பேச்சுக் கலையில் சிறந்தவர்கள் மேடைகளில் பேசிவிட்டு, கைதட்டல்களை எளிதில் வாங்கிவிட முடியும். ஆனால், அவர்களின் பேச்சை எழுத்தில் கொண்டுவரும்போதுதான் அது சிந்திக்க வைக்கும் பேச்சா, சிந்தனையை மழுங்கடிக்கும் பேச்சா என்பது தெரியவரும்.
மேடைப் பேச்சை முக்கியமானதாகக் கருதி, ஏராளமான புத்தகங்களைப் படித்து, தகவல்களைச் சேகரித்து, பொருத்தமான இடத்தில் அவற்றைச் சேர்த்து, கேட்போர் நினைவில் என்றென்றும் தங்கிவிடுகிறார் ஸ்டாலின் குணசேகரன். புத்தகத் திருவிழாக்களில் அவர் பேசிய அத்தகைய சிறந்த உரைகளைத் தொகுத்து, ‘காகிதப் புரட்சி’ என்கிற பெயரில் கொண்டு வந்திருக்கிறார் வே. குமரவேல்.
இந்த 30 உரைகளும் உலக அளவிலான புத்தகங்களைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் நூலகங்களைப் பற்றியும்தான் இருக்கின்றன. டயரி என்றதும் நம் நினைவுக்குச் சட்டென்று வருபவர் ஆன் ஃப்ராங்க். ஹிட்லர் ஆட்சியின் கொடுமைகளை உலகத்துக்குச் சொன்னது அந்த 15 வயது சிறுமியின் டயரிதான். அதே போல் சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஆனந்த ரங்கம் பிள்ளை, நாள் தவறாமல் 25 ஆண்டுகள் நாட்குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார். அவருடைய எழுத்தின் மூலமே அந்தக் காலக்கட்டத்தின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
பாடப்புத்தகத்தைப் படித்தால் தேர்வில் தேர்ச்சியடையலாம், அதைத் தாண்டி மற்ற புத்தகங்களைப் படித்தால் மனிதனாகலாம் என்று சொல்லி, ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஸ்டாலின் குணசேகரன் அப்பா, டால்ஸ்டாய் எழுதிய குழந்தைகளுக்கான புத்தகத்தைக் கொடுத்திருக்கிறார்.
இந்த நிகழ்வுதான் தான் புத்தகங்களைத் தேடிச் சென்று படிப்பதற்கான காரணமாக அமைந்தது என்று குறிப்பிடும் இவர், ஆசிரியர்களும் பள்ளிகளில் பாடத்தைத் தாண்டியும் புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்க வேண்டும் என்கிறார். சிறை இலக்கியம் என்றால் நேரு, நெல்சன் மண்டேலா, பகத் சிங் போன்றவர்கள் நினைவுக்கு வருவார்கள். சிறைச்சாலையில் நேரு, உலக வரலாற்றை இரண்டு பாகங்களாக எழுதினார்.
சிறைக்குள் இருந்த அவரால் எப்படி உலக வரலாற்றை எழுத முடிந்தது? அவர் ஏற்கெனவே ஏராளமான நூல்களைப் படித்து, குறிப்புகள் எடுத்து, நினைவில் நிறுத்தி வைத்திருந்ததாலேயே எழுத முடிந்தது என்பதைப் படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. புகழ்பெற்ற எழுத்தாளர் டைம் மிஷின் புகழ் ஹெச்.ஜி. வெல்ஸும் உலக வரலாறு புத்தகத்தை எழுதியிருந்தார்.
அமெரிக்க இதழான நியூயார்க் டைம்ஸ், நேருவின் உலக வரலாற்றையும் வெல்ஸின் உலக வரலாற்றையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டது. அதில், ‘நேருவின் பிரம்மாண்டமான உலக வரலாற்றைப் படிக்கும்போது, ஹெச்.ஜி. வெல்ஸ் நம் கண்களுக்குச் சுருங்கிவிடுகிறார்’ என்று சொன்னதோடு, ஆங்கிலத்தையும் நேருவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தது.
அவர்களின் மொழியை ஆங்கிலேயர் அல்லாத இன்னொருவரிடம் கற்றுக்கொள்ளலாம் என்று சொன்னதன் மூலம் நேருவின் எழுத்தாற்றலையும் மொழி வளத்தையும் புரிந்துகொள்ளலாம். இப்படி இந்த நூலில் மார்டின் லூதர் கிங், ஆபிரகாம் லிங்கன், பிரடெரிக் ஏங்கெல்ஸ், தேவநேயப் பாவாணர், உ.வே.சா. பரிதிமாற் கலைஞர், ஜி.ஹெச்.ஹார்டி, டால்ஸ்டாய் போன்ற ஏராளமான அறிஞர்கள் குறித்து சுவாரசியமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. - ஸ்நேகா
காகிதப் புரட்சி,
த. ஸ்டாலின் குணசேகரன்,
நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ்,
விலை: ரூ.600
தொடர்புக்கு: 044 26251968, 26258410