இலக்கியம்

சமூகப் பிரச்சினைகளுக்கான அறிவியல் தீர்வுகள்! | நூல் வெளி

நம்மைச் சுற்றி நிகழும் எல்லாச் சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகவும் நாம் வியாக்கியானம் செய்ய வேண்டும். அதே நேரத்தில், ஒரு பிரச்சினை பற்றி வியாக்கியானம் செய்வதற்கு முன்பாக அப்பிரச்சினை தொடர்பான தரவுகளைத் திரட்டி அவற்றை அலசி ஆராய வேண்டும். விரிவான தரவுகள், வலுவான ஆதாரங்களின் மேல் நின்று கொண்டு பேசும்போதுதான், நமது வியாக்கியானம் வெற்றி பெறும். இந்த நூலை வாசிக்கும் அனைவருக்கும் பொறியாளர் மு.இராமனாதன் மறைமுகமாக இதனைத்தான் கற்றுத் தருகிறார்.

அவர், சிக்கலான பிரச்சினைகளையும் அறிவியல் நோக்கில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகளை முன்வைப்பதில் வல்லவர். பல்வேறு இதழ்களில் அவர் எழுதி வரும் கட்டுரைகள் அனைத்தும் இந்த வகைப்பட்டதுதான். எந்தவொரு பிரச்சினையாக இருப்பினும், சர்வதேச அனுபவங்களையும், அறிவியல்பூர்வமான தரவுகளையும் முன்னிறுத்தி, உள்ளூர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை அடுக்குவதில் மிகவும் தேர்ந்தவர். ‘தண்டிக்கப்படுகிறதா தமிழ்நாடு?’ என்ற இந்த நூலில் இடம்பெற்றுள்ள அவரது 19 கட்டுரைகளும், ஒவ்வொரு பிரச்சினையையும் நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதைச் சொல்லித் தருகின்றன.

தமிழகம் என்ற உப தலைப்பின் கீழ் 6 கட்டுரைகள், சமூகம் தொடர்பாக 4 கட்டுரைகள், பொறியியல் சார்ந்த 9 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்திய நாட்டில் தென்னிந்திய மாநிலங்கள், ஒன்றிய அரசால் பல்வேறு தளங்களில் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகின்றன என்பது பற்றி முதல் கட்டுரை விவரிக்கிறது.

மொழிக்கொள்கை தொடர்பான கட்டுரையில், ‘தமிழோடும் ஆங்கிலத்தோடும் கூடுதலாக இன்னொரு இந்திய மொழியைக் கற்கச் சொல்கிறது புதிய கல்விக் கொள்கை. அதற்கான அவசியமிருந்தால், அந்த மூன்றாவது மொழி, தமிழையும் ஆங்கிலத்தையும் விஞ்சக்கூடியதாக இருந்தால், அதன் மூலம் வாழ்வியல் தேவைகள் நிறைவேறுமானால், தமிழர்கள் யார் சொல்வதற்காகவும் காத்திருக்க மாட்டார்கள், தாமாகவே அந்த மூன்றாவது மொழியைக் கற்பார்கள்’ என்று இராமனாதன் குறிப்பிடுகிறார்.

மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால் தென்மாநிலங்கள் பாதிக்கப் படக்கூடும் என்ற அச்சம் பரவலாக எழுப்பப்படுகிறது. இந்தச் சிக்கல்களை ஒரு கட்டுரையில் விரிவாக விளக்கியுள்ளார். ‘தண்டிக்கப்படுகின்றனவா தென் மாநிலங்கள்?’ என்ற கட்டுரையும், ‘நிதிக்குழு தமிழகத்துக்கு நியாயம் வழங்குமா?’ என்ற மற்றொரு கட்டுரையும் மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு தற்போது எவ்வாறு பங்கிட்டு வழங்கப்படுகிறது என்பது பற்றி பேசுகின்றன. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் பாதிக்கப்படுவது பற்றியும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்கள், மிகக் குறைவான நிதிப் பகிர்வின் மூலம் தண்டிக்கப்படுவது பற்றியும் விவரிக்கின்றன.

சட்டத்தை மதித்து குடிமக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பள்ளி செல்லும் வயதிலேயே மக்களுக்குப் பல மேலை நாடுகளில் கற்றுத் தருகிறார்கள். இந்தியாவிலும் சட்டத்தை மதித்து நடக்கக்கூடிய ஒரு நல்ல சிவில் சமூகம் நிச்சயம் உருவாகும் என்று காந்தியடிகள் நம்பிக்கைக் கொண்டிருந்தார். ஆனால், வணிகமயமாகிவிட்ட இன்றைய கல்விச் சூழலால் நல்ல பண்பாளர்களை உருவாக்க முடியாத அவலம் பற்றியும், இந்தியர்கள் எப்படியெல்லாம் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்கிறார்கள் என்பது பற்றியும் ‘காந்தியை ஏமாற்றிவரும் இந்தியா’ என்ற கட்டுரையில் நூலாசிரியர் விவரிக்கிறார்.

