“படிக்கிற பசங்களைக் கடகன்னி வேலக்கி அனுப்புறது, ஆடு மாடு மேய்க்க விடுறதுன்னு அப்பன் ஆத்தாவே புள்ளைங்க படிப்புல மண்ண வாரிக் கொட்டு றப்ப நம்ம என்ன செய்வோம்? பயலுவ இருக்குற எடம் தேடிப் போயி புத்திமதிய சொல்லிக் கூப்பிட்டுப் பாப்போம். மாசக் கணக்குல வரலன்னாலும் ஒரு பயலயும் நாம பேர நீக்குறது கெடையாது. என்னைக்காவது ஒருநாளு நல்ல புத்தி வந்து பள்ளிக்கு வருவானுங்க. அப்ப பள்ளிக்கூடத்துல நம்ம பேரு இல்லேன்னு தெரிஞ்சி திரும்பிப் போயிடக் கூடாதுன்னு பேரை மட்டும் காப்பாத்தி வச்சிக்கிட்டு வருவோம்ல?” அவர் வார்த்தைகளை ஆமோதிப் பதுபோலத் தலையசைத்தார் ரேவதி டீச்சர்.
“ஆனா கிருஷ்ணமூர்த்தி வாத்தி யாரு என்ன செய்துட்டாருன்னா ஆய்வுக்கு வர்ற அதிகாரிகிட்ட மாட்டி, கெட்ட பேரு வாங்கக் கூடாதுன்னு நெனச்சி, இந்த ஆறு பயலுகளோட பேரையும் அப்பயே நீக்கிட்டாரு. இந்த விஷயம் அவனுங்களுக்கும் தெரிஞ்சிபோச்சி. அதுக்குப் பெறகு அவனுங்க படிப்பப் பத்தி எதுக்கு யோசிக்கப் போறானுங்க? எடுபுடிவேல செய்யிறதவிட்டு ஒவ்வொரு லைனுக்கும் அவனுங்க ஆறு பேரும் தனித்தனியாவே ஓட ஆரம்பிச்சிட்டானுங்க. மழை, காத்தா இருந்தாலும் ராத்திரி பகலா இருந்தாலும் எல்லாத்தையும் இவனுங்களே பாத்துக் கிட்டாய்ங்களாம்.
ஈபி அதிகாரிகளும் வேலை கணக்க எழுதி இவனுங்கள ஏமாத் தாம சம்பளம் கொடுத்துக்கிட்டு இருந்திருக் காங்க. பழுதில்லாம பத்து, பதினோரு வருசம் இப்புடியே ஓடிருக்கு. அதுக்குப் பெறகுதான் அரசாங்கமே லைன்மேன் வேலக்கி ஆள் எடுக்குறதா அறிவிச்சி நோட்டீஸ் கொடுத்திருக்கு. அதுக்குக் கல்வித் தகுதி எட்டாவது பாஸாயிருக்கணும். இவனுங்க எங்க போவானுங்க? பள்ளிக்கூடம் போயிருந்தாத்தான... பரமசிவம்னு ஒரு மேலதிகாரி. அவருக்குக் கீழதான் இவனுங்க வேல பாத்தது. அவரு இவனுங்கள அழைச்சிப் பேசிருக்காரு.
“புதுசா வேலைக்குச் சேருறவனுங் களுக்கு மூணு மாசம் பயிற்சி கொடுத்துதான் லைன்ல ஓடவிடுவம். அதுக்குப் பெறகும் அவனுங்க ஆயிரத் தெட்டு தப்பு பண்ணிட்டு வந்து நிப்பானுங்க. நீங்க ஆறு பேரும் அனுபவமுள்ள ஆட்களா இருக்கீங்க. ஒங்கள நம்பி இந்த டிவிஷனயே விட்டுட்டுப் போகலாம். நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. மறுபடி நீங்க என்னைப் பாக்கும் போது எட்டாவது பாஸான தாளோடதான் வரணும். நீங்க எப்படிப்பட்ட அனுபவசாலிகள்னு எனக்குத் தெரியும். நீங்க இந்தத் துறைக் காக எவ்வளவு ஒழச்சி இருக்கீங் கன்னும் தெரியும். ஆனா இதெல்லாம் அரசாங்கத்துக்குத் தெரியாது.
