இலக்கியம்

அறிவியல் கல்விக்கு ஒரு வழிகாட்டி | நூல் வெளி

த.வி.வெங்கடேஸ்வரன்

நம்​முடைய நாட்​டில் துர​திர்​ஷ்ட​வச​மாக அறி​வியல் கல்வி என்று சொன்​னால் கைகளால் செய்து பார்க்​கும் செயல்​பாடு​களுக்​குப் பெரிய மதிப்​புக் கொடுப்​ப​தில்​லை. ஒரு பேச்​சாக, தத்​து​வ​மாக அல்​லது ஒரு கருத்​துரு​வாகச் சொல்​வதை மட்​டும்​தான் நாம் அறி​வியல் என்று நினைத்​துக் கொண்​டிருக்​கிறோம். அதாவது ஆங்​கிலத்​தில் Theoretical Science என்று சொல்​லு​வார்​கள். அதாவது கோட்​பாடு அளவி​லான அறி​வியல். இதைத்​தான் அறி​வியல் என்று நாம் நினைத்​துக் கொண்​டிருக்​கிறோம்.

செய்து பார்த்​தல் போன்ற விஷ​யங்​களை நாம் பள்​ளிப் பாடப்​புத்​தகங்​களில் வைத்​தால் கூட, அவை எல்​லாம் ஒரு Demonstration - செய்து காட்​டு​தல் என்ற அளவில் மட்​டுமே நடை​பெறுகின்​றன. நமது கைகளால் பல்​வேறு செயல்​பாடு​களை மிக​வும் நுணுக்​க​மாக செய்து பார்ப்​பது​தான் அறி​வியல் கல்வி கற்​றலில் மிக​வும் முக்​கிய​மான அம்​சம்.

இதனை நாம் கவனத்​தில் கொள்​வதே இல்​லை. அறி​வியல் கல்​வி​யியல் பார்​வை​யில் செய்து காட்​டல் என்​பது வேறு; செய்து பார்ப்​பது என்​பது வேறு. இரண்​டும் ஒன்​றல்ல. பெரும்​பாலும் இங்கு செய்து காட்​டல் மட்​டுமே நடை​பெறுகிறதே தவிர, செய்து பார்த்தல் நடை​பெறு​வது இல்​லை.

‘கைகளால் வேலை செய்​பவர்​கள் தாழ்ந்​தவர்​கள் - மூளை​யால் வேலை செய்​பவர்​கள் தான் உயர்ந்​தவர்​கள்’ என்ற பொதுக்​கருத்து நம்​முடைய சமு​தா​யத்​தில் இருக்​கக்​கூடிய மனநிலை. அறி​வியல் கல்வி கற்​றலிலும் இதன் பின்​னணி உள்​ளதை நாம் புரிந்​து​கொள்ள முடி​யும்.

இந்​தப் பொதுக்​கருத்தை அறி​வியல் கல்விக்​குள்​ளே​யும் நம்மை அறி​யாமலேயே நாம் புகுத்தி விட்​டோம். இந்​தக் கருத்​தைக் களைய வேண்​டும் என்று அறி​வியல் கல்வி மீது ஆர்​வம் கொண்ட அனை​வரும் கூறி வரு​கின்​றனர். அறி​விய​லா​ளர்​கள் அனை​வரும இந்​திய அறி​வியலினுடைய மிகப்​பெரிய சவால் என்று சொல்​லக்​கூடிய​வற்​றில் மிக முக்​கிய​மான பிரச்​சினை​யாக இதனைக் குறிப்​பிடு​கின்​றனர்.

நாம் ஓர் ஆய்​வைச் செய்ய வேண்​டும் என்​றால் நமக்கு ஆய்​வுக்​கான கருவி தேவை. அந்த ஆய்​வுக் கருவி எங்​கேயோ, யாரோ செய்து வைத்​திருக்க மாட்​டார்​கள். நாம்​தான் அந்​தக் கரு​வியை உரு​வாக்க வேண்​டும். கடைகளுக்​குச் சென்று கரு​வியை வாங்க முடி​யாது. அம்​மீட்​டர் (Ammeter) போன்ற கருவி​களை​யெல்​லாம் கடைகளில்​தானே வாங்​கு​கிறார்​கள் என்று சிலர் நினைக்​கலாம். ஆம், அதை கடைகளில் வாங்​கு​வார்​கள்​தான்.

ஆனால் முதன்​முதலில் அந்​தக் கரு​வியைக் கண்​டு​பிடித்​தது எப்​படி? அதை முதலில் எப்​படித் தயாரித்​தார்​கள்? என்​பதை நாம் புரிந்து கொள்ள வேண்​டும். அதாவது நாம் ஒரு புது விஷ​யத்தை ஆராய்ச்சி செய்ய வேண்​டுமென்​றால், அதற்கு வேண்​டிய நுணுக்​க​மான கரு​வியை நம்​முடைய பரிசோதனைக் கூடத்​திலேயே நாமே உரு​வாக்க வேண்​டும்.

