ஜப்பானிய எழுத்தாளர் சாவ் இச்சிகாவா எழுதிய ‘Hunchback’ நாவல், 2025ஆம் ஆண்டின் சர்வதேச புக்கர் பரிசுக்கான நெடும்பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ‘கூன் முதுகு’ எனப் பொருள்படும்படி அமைந்த இந்த நாவல், உடல் குறைபாடு கொண்டவர்களின் உடல் தேவைகளையும் பாலியல் விருப்பங்களையும் பற்றிப் பேசுகிறது.
இந்த நாவலை எழுதிய இச்சிகாவா, பிறவிக் குறைபாடு கொண்டவர். தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட இவர், சக்கர நாற்காலியிலும் சுவாசக் கருவிகளோடும் தன் வாழ்நாளைக் கழிக்கிறார். உடல் குறைபாடு காரணமாக எந்தப் பணிக்கும் போக முடியாத சூழலில் எழுத்தாளராகும் முடிவை 20 வயதில் எடுத்தார்.
தொடக்கத்தில் காதல் கதைகளை எழுதிவந்தார். தன் பெரும்பாலான காதல் கதைகள் தஸ்தாயெவ்ஸ்கியின் ‘தி இடியட்’ நாவலைத் தழுவி எழுதப்பட்டவை எனச் சொல்லும் இச்சிகாவா, ஹெர்மன் ஹெஸ் எழுதிய ‘சித்தார்த்தா’ நாவல், தன் பகுத்தறிவுக்கும் ஞானத்துக்கும் இடையே வார்த்தைகளால் பாலம் அமைத்து வாழ்க்கையில் எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார்.
அதன் பிறகு தீவிர இலக்கியத்தைக் கையில் எடுத்த இச்சிகாவா, 2023இல் ஒரே மாதத்தில் ‘ஹன்ச்பேக்’ நாவலை எழுதி முடித்தார். இது இலக்கியத்துக்கான ஜப்பானின் முக்கிய விருதான ‘அகுடகவா’ விருதை வென்றது. இந்த விருதை வென்ற முதல் மாற்றுத்திறனாளி என்கிற பெருமையை இச்சிகாவா பெற்றார். ஜப்பானிய மொழியில் இருந்து ‘ஹன்ச்பேக்’ நாவலை ஆங்கிலத்துக்கு பாலி பார்டன் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நாவல் வெளியானபோது பெரும் வரவேற்பைப் பெற்றது. 2,30,000க்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது.