இலக்கியம்

பாதியில் நின்ற படிப்பு | அகத்தில் அசையும் நதி 16

சு.தமிழ்ச்செல்வி

ஆதிமூலம் ரேவதி டீச்சரை நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். “எப்போ வேலைக்குவந்தீங்க, எங்கங்க வேல பாத்தீங்க? இவங்களப் பாத்திருக்கீங்களா? இப்ப இருக்குறது சொந்த வீடா, வாடகை வீடா?” என ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தார். ரேவதி டீச்சர் அவ்வப்போது கிருஷ்ண மூர்த்தி வாத்தியாரின் ஒளிப் படத்தைப் பார்த்தபடியே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு இந்த உரையாடலில் மனம் பதியவில்லை.

“ஏதோ பள்ளிக்கொடத்து எடப் பிரச்சனை பத்தி பேசணும்னுல்ல வந்தீங்களாம். என்ன பிரச்சன? வடக்கால மண்ணுண்டன்னு ஒருத்தன் ஆட்டுப்பட்டி வச்சிக்கிட்டு இருந் தானே அவனா பிரச்சனைக்கு வாரவன்?” “ஆமா அந்தாளு நான் சொன்ன மாதிரி பிரச்சன பண்ணுனாருதான். ஆனா இப்ப இல்ல. நாலு வருசத் துக்கு முன்னாடியே போலீஸ்ல கேசு கொடுத்து, எடத்த அளந்து பேசி முடிச்சி கையோட மதில்சுவரும் வச்சிட்டோம். இப்ப அது மாதிரி எந்தப் பிரச்சனையும் இல்ல.”

“தம்பி நீங்க அப்படிச் சொன்னதா சொல்லித்தான என்னக் கூட்டியாந்தான்” “நான் அவருகிட்ட அப்படிச் சொன்னது உண்மதான்” “எதுக்காகம்மா அப்புடிச் சொன்னீங்க?”“நான் கிருஷ்ணமூர்த்தி சார பாக்க தான் வந்தன். அவரு தவறிட்டாருன்னு தெரிஞ்சதும் ஒருமாதிரியா இருந்திச்சி. அந்த நேரம் பாத்து அவரு மகன் என்ன விஷயமா வந்துருக்கீங்கன்னு கேட்டதும் என்னால சட்டுன்னு எதுவும் சொல்லமுடியல. அதான் எப்பயோ முடிஞ்சி போனதச் சொல்லி சமாளிச்சன்.” “அப்புடி என்னம்மா பிரச்சன இப்ப?” “அதெல்லாம் ஒண்ணுமில்ல சார். சார் இருந்தா பாத்துப் பேசிட்டுப்போவலாமேன்னு நெனச்சு வந்தேன்.

வேற ஒண்ணும் இல்ல. நான் கிளம்புறேன் சார்” என எழுந்து கொண்டார் ரேவதி டீச்சர். “செத்த ஒக்காருங்கம்மா. உங்க மொகத்த பாத்தாலே தெரியுது, நீங்க எதையோ மறைக்கிறீங்கன்னு. நான் அவரு கூடவே இருந்தவன். நீங்க வேல பாக்குற அதே பள்ளிக் கூடத்துல பதினோரு வருசம் வேல பாத்துட்டு, அங்கேருந்து நேரா வீட்டுக்கு வந்தவன். அதுனால நானும் அந்த பள்ளிக்கூடத்துல பாத்தியதப் பட்டவன்தான்னு நீங்க நெனச்சா, எதுவாருந்தாலும் தயங்காம சொல்லுங்க.”

வாத்தியாரின் மகன் ஆளுக்கொரு கறுப்பு கலரை உடைத்துக் குடிக்கும் படி கொடுத்துவிட்டுப் போனான். சைக்கிள் கடையில் அவனுக்கு உடனே முடிக்கவேண்டிய வேலை இருப்பதாகச் சொல்லிச் சென்றான். “வீட்டுல யாரையுமே காணுமே. சாருக்கு ரெண்டே பசங்கதானா?” “அவருக்கு மூணு பொண்ணுங்க. ரெண்டு பசங்கம்மா. பொண்ணுங்க மூணு பேரையும் நகநட்டு சீருசெனத்தி செஞ்சி நல்ல எடத்துல கட்டிக் குடுத்துட்டாரு. மருமவனுங்க மூணு பேருமே அரசாங்க சம்பளம் வாங்குற ஆளுங்க. எல்லாம் வெளியூருல புள்ள குட்டின்னு நல்லா இருக்குதுங்க”

