எழுத்துகளால் குவிந்திருக்கும் இலக்கியங்கள் அனைத்தும் ஏதோ ஒன்றை ஆழமாகச் சொல்ல வருகின்றன. அந்த எழுத்தின் வழி ஒரு எழுத்தாளன், தன்னைப் பாதித்த, தாக்கத்தை ஏற்படுத்திய, சமூகத்தின் மீதான கோபத்தை அல்லது அப்படி ஏதும் இல்லாததைப் படைப்புகளாக வெளிகொண்டு வருகிறான்.
அது கவிதையாகவோ, சிறுகதையாகவோ, நாவலாகவோ ஏதோ ஓர் இலக்கிய வடிவத்துக்குள் வந்தடைந்து விடு கிறது. வாசக ரசனையின் அடிப்படையில் அப்படைப்புகள், தங்களுக்கான இடத்தைத் தேடி அடைகின்றன. எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் சிறுகதைகளும் அப்படித்தான்.
பெருவாழ்வு வாழ்ந்த அனுபவம் கொண்ட ஒருவரின் முதிர்ச்சியையும் இப்போதுதான் வாழ்வைத் தொடங்கி இருக்கிற இளைஞனின் ஆர்வத்தையும் உள்ளடக்கியதை போன்ற அவரது கதைகள், தனக்கான இடத்தை தானே கண்டடைந் திருக்கின்றன.
25 கதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையும் நாம் சந்தித்திருக்கிற, சந்தித்திராத, கேள்விப்பட்டிருக்கிற, கேள்விப்பட்டிராத வெவ்வேறு விஷயங்களை, சம்பவங்களை, நிகழ்வுகளை, நடப்பைச் சுகமான படைப்பனுபவத்தோடு சொல்லுகின்றன.
சாமானியர்களின் நேர்மையையும் அவர்களின் வஞ்சகத்தையும் துரோகத்தையும் கொடுமையையும் பாசாங்கின்றிப் பேசுகிற இக்கதைகளில் தெரிகிற, தெறிக்கிற மொழி, வாசகனைச் சுவாரசியத்துக்குள் இழுத்துப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது இக்கதைகளின் அல்லது கார்த்திக் புகழேந்தியின் பலம்.
முதல் கதையான ‘அவளும் நானும் அலையும் கடலும்’ பேசுகிற அன்பும் நட்பும் காதலும் தருகிற மயக்கம், அந்த இடத்தில் இருந்து மொத்த கதைகளுக்குள்ளும் ரசனை தருகிற வைரஸாக பரவி இருப்பது இத்தொகுப்பின் தனித்துவம்.
இதில் வருகிற பெரும்பாலான கதாபாத்திரங்கள், ஏதோ ஒரு சாலையில் சைக்கிளில் சென்று கொண்டோ, ஒரு கிராமத்து வயல்வரப்பில் தண்ணீர் பாய்ச்சியபடியோ, துடியான சாமியாகி ஆவேசம் கொண்டு ஆடியபடியோ, சொல்பேச்சுக் கேட்காத ஆடுமாடுகளை அதட்டிக் கொண்டோ, வாழ்வைத் தொலைத்துவிட்டு ரேஷன் கடை வரிசையில் நின்று கொண்டோ, நமக்கு ஒரு சம்பவத்தை, ஒரு பழக்க வழக்கத்தை, ஒரு வீட்டுக்குள் நடக்கும் சண்டையை, காதல் ஏக்கத்தை, வன்மத்தை, ஒரு தொன்மக் கதையை காட்டிப் போகிறார்கள்.
வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிற 'கலகம் பிறக்குது', புதிய அனுபவத்தைத் தரும் கதை. 'காளிக்கூத்து' கதையில் முழுதாக மலை யேறியிருந்த அம்மை, வெட்டும் பெருமாள் கதையில் வருகிற மேய்ச்சல்கார வெட்டும் பெருமாள் என ஒவ்வொரு கதையிலும் வருகிறவர்கள் நமக்கு ஆச்சரியத்தையும் சில நேரங்களிலும் அதிர்ச்சியையும் தந்து போகிறார்கள்.
பெரும்பாலான கதைகளில் கதைமாந்தர்கள் பேசுகிற நெல்லை பேச்சு மொழி, அக்கதைகள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க வைக்கின்றன. கூடவே இன்னும் கொஞ்சம் பேசமாட்டார்களா? என்கிற ஏக்கத்தையும் ‘இன்னும் கொஞ்சம் பேச வச்சாதாம் என்னடெ?’ என்ற கேள்வியையும் தருவதாக இருக்கின்றன. கதைகளுக்குள் இயல்பாக வந்துவிழுகிற, ‘நாமலாம் அடுப்புல வச்ச கொள்ளி மாதிரி... எரிஞ்சுதான் தீரணும்’, ‘வெறவு கோணல்னா நெருப்பு பத்தாதா என்ன?’ என்பது போன்ற உவமைகளும் ரசிக்க வைக்கின்றன.
ஒரு கதையை எதிர்பார்ப்போடு தொடங்கி அதன் தேவைக்கேற்றபடி அழைத்துச் சென்று இயல்பாக முடிக்கிற லாவகம், கார்த்திக் புகழேந்திக்கு எந்த மெனக்கெடலுமின்றி கூடி வருகிறது. கூடிவருவது என்பதும் கூடுதலுக்கு ஒப்பானதுதான். 'தேனடை' கதையின் ஓரிடத்தில், 'செவப்பி, வெள்ளபாண்டி ஒடம்புல புகுந்துட்டா' என்று குறிப்பிடுவதைப் போல, இத்தொகுப்பின் கதைகள் அனைத்தும் நம் மனதுக்குள் புகுந்து கொள்ளும் மாயத்தை, எந்த மாயமுமின்றி செய்வது தான் இத்தொகுப்பின் ஆகச் சிறந்த சுவாரசியம்! - ஏக்நாத்
கார்த்திக் புகழேந்தி கதைகள்
வம்சி புக்ஸ்
விலை: ரூ.400
தொடர்புக்கு: 9445870995