சென்னைப் பெருவெள்ளம் தொடர்பான கட்டுரையில், இதைக் கட்சி சார்ந்த, அரசியல் சார்ந்த பிரச்சினையாகச் சுருக்கிப் பேசுகிறார்கள். உண்மையில், சூழலியல், பெருநகரத் திட்டமிடல், பொறியியல் முதலான அறிவுத் துறைகள் சார்ந்துதான் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

நூறாண்டுகளில் எப்போதாவதுதான் மிக அதிகபட்ச மழை பெய்யக்கூடும். இதனை நூறாண்டு மழை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதைப் போல பத்தாண்டு மழை, இருபதாண்டு மழை, ஐம்பதாண்டு மழை என வெவ்வேறு அளவுகளில் மழைப்பொழிவு கணக்கிடப்படுகிறது. சென்னையில் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழை, ஐம்பதாண்டு மழையாகவோ நூறாண்டு மழையாகவோ இருக்கலாம்.

ஹாங்காங் போன்ற நாடுகளில் இருநூறாண்டு மழை பெய்தால்கூட நகர மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்காதவாறு, வெள்ள நீர் கடலுக்குச் சென்று சேருவதற்கான கட்டமைப்புகள் இருக்கின்றன. ஆனால் சென்னை நகரில் உள்ள வடிகால்கள் பத்தாண்டு மழையால் உருவாகும் வெள்ள நீரைக்கூடக் கடத்துவதற்குத் திறன் இல்லாதவையாக உள்ளன.

மேலும் சென்னை நகர வடிகால்கள் ஈர்ப்பு விசைக்கு (Gravitational force) ஏற்ப செயல்படக் கூடியவை. ஆனால், கடல் மட்டத்துக்கு மிக அருகில் இருக்கும், சமதளம் மிக்க சென்னை மாநகர கால்வாய்களால் வேகமாக வெள்ள நீரை வெளியேற்ற இயலாது. ஆகவே, சென்னை மாநகரின் வடிகால் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வெற்றியடைந்துள்ள வடிகால் சுரங்கங்கள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த வடிகால் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நூலாசிரியர் விரிவாக விளக்கியுள்ளார். ஜப்பான் நாடு பேரிடர்களை எதிர்கொள்ளும் அனுபவங்கள், பாம்பன் பாலக் கட்டுமானப் பிரச்சினைகள் எனப் பொறியியல் தொழில்நுட்ப அடிப்படையிலான பல பிரச்சினைகளை நூலாசிரியர் அலசுகிறார்.

முல்லைப் பெரியாறு அணையின் சிக்கல்கள் அனைத்துமே அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டவை என்பதையும், பொறியியல் ரீதியாக முல்லைப் பெரியாறு அணையில் எந்தச் சிக்கலும் இல்லை என்பதையும் அறிவியல் ரீதியான ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். அடுக்கக வணிகத்தின் அவலங்கள், சாலிகிராமம் கட்டுமானப் பிரச்சினை, கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சிக்கல் எனச் சென்னை மாநகரம் எதிர்கொண்டு வரும் பல பிரச்சினைகளை நூலாசிரியர் அலசுகிறார்.

இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் நிச்சயமாகத் தீர்வு காண முடியும் என அவர் உறுதியாக நம்புகிறார். நூலின் பதிப்பாசிரியர் குறிப்பிடுவது போல, ‘மக்கள் மீது அக்கறையும், மனித நேயமும், சட்டப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற தார்மீக நெறியும், பிரச்சினைகளை அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகக்கூடிய மனப்பான்மையும் இருந்தால் எல்லாப் பிரச்சினைகளக்கும் தீர்வுகாண முடியும்’ என்பதே இந்த நூலின் சாராம்சமாக உள்ளது. மொத்தத்தில், ஒரு சமூகப் பிரச்சினையை எவ்வாறு அணுகுவது என்பதற்கு, சமூக ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டும் கையேடு போல இந்த நூல் திகழ்கிறது எனலாம்.

- தொடர்புக்கு: devadasan.v@hindutamil.co.in

தண்டிக்கப்படுகிறதா தமிழ்நாடு?
மு.இராமனாதன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.150
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு : 7401296562

SCROLL FOR NEXT