குள் வண்டியைத் திருப்பிக்கொண்டேன். தாவி ஏறிக்கொண்டான். “நீங்க யாருன்னே தெரியல. ரொம்ப ரொம்ப நன்றி மேடம். நீங்க நல்லா இருப்பீங்க.” பின்னாலிருந்து வண்டியைத் துரத்தி வந்தது அந்தப் பெண்ணின் குரல். “தம்பி, அந்தப் பொண்ணு யாருப்பா?” “எங்க அக்கா.” ஹால்டிக்கெட்டைக் கையில் வாங்கியதும் அவனுக்குச் சற்றுத் தெம்பு வந்திருக்க வேண்டும்.
“பத்து மணிக்குள்ள போயிடலாமாக்கா?” என்றான். “போயிடலாம், போயிடலாம் கவலப்படாத” என்றபடி கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்த்தேன். என்னிடம் பேச ஆசைப்படுபவனைப் போலப் பக்கவாட்டில் தலையைச் சாய்த்து ஆர்வமாய் என்னைப் பார்த்துக்கொண்டு வந்தான். அவனே சொல்லட்டுமென்று வண்டி ஓட்டுவதில் கவனமாயிருந்தேன்.
“ராத்திரி வீட்டுல சண்டக்கா” என்றான். “அம்மாவுக்கும் அப்பாவுக்குமா?” “அம்மா இல்ல. அம்மா செத்து ஒரு வருசம் ஆகப்போகுது.” “ஐய்யய்யோ தெரியாம கேட்டுட்டம்பா.” “பரவால்லக்கா. அம்மா இருந்தா இப்புடி யெல்லாம் நடக்காது.” அம்மா எப்புடித் தவறுனாங்க என்று உதடுவரை வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கினேன். தேர்வு எழுதப்போகும் பிள்ளையிடம் இதுபோன்ற விஷயங்களைப் பற்றிக் கேட்டு வருத்தப்பட வைக்க வேண்டாம் என நினைத்தேன்.
ஆனால், அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. எல்லாவற்றையும் என்னிடம் கொட்டினால்தான் மனம் ஆறுதலடையும் என்பதுபோலச் சொல்லிக்கொண்டிருந்தான். அவனுடைய அக்காவின் திருமணத்திற்காக அவன் அம்மா சிறுகச்சிறுகச் சேர்த்துத் தோடு வாங்கி வைத்திருந்திருக்கிறார். சொல்லாமல் கொள்ளாமல் அதை எடுத்துக்கொண்டுபோய் விற்றுவிட்டு அவனுடைய அப்பா தனக்கு ஒரு வண்டி வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்.
அதனால் ஏற்பட்ட சண்டையில் கொத்துவேலை செய்யும் கரணையால் அம்மாவை மண்டையில் அடித்திருக்கிறார். மண்டை பிளந்துவிட்டது. சிதம்பரம் ஆஸ்பிட்டலுக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துபோய் விட்டார். வேண்டுமென்றே செய்யவில்லை. குடிபோதையில் செய்தது. தவிரவும் ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கத் தகப்பனும் இல்லாமல் போய்விடக் கூடாதே என்று ஊரும் உறவுகளும் சேர்ந்து முடிவெடுத் துள்ளனர்.
பரணிலிருந்து மண்வெட்டி விழுந்து மண்டை பிளந்துவிட்டதாகப் பொய் சொல்லி கொலையை மறைத்துவிட்டார்கள். அம்மாவுக்குப் பிறகு அக்காதான் அவனுக்கு எல்லாம். தை மாதம் அதே வரிசையில் நான்காவது வீட்டில் இருக்கும் உறவுக்கார மாமா இவன் அக்காவை விரும்பி கல்யாணம் செய்துகொண்டிருக்கிறார். அது இவனுடைய அப்பாவுக்குப் பிடிக்கவில்லை.