அரசாங்கத்துக்கு வேண்டியதெல்லாம் எட்டாவது பாஸான காதிதம் மட்டும் தான். காகிதமா குழிதோண்டப் போகுது? காகிதமா போஸ்ட் நடப் போகுது? காகிதமா கம்பியிழுத்துக் கட்டப் போகுது? மழை ராத்திரியில அறுந்து விழுந்த கம்பிய இழுத்துக் கட்ட என்னால அந்தக் காகிதங்கள அனுப்ப முடியாதில்ல. நீங்கதாண்டா எனக்கு வேணும். ஒங்கள விட முடியாது. எப்புடியோ எட்டாவது பாஸான காகிதங்களோட வந்து சேருங்க” அப்படின்னு பேசி அனுப்பிட்டாரு.
இவனுங்க எங்க போவானுங்க? நேரா இவருகிட்டதான் வந்து நின் னானுங்க. ஆரம்பத்துல அரசாங்கத்த ஏமாத்தலாமான்னு யோசிச்சாரு. அப்பறம் பயலுங்க வாழ்க்கையையும் யோசிச்சிப் பார்த்தாரு. அரசாங்க வேலைய கனவுலகூட நெனச்சிப் பார்க்காத வழியில வந்தவனுங்க. போயித்தான் பாக்கட்டுமே. ஞாயமாபாத்தா இந்த வேலைக்கு லாயக்கானவனுங்க இவனுங்கதான். இந்த வேலை இவனுங் களுக்குத்தான் உரிமைப்பட்டதும். அதுக்கு நான் ஆளுக்கொரு தாளுல கையெழுத்துப் போட்டுக்கொடுத்தா என்ன குடியா முழுகிடப் போகுதுன்னு துணிஞ்சிட்டாரு. ஆறு பேருக்கும் ரெடிபண்ணி குடுத்து, ‘போங்கடா. புத்தி கருத்தா பொழச்சிக்கங்கடா’ன் னாரு. தாள கைல வாங்குன பசங்க பைக்குள்ள பணத்த எடுக்குற மாதிரி கைய விட்டானுங்க.
அவ்வளவுதான் அவருக்கு வந்துது பாருங்க கோவம். இப்ப நெனச்சாலும் எனக்குச் சிலுத்துப்போகுது. அந்தநேரம் அவரப் பாக்கணுமே. ஆவேசம் வந்த வேடப்பசாமி மாதிரி ஆயிட்டாரு. பசங்க நடுங்கி வெலவெலத்துப் போயிட்டானுங்க. பயத்துல அவரு காலுல விழுந்துட் டானுங்க. நான் இருக்குற பக்கம் இனி நீங்க தலவச்சிகூடப் படுக்கக் கூடாதுடான்னு வெரட்டி விட்டுட் டாரு.” “நீங்க சொல்றதெல்லாம் உண்மையா சார்?” “நான் எதுக்கும்மா பொய் சொல்லப்போறேன்?” “நான்கூட சார ஒருமாதிரி தப்பா நெனச்சிட்டேன் சார்.”
ரேவதி டீச்சருக்குத் தன் மனதில் நினைத்ததை வாய்விட்டுச் சொல்லக்கூட இப்போது தைரிய மில்லாமல் போயிருந்தது. ஆனாலும் ஆதிமூலம் வாத்தியார் அதை அறிந்து கொண்டவர் போலக் கேட்டார். “என்னம்மா கிருஷ்ணமூர்த்தி வாத்தியாரு பணத்துக்காக இதச்செய்திருப்பாருன்னுதான நெனைச்சீங்க?” ரேவதி டீச்சரால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை. முகம் சற்று வெளிறிப்போனது அவருக்கு.
