கவிஞர் ரோஸ்முகிலனின் 'சத்தத்துல சங்கீதம் இருக்கு/அதைக்/கேக்கத்தான் நெஞ்சத்துல/ கிறுக்கு' என்கிற பாடலைக் கரிசல் கருணாநிதியின் குரலில் கேட்டுள்ளேன். கேட்பதற்கு இனிமையாகவும் இதமாகவும் இருக்கிற ஒலிகளை இசை எனவும், ஒழுங்கற்ற ஒலிகளைச் சத்தம் எனவும் பெரும்பாலானோர் குறிப்பிடுவர்.
ஒழுங்குசெய்யப்பட்ட ஒலியில் எவரும் லயித்திருக்க முடியும். ஒழுங்கற்ற சத்தத்திலும் ஒருவர் லயித்திருக்க முடியுமா? மகாகவி பாரதியார், தன் வீட்டில் அமர்ந்திருந்தபோது, தான் கேட்ட சத்தங்கள், ஓசைகள், ஒலிகள், நாதங்கள், குரல்களை இவ்வாறு வரிசைப்படுத்தியுள்ளார்: ‘வீதிகளில் குழந்தைகள் விளையாடுகிற சத்தம், வண்டிச் சத்தம், பக்கத்து வீட்டு வாசலில் விறகு பிளக்கிற சத்தம், நான்கு புறத்திலும் காக்கைகளின் குரல், இடையிடையே குயில், கிளி, புறாக்களின் ஓசை, வாசலிலே காவடி கொண்டு போகும் மணியோசை, தொலைவில் இருந்து வரும் கோவில் சங்கின் நாதம், தெருவிலே சேவலின் கொக்கரிப்பு, நடந்து போகும் பெண்களின் பேச்சொலி, அண்டை வீடுகளில் குழந்தைகள் அழுகிற சத்தம், நாராயணா கோபாலா என்று ஒரு பிச்சைக்காரனின் குரல், கதவுகள் அடைத்துத் திறக்கிற ஒலி, நாய் குலைக்கும் சத்தம், வீதியில் தொண்டையை லேசாக்கி இருமித் திருத்திக்கொள்ளும் சத்தம், தொலைவிலே காய்கறி விற்பவனின் சத்தம், அரிசி அரிசி என்று அரிசி விற்பவனின் ஒலி, இப்படிப் பலவிதமான ஒலிகள் ஒன்றன்பின் ஒன்றாக என் செவியில் பட்டுக்கொண்டேயிருக்கின்றன’.
எது ஒலி, எது நாதம், எது குரல், எது ஓசை, எது சத்தம் என எவ்வளவு நுட்பமாகப் பகுத்தறிகிறார் பாரதியார் என்பதை உற்றுநோக்க வேண்டியுள்ளது. இவ்வளவையும் நயமாகப் பட்டியலிட்ட பாரதியார், தனது அடுத்த வரியில் என்ன சொன்னார் என்பதுதான் பெரிய ஆச்சரியம்: ‘இந்த ஒலிகளையெல்லாம் பாட்டாக்கி, இயற்கைத் தெய்வத்தின் மகாமெளனத்தைச் சுருதியாக்கி, என் மனம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது’.
பறவைகளின் ஒலிகளைப் பாட்டாக்குவேன் என்று சொன்னதைக் கூட இயல்பு எனலாம். ஆனால், வண்டிச் சத்தத்தையும், விறகு பிளக்கிற சத்தத்தையும், கதவு அடைக்கிற சத்தத்தையும் கூட நான் பாட்டாக்கி அனுபவிப்பேன் என்று சொன்ன பாரதியாரை எண்ணியெண்ணி வியக்கிறேன்.
செவ்வியல் இசைக்கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருக்கும் போது, ஒருஸ்வரம் மாறுபட்டு ஒலித்தாலும் அதை அபஸ்வரம் என்று முகம் சுளிக்கும் சுப்புடுகளை நாம் அறிவோம். ஆனால் பாரதியார் எனும் மாபெரும் இசைக்கலைஞனுக்கு மட்டும்தான் ஒழுங்கற்ற ஒலிகளையும் பாட்டாக்குகிற இசைமனம் வாய்த்திருந்தது.
‘ஆலமரம் பழம் உதிரும்/அந்தச் சத்தம் கேட்டியா/ஆத்துக்குள்ள மீன் குளிக்கும்/அந்தச் சத்தம் கேட்டியா...’ என்கிற கவிஞர் ரோஸ் முகிலனின் பாடலை, என் வகுப்பில் மாணவர்களுக்குப் பாடக் கற்றுக்கொடுத்தபோது, “ஆத்துக்குள்ள மீன் குளிக்கும் சத்தத்தை எப்படி சார் கேட்க முடியும்?” என்று ஒரு மாணவி கேட்டாள். “கவிதை எழுதுறவங்களுக்குத்தானம்மா அதெல்லாம் கேட்கும்” என்று நான் சொன்ன பதிலில் அம்மாணவிக்குத் திருப்தியில்லை.
பேருந்திலும் புகைவண்டியிலும் பயணிக்கும்போது காதொலிப்பான்(ஹெட் போன்) பயன்படுத்தாத இளைஞர்களே இல்லை எனலாம். இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் இயற்கையான ஒலிகளில் இருந்து வரும் இசையை அனுபவிக்கத் தவறுகிறோம். மட்டுமல்ல நம்மைச் சுற்றிக் கேட்கிற அனைத்து ஒலிகளையும் நுட்பமாகக் கேட்டறியும் திறனை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோமோ? கேட்கும் ஒலியிலெல்லாம் கீதத்தை அனுபவித்த பாரதியாரின் காதுகள் நமக்கும் வாய்க்கட்டும். உட்செவி திறக்கட்டும்.
- தொடர்புக்கு:umas12340@gmail.com