எழுத்தாளரும் பெண்ணிய ஆய்வாளருமான பா.ஜீவசுந்தரி, ‘இந்து தமிழ் திசை’யில் எழுதிய, சமூகம் சார்ந்த சிந்தனைகளைக் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. தொடராக எழுதிய போதே வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், புத்தக வடிவில் இன்னும் கவனம் பெறலாம். பெண், இப்போதும் வேண்டாதவளாகவும் குடும்பத்தில் விரும்பப்படாதவளாகவும் ஏன் இருக்கிறாள் என்று கேள்வி எழுப்புகிற முதல் கட்டுரையிலிருந்து, ‘அதிகாரத்தின் வெளிப்பாடான பாலியல் அத்துமீறல்கள்’ என்கிற கடைசி கட்டுரை வரை ஒவ்வொன்றும் ஆழ்ந்து யோசிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.
‘பாலின பேதமற்ற சமூகம் அமையுமா?’, ‘பெண்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும்’, ‘கருச்சிதைவா... கண்ணியச் சிதைவா...’, ’தாய்ப்பாலும் விற்பனை சரக்கா?’, ‘பெண்களின் சொத்துரிமைகளும் சாதிய சமூகங்களும்’ என்பது உள்பட பல கட்டுரைகள், பெண்களின் பொருளாதார விடுதலை மற்றும் அவர்களின் உரிமை, சுதந்திரம் பற்றி புள்ளி விவரங்களுடன் பேசினாலும், ஒட்டு மொத்த சமூகம் சார்ந்த கட்டுரைகள் என்றே அவற்றைப் பார்க்க முடிகிறது.
நிலம், நீர் என அனைத்தும் நஞ்சாகிக் கொண்டிருக்கும் நிலையில், உணவில் கலப்படம் செய்யப்படும் ரசாயனங்கள், ரெடிமேட் மசாலாக்கள் குறித்து எழுதியிருக்கிற ‘உணவு சார்ந்தது வணிகமல்ல: அறம்!’ என்கிற கட்டுரை, இன்றைய அவசர உலகில் நடக்கும் நிலையைப் பேசுகிறது. ‘மாதவிடாய் விடுமுறை- தேவை ஆழ்ந்த விவாதமும் தீர்வும்’ என்கிற கட்டுரையில் ஆசிரியர் பேசுகிற விஷயமும் அவரின் பார்வையும் விவாதிக்கக் கூடியவை. - ஏக்நாத்
விலக மறுக்கும் திரைகள்
பா.ஜீவசுந்தரி
ஹெர் ஸ்டோரிஸ்
விலை ரூ. 150
தொடர்புக்கு: 9600398660
மின்னல் கீற்றுகளைக் காட்டும் தொகுப்பு: நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தின்போது ஓர் உறுப்பினர் அம்பேத்கரிடம் “உங்கள் கடவுள் யார்?’’ எனக் கேட்டார். மாநில மறுசீரமைப்பு மசோதா-1956 குறித்து நடைபெற்றுக்கொண்டிருந்த விவாதத்தில் இந்தக் கேள்வி தேவையற்றது எனினும், அம்பேத்கரிடமிருந்து உடனடியாகப் பதில் வந்தது: “மக்கள்தான் என் கடவுள்.” இப்படிக் கூறுவதற்கு முன்னும் பின்னும் அம்பேத்கர் வாழ்ந்த வாழ்க்கை, இந்தப் பதில் சிறிதும் ஒப்பனை அற்றது என உணர்த்துகிறது. அம்பேத்கரின் செயல்பாடுகள், உரைகள், அணுகுமுறை போன்றவை குறித்து அறிய முயல்பவர்களுக்கு மின்னல்கீற்றுப் போல இப்படிப் பல நிகழ்வுகள் காணக் கிடைக்கும்.
வாசிப்பவர்களுக்கு உவகையும் ஊக்கமும் அளிக்கத்தக்க அத்தகைய சிறிதும் பெரிதுமான கட்டுரைகளின் தொகுப்பாக ‘பாபாசாகேப் அம்பேத்கரை அறிதல்’ நூல் வெளிவந்துள்ளது. சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரான முனைவர். க. ஜெயபாலன், அம்பேத்கர் குறித்த நிகழ்வுகளில் ஆற்றிய உரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அம்பேத்கரின் சமகால - அவர் காலத்துக்குப் பிந்தைய ஆளுமைகள் அம்பேத்கர் குறித்துப் பகிர்ந்து கொண்டவற்றையும் பதிவு செய்துள்ளது இதன் சிறப்பு. - ஆனந்த் செல்லையா
பாபாசாகேப் அம்பேத்கரை அறிதல்,
முனைவர்
க. ஜெயபாலன்,
பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்,
விலை: ரூ. 320
தொடர்புக்கு: 98847 44460.
வெற்றியைத் தீர்மானிக்கும் மனம் | நம் வெளியீடு: அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம் மற்றும் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இதுவரை வேறு யாரும் முன்வைக்காத புதுமையான மற்றும் தனித்துவமான யோசனைகளை வழங்குவோர் மற்றும் புதிய படைப்புகளை உருவாக்குவோர் அறிவுசார் சொத்துக்களை படைக்கும் படைப்பாளிகளாகக் கருதப்படுகின்றனர்.
தனித்துவம் மிக்க இந்த யோசனைகள் மற்றும் படைப்புகள் பற்றியும், இவற்றால் படைப்பாளிக்கும், சமூகத்துக்கும் ஏற்படும் பலன்கள் பற்றியும் ‘அறிவுசார் சொத்து’ என்ற இந்நூல் பேசுகிறது. இந்நூல் நான்கு பாகங்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது.
மனிதனின் படைப்பாற்றல், நம்மிடம் தோன்றும் புதுமையான சிந்தனைகள், படைப்பாளி என்ற தகுதியைப் பெற நம் அனைவரிடத்திலும் பொதிந்து கிடக்கும் திறன்கள், மனிதனின் படைப்பாற்றல் காரணமாக உருவாகும் படைப்புகளின் பல்வேறு தன்மைகள், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அறிவுசார் சொத்துக்கள் காரணமாகக் கிடைத்துள்ள பலன்கள், அறிவுசார் சொத்து எவ்வாறு வணிகமாக்கப்பட வேண்டும் என்பதற்கான உத்திகள் என அறிவுசார் சொத்து பற்றி மிகவும் விளக்கமாகவும், எளிமையாகவும் நூலாசிரியர் இரா.த.சதீஷ் குமார் கூறியுள்ளார்.
அறிவுசார் சொத்து
இரா.த.சதீஷ் குமார்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.130 ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562
புத்தக வெளியீட்டு விழா | திண்ணை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் புத்தகப் பதிப்புத் துறை எப்படிப்பட்ட மாற்றங்களுக்கு உள்ளாகும் என்பது குறித்து ஆழி பதிப்பகம் சார்பில் 'அச்சம் தவிர்: செயற்கை நுண்ணறிவும் புத்தகப் பதிப்புத் துறையும்' என்கிற மொழிபெயர்ப்பு புத்தகத்தின் வெளியீட்டு விழா 28-06-2025 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது.
லண்டனைச் சேர்ந்த நூலாசிரியர் நதீம் சாதிக், கவிஞர் மனுஷ்ய புத்திரன், ஊடகவியலர் சுகிதா சாராங்கராஜ், அண்ணா நூற்றாண்டு நூலகத் தலைமை நூலகர் எஸ்.காமாட்சி, கல்வியாளர் விஜய் அசோகன் மற்றும் ஆழி செந்தில்நாதன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.