“இவங்க குடும்பமெல்லாம்?” “பசங்க ரெண்டு பேரும் இந்த வீட்டுலதான் இன்னமும் ஒண்ணாவே இருக்கானுங்க. வாத்தியாருக்கு அமைஞ்ச மருமகளுங்க மாதிரி ஒலகத்துல யாருக்கும் அமைய மாட்டாங்க. ரெண்டு பேரும் நல்ல பாட்டாளி பொண்ணுங்க. காலையில புள்ளகுட்டி களுக்குச் செய்ய வேண்டியத செய்து குடுத்து பள்ளிக்கொடம் அனுப்பி விட்டுட்டு, வயக்காட்டுக்குப் போனா சூரியன மறைய வச்சிதான் வீட்டுக்கு வருங்க.” “இவங்களுக்கு வயலெல்லாம் இருக்கா சார்?” “என்னம்மா இப்புடிக் கேட்டுட்டீங்க. பரம்பரை யாவே வாத்தியாரு குடும்பம். நெலபலம் சொத்துபத்து வச்சி யாண்ட குடும்பந்தான். போதாத கொறக்கி வாத்தியாரும் பத்து ஏக்கர் போல வாங்கிப் போட்டுருக் காருல்ல.”

“அப்புடியா சார்?” “எல்லாமே ஆத்த ஒட்டி இருக்கும்மா. மண்ணப் போட்டாலே பொன்னா வெளையுற பூமிம்மா. ஒரு வருசம் ஆறு பெரண்டு வந்தா போதும். அடுத்த நாலு வருசத்துக்கு ஒரு புடி வெதைய இப்புடி அள்ளி எறச்சிட்டு வந்து வீட்டுல ஒக்காந்துக்கலாம். அதுக்கப்பறம் அருவாளையும் சாக்கையும் எடுத்துக்கிட்டு அறு வடைக்கு போனாப்போதும். அப்புடி யொரு விளைச்சல். வேர்வைய உறிஞ்சாம விளச்சல கொடுக்குற மண்ணும்மா இது.”

ஆதிமூலம் வாத்தியார் சொல்லச் சொல்ல ரேவதி டீச்சருக்கு ஒருமாதிரி யாக இருந்தது. இவருடைய குடும்பம், பிள்ளைங்களப் பத்தி ரொம்ப தப்பா நெனச்சிட்டமே என நினைத்தவர் அதற்காக வருந்துவது போல ஒளிப்படத்தைப் பார்த்தார். ‘ஆனாலும் பொய்ச்சான்றுகள் கொடுத்தது தப்புதான்’ என்று நினைத்துக்கொண்டார்.

“சரி சார், நேரமாகுது நான் கிளம்புறேன்.” “எம்மா வந்த விசயம் என்னன்னு தயங்காம சொல்லிட்டுப் போங்கம்மா. என்னால எந்த வில்லங்கமும் வராது.” இவரிடம் சொல்வதால் என்ன ஆகி விடப்போகிறது என நினைத்தாலும், ஆதிமூலம் வாத்தியாரும் அதே பள்ளியில் பணியாற்றியவர் என்கிற அடிப்படையிலும், அவர் தொடர்ந்து வற்புறுத்துவதாலும் பிரச்சினை என்ன என்பதை அவரிடம் சொல்வது என்ற முடிவுக்கு வந்திருந்தார் ரேவதி டீச்சர்.

“சார், மின்சார வாரியத்துலேருந்து கடிதம் வந்திருக்கு” எனத் தொடங்கி தன் முன் இருக்கக்கூடிய அனைத்துச் சங்கடங்களையும் சொல்லி முடித்தார். “இன்னும் ஐந்து நாளுக்குள்ள நான் பதில் தரணும். அந்தப் பதிலும் ஏற்புடையதா இல்லன்னா, நேரடி விசாரணைக்கு நம்ம உயரதிகாரிகளே வருவாங்களாம். கிருஷ்ணமூர்த்தி சார் எதுக்காக இப்புடி ஒரு காரியத்த செய்யணும்?” ரேவதி டீச்சரின் முக வாட்டத்தை உற்றுப் பார்த்தார் ஆதிமூலம் வாத்தியார்.