இனிமேல் இந்த வாசல்படியில் அவள் அடிவைக்கக் கூடாது என்றாராம். அப்பாவுக்குத் தெரியாமல் அந்தப் பெண் தன் தம்பிக்காரனைக் கவனித்துக்கொண்டிருக்கிறாள். நேற்று அவள் வீட்டுக்குள் இருந்த நேரம் அப்பா வந்துவிட்டாராம். நேரில் பார்த்துவிட்டதால் பெரும் சண்டையாகிவிட்டது.
அவனுடைய அக்காவையும் மாமாவையும் வெட்டுவேன் குத்துவேன் என்று கத்தி, கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு துரத்தியிருக்கிறார். அந்தக் கலவரத்தில் இரவே எதையும் எடுத்துவைக்க முடியவில்லை இவனால். காலையில் எழுந்து குளித்து முடித்துக் கிளம்பியபோது அவனுடைய அப்பா நான் கொண்டுபோய் விடுகிறேன் என்னுடன் வா என்று அழைத் திருக்கிறார்.
இரவு குடித்த சரக்கின் போதை முழுமையாக இறங்காத நிலையில் மறுபடியும் சண்டைபோட ஆரம்பித்து விடுவரோ என்கிற பயத்தில் இருந்தவன் வாடா என்றதும் மறுபேச்சு இல்லாமல் ஓடிவந்து வண்டியில் உட்கார்ந்துவிட்டான். ஹோட்டல் கடையில் இட்லி சாப்பிட வைத்து, தேர்வு மையத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டுப் போய்விட்டார்.
அதன் பிறகுதான் அவனுக்கு ஹால்டிக்கெட் இல்லாதது தெரியவந்திருக்கிறது. எதையும் விட்டுவிடக் கூடாது என்பதுபோல எல்லாவற்றையும் சொல்லிமுடித்தான். கிட்டத்தட்ட பள்ளியை நெருங்கியிருந்தோம். பள்ளி வளாகமெங்கும் அமைதியாக இருந்தது. எல்லாரும் உள்ளே போய்விட்டார்கள்.
அநேகமாக வினாத்தாள் கூடக் கொடுத்திருக்கலாம் என்று நினைத்தேன். எங்களை அனுமதிக்கவில்லை. தலைமை யாசிரியரைப் பார்த்து தாமதத்திற்கான காரணமாக எதை எதையோ சொல்லி ஒருவழியாக அனுமதி பெற்று உள்ளே ஓடு என்றேன். அந்த அமளிதுமளியான வேளை யிலும் “ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்கா” என்றான். “என்ன?” “அழுதுகிட்டே எப்புடியாவது என்ன பரீச்ச எழுத வையிம்மான்னு எங்கம்மாவ நெனைச்சி வேண்டுனன். அப்பதான் நீங்க வந்தீங்க.
எங்கம்மாதான் ஒங்க உருவத்துல வந்துருக் காங்கன்னு நெனைக்கிறன். ஒங்கள ஒருதடவ அம்மான்னு கூப்புடவா?” எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரிய வில்லை. வாயடைத்துப் போய் நின்றேன். என் அனுமதிக்காக அவன் காத்திருக்கவில்லை.
“அம்மா, ரொம்ப நன்றிம்மா” என்றபடியே தேர்வறைக்குள் சென்று மறைந்தான்.
பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே வந்தேன். மனது பாரமாக இருந்தது. உடல் சோர்ந்து போயிருந்தது. கடிகாரத்தைப் பார்த்தேன். மணி பத்து பத்து. இதற்குமேல் பள்ளிக்குச் சென்று தாமதத்திற்கான காரணத்தை யாரிடமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அலைபேசியில் உதவித் தலைமையாசிரியரை அழைத்துத் தற்செயல் விடுப்பு சொன்னேன். வீட்டுக்கு வந்து படுத்து யோசிக்கையில்தான் தெரிந்தது அவனுடைய பெயரைக்கூட நான் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை என்பது.
(நதி அசையும்)
- thamizhselvi1971@gmail.com