புகைப்படக்காரர் ஒருவரைப் பின்னணியாகக் கொண்டது இந்த நாவல். ஹைதராபாத், திருப்பூர், ஆனைக்கட்டி எனப் பல இடங்களில் நடக்கும் கதை இது. நாயகனான கிருஷ்ணன் சமைத்த தேநீர், தொட்ட பணம், உணவுப் பொட்டலம் எல்லாம் குப்பையில் வீசப்படுகின்றன. ஏனெனில் அவன் பிறப்பு அப்படிப்பட்டது. திருப்பூரை விட்டு ஹைதராபாத் சென்றால் போதையின் உச்சத்தில் நண்பனான ரமேஷும் அவனை இழிவு படுத்துகிறான். அவன் மீது காட்டப்பட்ட காழ்ப்புணர்ச்சி அவனை உந்தி மேலே உயர்த்துகிறது.
எண்ணங்களின் தொடர்ச்சியே இந்தக் கதை, காலம், இடம், பயணம் மாறி மாறி நம்மைத் தட்டாமலை ஆட்டுகிறது. கிருஷ்ணனின் சிந்தனைகளில், அவன் எண்ணங்களில் நாம் பல ரக வாழ்க்கையைப் பார்க்கிறோம். இலக்கியம் பத்தாம் நூற்றாண்டு மன்னர் பெருமை காட்டுவது அல்ல. நமது கால மக்களின் குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களின் இன்னல்களை காட்டுவதே நீதி சார்ந்த இலக்கியம். இலக்கியத்திலும் அநீதிசார் இலக்கியம், நீதி சார் இலக்கியம் உள்ளன. அந்தப் பணியைத் திறம்படச் செய்துள்ளார் நாவலாசிரியர் சுப்ரபாரதி மணியன். - இராமன் முள்ளிப்பள்ளம்
ஸ்மைல் ப்ளீஸ்
சுப்ரபாரதிமணியன்
பரிதி பதிப்பகம்
விலை: ரூ.230
தொடர்புக்கு:72006 93200
ஒரு கிலோ அரிசியைச் சுமக்க மாட்டாத வலி: பாரி கபிலனின் ‘அம்மாயி கும்பிட்ட சாமி’ சொந்த ஊரை, அதன் நீர்ப்பரப்புகளை, பறவையினங்களை, காடு கரைகளை மறக்க மாட்டாது, பிழைப்புக்காக மாநகரில் வந்து அல்லாடும் வாழ்க்கையின் வலியைச் சொல்லும் பாங்கு கவனத்தை ஈர்க்கிறது. சிற்றூரின் திளைப்பில் இருந்தாலும், அதன் சத்தத்தில், நெரிசலில், புகைக்கழிவில் தனக்கும் பங்குண்டு தானே என்று சந்தடிமிக்க நகரத்தையும் ஒரு கட்டத்தில் பிடித்துப் போகிறது.
‘வேங்கைவயல்’ கவிதை, 'சாதிவெறி மலத்தை விடவும் குமட்டுகிறது… சீ தள்ளிப் போ' என்று முடிகிறது. 'என் சிறுவயது' எனும் கவிதை, தான் படிக்கக் கூடாத சாதி என்று பழித்த ஓர் ஆசிரியரின் வன்முறை வசவுகளை வலியோடு வெளிப்படுத்துகிறது. அம்மாயியின் மீதான நேசம், பாசப் பிழிவு.
‘நெல்லை அதன் முளையிலிருந்தே அறிவோம்' என்று பேசும் ‘அரிசிகளின் கதை', காய்ச்சலை மாரடித்துச் சொல்லிக் கதறி இருக்கிறோம் குலசாமியிடம் என்றெல்லாம் விவரித்து, வயல் வெளிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட வாழ்க்கையில், ‘என்ன சாபக்கேடோ, எங்கள் நிலத்திலிருந்து கொண்டு செல்ல முடியாத அரிசியைக் கடைகளிலிருந்து வாங்கி வருகிறோம், பெருவெளியில் மண்ணையே சுமந்த எங்களால் ஒரு கிலோ அரிசியைச் சுமக்க முடியவில்லை' என்று நிறைவுபெறும் இடத்தில் ஒலிக்கும் விம்மல் எளிதில் கடக்க முடியாதது. - எஸ்.வி.வேணுகோபாலன்
அம்மாயி
கும்பிட்ட சாமி
பாரி கபிலன்
கவின் வெளியீடு விலை: ரூ.130
தொடர்புக்கு: 9840303575
மிளிரும் பொன்வரிகள்: ‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ என்ற புரட்சிக்கவிஞரின் வரிகளுக்கேற்ப, இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் தனது சிந்தனையால் எழுத்தால் இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்பவர் மூத்தத் தமிழறிஞரான ஒளவை நடராசன். வாழும் காலத்தில் அவர் பங்கேற்ற கருத்தரங்குகள், ஆய்வரங்குகளில் தமிழாய்ந்த சிறப்பான சொற்பொழிவுகளை ஆற்றியதோடு, தான் பொறுப்பேற்ற துறை களிலெல்லாம் தமிழே முதன்மையாக விளங்கிட வேண்டுமென்று சிறப்பான முன்னெடுப்புகளைத் திறம்பட செயல்படுத்தியுள்ளார்.