அறி​வியலில் அது முக்​கிய​மான ஒரு திறன். அப்​படிப்​பட்ட திறனை வளர்ப்​ப​தற்​கான பல முயற்​சிகள் அவசி​யம். அம்​மீட்​டர் மட்​டுமல்ல; நாமே செய்து பார்த்து கண்​டறி​யும் திறன்​கள் காரண​மாகவே, இன்று நாம் பயன்​படுத்​தும் அனைத்​துக் கருவி​களும் உரு​வாக்​கப்​பட்​டிருக்​கின்றன என்​பதை நாம் நினை​வில் கொள்ள வேண்​டும்.

அத்​தகைய திறன்​களை நம் மாணவர்​கள் மத்​தி​யில் வளர்த்​தெடுக்​கும் நோக்​கில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள ‘ஹாண்ட்ஸ் ஆன் அஸ்ட்​ரானமி – வகுப்​பறை​யில் அறி​வியல்’ என்ற நூலை மிகச் சிறந்த நூலாக நான் கருதுகிறேன். அறி​வியல் கல்வி கற்​றலில் வானியல் நிகழ்​வு​களை உற்​று​நோக்​குதல் என்​பது மிக​வும் முக்​கிய​மான ஓர் அம்​சம்.

பல்​வேறு வானியல் நிகழ்​வு​கள் பற்றி மிக​வும் எளி​தாகப் புரிந்து கொள்​ளும் வகை​யில் நூலாசிரியர் மா.ஜெகதீஸ்​வரன் இந்த நூலில் பல செயல்​பாடு​களை விளக்​கி​யுள்​ளார். பெரிய அளவில் பொருட்​செலவு இல்​லாமல், நம்​மிடம் இருக்​கக்​கூடிய பொருட்​களை மட்​டுமே பயன்​படுத்​தி, பல்​வேறு செயல்​பாடு​களை மிக எளிமை​யாக செய்து பார்த்​து, புரிந்து கொள்​வது பற்றி இந்த நூலில் விளக்​கப்​பட்​டுள்​ளது.

நான் ஏற்​கெ​னவே குறிப்​பிட்​டது போல், கைகளால் செய்து பார்ப்​பது என்​பது அறி​வியல் கல்வி கற்​றலில் மிக​வும் முக்​கிய​மான ஒரு விஷ​யம். அதற்​கான சுவாரசி​ய​மான பல செயல்​பாடு​களை நூலாசிரியர் இந்த நூலில் தொகுத்​துத் தந்​துள்​ளார். இந்த நூலில் கூறப்​பட்​டிருக்​கும் செயல்​முறை​களை எப்​படிச் செய்​வது என்​பதை நாம் முதலில் கற்​றுக் கொள்ள வேண்​டும். குறிப்​பாக ஆசிரியர்​கள் மற்​றும் அறி​வியல் கல்வி பரப்​புவ​தில் ஆர்​வம் உள்ள அனை​வரும் இந்​தச் செயல்​முறை​களை தாமாக செய்து பார்க்க வேண்​டும்.

முதல் முறை செய்​யும்​போது சில தவறுகள் ஏற்​படலாம். மீண்​டும் மீண்​டும் செய்து பார்க்​கும்​போது அந்​தச் செயல்​முறையை நாம் தெளி​வாகப் புரிந்து கொள்ள முடி​யும். அதன் பின்​னர் மாணவர்​களிடம் இந்த செயல்​முறை​களை செய்து பார்க்​கக் கற்​றுக் கொடுக்க வேண்​டும். இன்​றையப் பள்​ளிக்​கல்விச் செயல்​பாடு​களில் இத்​தகைய முயற்​சிகள் மிக மிக அவசி​யம்.

பள்​ளிக்​கல்விக்கு வெளியே அறி​வியல் இயக்​கங்​கள் போன்ற பல்​வேறு இயக்​கங்​கள் மூல​மாக, பல செயல்​பாட்​டாளர்​கள் செயல்​படு​கிறார்​கள். அவர்​களுக்​கெல்​லாம் மாணவர்​களோடு உரை​யாடும் வாய்ப்பு கிடைக்​கிறது. அத்​தகை​யத் தருணங்​களில் இந்த நூலில் விளக்​கப்​பட்​டுள்ள செயல்​பாடு​கள் உட்​பட, கைகளால் செய்து பார்க்​கக்​கூடிய பல செயல்​பாடு​களைச் செய்து காட்ட வேண்​டும்.

முக்​கிய​மாக மாணவர்​கள் தாமாகவே செய்து பார்க்​கக் கற்​றுக் கொடுக்க வேண்​டும், அவர்​களாகவே செய்து பார்க்​கும்​போது ஏற்​படும் பல சிக்​கல்​களைக் களைவதற்கு உதவ வேண்​டும். அத்​தகைய திறன்​களை வளர்க்க ஜெகதீஸ்​வரன் எழு​தி​யுள்​ள இந்​த நூல்​ பெரிதும்​ உதவும்​. அறி​வியல்​ கல்​வி​யில்​ ஆர்​வம்​ கொண்​ட அனை​வரும்​ அவசியம்​ படிக்​க வேண்​டிய நூல்.

ஹாண்ட்ஸ் ஆன் அஸ்ட்ரானமி
(வகுப்பறையில் வானவியல்)
ம.ஜெகதீஸ்வரன்
ஜெ.எஸ்.ஆர். பதிப்பகம் மற்றும் சுட்டி மீடியா
விலை: ரூ.300
தொடர்புக்கு: 91501 33336

- தொடர்புக்கு: tvv123@gmail.com

SCROLL FOR NEXT