“இன்னொரு விஷயமும் சொல்றன் கேட்டுக்குங்க. வாத்தியாரோட பசங்க ரெண்டு பேருமே அப்ப எட்டாவது முடிச்சிட்டு இருந்தானுங்க. அந்த ஆறு பேரோட நம்ப தம்பிங்க ரெண்டு பேரு தாளையும் சேர்த்து அனுப்பிவிட்டா சுலபமா வேல கெடச்சிருமுன்னு அவருகிட்ட நான் யோசனை சொன்னேன். அதுக்கு அவரு என்ன சொன்னாரு தெரியுமா? ‘அந்த வேலைக்கு முறையாகூட இனிமே நம்ம விண்ணப்பிக்கக் கூடாது. என்னைக்காவது ஒருநாளு உண்மை வெளிய தெரிஞ்சிடும். அப்பறம் எல்லாம் பாழாயிரும். ஒரு உதவிய செஞ்சாச்சி. இதுக்குப் பெறகு நம்மனால அவனுங்களுக்கு ஒரு சின்ன சங்கடம்கூட வந்திரக் கூடாது. அடிக்கடி பாக்க, பேசன்னு இருக்கக் கூடாது. அப்புடி ஒரு உதவி செய்தோங்கிறதையே நம்ம மறந்திடனும்.
அவனுங்க யாரோ, நம்ம யாரோன்னு போயிடணும்’னு சொல்லிட்டாரு. அவரு நெனச்ச மாதிரியே அவனுங்க நல்லாத்தான் வேலை பாத்திக்கிட்டு இருந்தானுங்க. வருசத் துக்கு வருசம் சம்பள உயர்வெல்லாம் வாங்கிக்கிட்டு இருந்தானுங்க. இவ்வளோ வருசத்துக்குப் பெறகு இப்ப போயி இப்புடி ஒரு பிரச்சினை வந்திருக்கேன்னு நெனச்சாதாம்மா வேதனையா இருக்கு” என்றார் ஆதிமூலம் வாத்தியார். ரேவதி டீச்சருக்கு எதுவும் பேச வாய்வரவில்லை. கிருஷ்ணமூர்த்தி வாத்தி யாரின் படத்தைப் பார்த்தார். ‘நான் உங்களைத் தப்பா நெனச்சிட்டேன் சார். உங்களோட நல்ல மனசு யாருக்கும் வராது. நீங்க என்ன நெனைச்சி அந்த ஆறு பேரோட வாழ்க்கையிலயும் விளக்கேத்தி வச்சீங்களோ அதுக்கு எந்த விதத்து லேயும் குந்தகம் வந்திரக் கூடாது சார். நீங்கதான் தெய்வமா இருந்து வழிகாட்டணும்.’
ஒளிப்படத்தில் மின்னிய அவரது விழிகளைப் பார்த்து மனமுருக வேண்டிக்கொண்டிருந்தார். பதிலுக்கு அவரும் ஏதோ சொல்வது போலிருந்தது. “இப்ப சொல்லுங்கம்மா. நீங்க இந்த விஷயத்துல அரசாங்கத்துக்கு விசுவாசமா இருக்கப்போறீங்களா இல்ல அந்தப் பயலுக ஆறு பேருக்கும் ஆதரவா முடிவெடுக்கப் போறீங்களா?” “கிருஷ்ணமூர்த்தி சார் பக்கம் நிக்கப்போறன் சார்.” “மனசுக்கு நிம்மதியா இருக்கும்மா. அப்படின்னா நான் ஒரு யோசன சொல்லவா?” “சொல்லுங்க சார்.” “அந்தச் சேர்க்கை பதிவேடெல்லாம் இப்ப எப்படி இருக்கு?” “பழுப்பேறி முறுகி நொறுங்கிக் கொட்டுது. கையவச்சி பக்கத்தப் பெரட்ட முடியாது. முறிஞ்சி முறிஞ்சி கையோடயே வந்திடும்.”
“அப்பன்னா நமக்கு நல்லது தாம்மா.” “என்ன சார் சொல்றீங்க?” “சரிபார்க்கத் தேவையான பதிவேட்டின் அனைத்துப் பக்கங்களும் முற்றிலும் சிதைந்துபோய்விட்டன. அவற்றிலிருந்து தேவையான விபரங்களை எடுத்துச் சரிபார்க்கவோ உண்மைத்தன்மைக்குச் சான்ற ளிக்கவோ இயலாது அப்படின்னு எழுதி கொடுத்திடுங்க.” “அது சரியா வருமா சார்? ஆய்வுக்கு வந்துட்டாங்கன்னா?” “அட்டைய மட்டும் வச்சிட்டு மத்தத அப்புறப்படுத்திடுங்கம்மா” “அப்புறப்படுத்துறதுன்னா?” “அடுப்புல போட்டுருங்கம்மா.” “அது எப்புடி சார் நெருப்புல போடமுடியும். எத்தன பேரோட பதிவு. எனக்கு மனசு வராது சார். அது மட்டுமில்லாம அரசாங்க ஆவணங்கள அழிக்கிறது குற்றமாயிடாதா?” “ஒங்களால முடியலேன்னா என்கிட்ட கொடுங்க. எரிக்கக்கூட வேண்டாம் ஒரு பையில போட்டுக் கட்டி பரண்ல போட்டர்றன்.”