ஆயிரத்தும் மேற்பட்ட பல்துறை சார்ந்த தமிழ் நூல்களுக்கு அவரெழுதியிருக்கும் முன்னுரைகளிலிருந்து 125 நூல்களுக்கான முன்னுரைகளை மட்டும் ‘ஒளவையின் தமிழமுது’வாகத் தொகுத்துத் தந்துள்ளார் அவரது புதல்வரான ஒளவை அருள். கவிதை, கட்டுரை நூல்களுக்கு ஒளவை நடராசன் எழுதிய முன்னுரைகள் அனைத்துமே, மூன்று, நான்கு பக்கங்களுக்குள் சுருக்கமாக எழுதப்பட்டிருந்தாலும், நூலின் மையக்கருத்தினை ஆழமாக உள்வாங்கி, அவற்றின் பொருட்செறிவினை வாசகர்களுக்கு எடுத்து வழங்கும் வகையில் திறம்பட எழுதப்பட்ட பொன்னுரைகளாகவே மிளிர்கின்றன. முன்னுரைகளுக்கிடையே அவரது தமிழ்ப்பணிகளை நினைவுகூறும் வகையில் பொருத்தமான 86 ஒளிப்படங்களையும் இணைத்துள்ளது நூலுக்கு கூடுதலான சுவை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. - மு.முருகேஷ்
ஒளவையின் தமிழமுது
ஒளவை அருள்
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 9600064311
மனிதம் மிக்கக் கதைகள்: நிஷாந்தனின் இந்தக் கதைத் தொகுப்பில் 12 சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் வித்தியாசமான அனுபவங்களைப் பகிர்கின்றன. இந்தக் கதைகள் எல்லாவற்றிலும் கதையாசிரியருக்கு வலுவான தொடர்பு இருப்பது போன்ற நெருக்கத்தை வாசகர்கள் உணர்வார்கள். எல்லாக் கதைகளிலும் மனிதம் நிறைந்திருக்கிறது. ஒரு வீட்டில் ஏல நோட்டீஸ் ஒட்டச் செல்லும் ஒருவரின் அனுபவமாக வெளிப்படும் ‘சாளரம்’ கதையில் மனித உணர்வுகளின் தேரோட்டத்தை எழுத்தாளர் நிகழ்த்தியிருக்கிறார்.
ராமநாதபுரம் பகுதியில் ஒரு ஊரின் கதையாக விவரிக்கப்பட்டுள்ள ‘ஒற்றைச் செருப்பு’ கதை, இந்து-முஸ்லீம் இணக்கத்துக்குச் சான்றாக எழுதப்பட்டுள்ளது. ஒரு இந்து, முஸ்லீம் குடும்பம் ரொம்பவும் அந்யோன்யமாக இருக்கிறது. ஆனால், அந்த நட்புக்கு சிறு பிணக்கு, செருப்பு வடிவில் வந்து விழுகிறது. ஆனால், காலம் எல்லாவற்றுக்கும் மருந்து இடுகிறது என்பதுபோல் அந்த முஸ்லீம் நண்பர், கதையின் பிரதான பாத்திரமான சண்முகசுந்தரத்தைத் தேடி வருகிறார். அவரது பேச்சில், செய்கையில் ஒரு குற்ற உணர்வு இருக்கிறது. நான்கு கண்களின் துளிகள் எல்லாவற்றுக்கும் விடையாகிறது. - விபின்
சாயல், நிஷாந்தன்
நாற்கரம் வெளியீடு
விலை: ரூ.170
தொடர்புக்கு: 9551065500