“எம்மா எனக்கும் இந்த விஷயமெல்லாம் தெரியும்மா. அந்தப் பயலுங்க ஆறு பேரும் எங்கக்கிட்ட படிச்சவனுங்க தாம்மா.” “ஆனா நாலாவதுகூடத் தாண்டலயே சார்.” “உண்மதாம்மா. அவனுங்கள பள்ளிக்கொடம் வரவுடாம கெடுத்ததே அந்த மின்வாரிய ஆளுங்கதாம்மா.”

“என்ன சார் சொல்றீங்க?” “ஆமாம்மா. அப்பதான் ஊருக் குள்ள புதுசா கரண்டுமரம் நட்டு கரண்டு கொண்டுக்கிட்டு வந்தா னுங்க. ஊரு, வயக்காடு, கோயிலு, பள்ளிக்கூடம் எல்லா எடத்துக்கும் கரண்டு போயி சேரணும். அதுக்கு அங்கங்க குழிதோண்டி மரம் நட்டுக் கம்பி இழுத்துக் கட்டணும். இதை யெல்லாம் ஊருசனமே வேடிக்கையா நின்னு பாக்குறது உண்டு.

லீவு நாளுல அப்புடி வேடிக்க பாக்கப் போயி நின்ன பயலுங்கதான் இவனுங்க. சின்னப்பயலுங்க கைகாலு பரபரன்னுதான இருக்கும். குழிக்குள்ள எறங்கி குழிமண்ண கரையேத்த உதவியிருக்கானுங்க. அவனுங்களும் போண்டா, வடை, டீன்னு அங்க கொடுக்குறதப் பயலுகளுக்குக் கொடுத்திருக் கானுங்க.

இந்தப் போண்டா, வடை ருசிக்காகவே மறுநாளு, மறுநாளுன்னு போயிருக்கானுங்க. பொடிப்பசங்களா இருந்தாலும் நல்லா வேல செய்யிறதப் பாத்து குழிக்கி எட்டணா, ஒரு ரூவான்னு கொடுத்துச் செய்யச் சொல்லிருக்காங்க அந்த ஆளுங்க. ஆரம்பத்துல பள்ளிக்கூடம் போறேன்னு பொய் சொல்லிட்டுப் பைய ஆலமரத்துல மாட்டி விட்டுட்டு, வீட்டுக்குத் தெரியாம கரண்டுகாரன் பின்னாடியே ஓடிக்கிட்டு இருந்தானுங்க. பெறகு வீட்டுக்குத் தெரிஞ்சப்ப பைக்குள்ள வச்சிருந்த சில்லறைய காட்டியிருக்கானுங்க.

காச கண்ணால கண்ட பிறகு, யாரும் கண்டுக்கல. அவனுங்க விருப்பத்துக்கு ஊருஊரா போக ஆரம்பிச்சிட்டானுங்க. ஆரம்பத்துல குழி தோண்டிக்கிட்டு இருந்தவனுங்க, போகப்போக போஸ்ட் எறக்கி நிறுத்தவும் கம்பி இழுத்துக் கட்டவும் உதவியிருக்கானுங்க. ஒரு கட்டத்துக்கு மேல இவனுங்கள விட்டா வேலை நடக்காதுங்குற மாதிரி ஆயிட்டு.

இதுக்கு எடையில நம்ம கிருஷ்ணமூர்த்தி சாரு ரெண்டு, மூணு தடவ அவனுங்க வேல செய்யிற எடத்துக்கே போயி புத்திமதிய சொல்லிக் கூப்புட்டுப் பாத்தாரு. அவனுங்க மசியல. பெறவு பள்ளிக்கூட ஆண்டு ஆய்வுக்குப் போயி கூப்பிட்டாரு ‘எலேய் இன்னைக்கு ஒரு நாளு மட்டுமாவது வாங்கடா. அதிகாரி தலைய எண்ணும்போது வகுப்புல இருந்தீங்கண்ணா அஞ்சாவதுக்கு பாசாக்கி விட்டுருவேன்டா’ன்னு எவ்வளவோ கெஞ்சிப் பாத்தாரு. அப்புடியும் அவனுங்க வரல.” என்ன செஞ்சிருப்பார் கிருஷ்ணமூர்த்தி வாத்தியார்? அடுத்த வாரம் பார்ப்போம்.

(நதி அசையும்)

- thamizhselvi1971@gmail.com

SCROLL FOR NEXT