“வேண்டாம் சார்.” “வேற என்னதாம்மா செய்யப் போறீங்க?” “நான் பாத்துக்கிறேன் சார்.” “ஒங்க வீட்டுக்கு மட்டும் எடுத்துக் கிட்டுப் போயிடாதீங்கம்மா. அப்பறம் அதுலேருந்து ஒரு ஏடுகூட யாரு கையிலயும் கெடைச்சிறக் கூடாது.” “சரிங்க சார் நான் பாத்துக்கிறேன்.” “ஏதாவது உதவியினா கேளுங் கம்மா.” “கண்டிப்பா கேக்குறேன். நான் கிளம்புறேன் சார்.” “சரிம்மா. நல்லபடியா போயிட்டு வாங்க. எதச் செய்தாலும் நிதானிச்சி செய்யுங்கம்மா.” “சரிங்க சார்.
நான் வர்றேன்.” கிருஷ்ணமூர்த்தி வாத்தியாரின் படத்தைப் பார்த்தபடியே கூறினார் ரேவதி டீச்சர். வந்த வழியாகவே வண்டி சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. ஆற்றைக் கடக்கும்போது நடுவில் ஓரிடத்தில் மட்டும் ஒரு சிறிய ஓடை போலக் கணுக்கால் அளவுக்குத்தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. வண்டியை நிறுத்தாமல் கடந்துசெல்லக் கூடிய வழிதான் என்றபோதும் ரேவதி டீச்சர் வண்டியை விட்டு இறங்கி தள்ளிக்கொண்டுபோய் அந்தப் பக்கம் நிறுத்தினார்.
பின் ஓடும் தண்ணீரில் இறங்கி பளிச்சென்று தெரியும் குறுமணல் கலந்த சரளைகளுக்கு மேலாக ஓடும் தெளிந்த நீரைக் கைகளில் அள்ளி அள்ளி ஓடும் திசையிலேயே விட்டார். சட்டென்று மனதிற்குள் அந்த யோசனை வந்தது. கடந்த தை மாதம் ரேவதி டீச்சரின் மகனுக்குத் திருமணமாகியிருந்தது. மணமக்கள் அணிந்திருந்த மலர் மாலைகளை ஆடிமாதம் ஆற்றில் ஓடும் தண்ணீரில்தான் விடவேண்டு மென்று எல்லாரும் சொல்ல அதை
வீட்டின் சாமியறையில் மாட்டி வைத்தி ருக்கிறார். ஆடிமாதம் வரை ஏன் காத்திருக்க வேண்டும். பங்குனியும் நல்ல மாதம்தான். நாளையே இங்கே கொண்டுவந்து இந்தத் தண்ணீர் போகும் ஆற்றில் விட்டால் என்ன என்பதுதான் அந்த யோசனை. காய்ந்து சருகான பூமாலைகளை மட்டும் விடுவதென்றால் இந்தத் தண்ணீரே போதும். ஆனால் கிருஷ்ணமூர்த்தி சார் சொல்வதையும் செய்யவேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஓடவேண்டும். நின்று நிதானமாய் ஒருமழை பெய்தால்கூடப் போதும்.
பெய்யுமா வானத்தை அண்ணாந்து பார்த்தார். கருமேகங்கள் ஓரிடத்தில் திரள்வது போலிருந்தது. ரேவதி டீச்சரின் மனம் இலகுவாகியிருந்தது. முகத்தில் புன்னகை பூத்திருந்தது. இல்லம் நோக்கி விரைந்தது அந்த இருசக்கர வாகனம். அவர் வீடு செல்லும்வரைகூடக் காத்திருக்க வில்லை அந்த வானம். நன்மையின் பொருட்டும் பெய்யெனப் பெய்யும் மழையல்லவா அது!
(நதி அசையும்)
- thamizhselvi1971@gmail.com