இலக்கியம்

அம்மா என்றால் அவள் வியர்வை நாற்றமும் சேர்த்துதான் | நூல் வெளி

மண்குதிரை

அம்​மாக்​களைப் பாடு​வது நவீன இலக்​கி​யத்​தின் ஒரு அம்​சம். சில படைப்​பு​களில் அம்மா ஒரு திரு உரு​வாக, ஒரு சங்​கல்​ப​மாக இருக்​கிறாள். ஆனால், அம்மா குறித்த இந்​தப் பொதுக் கற்​பிதம் கேள்விக்கு உட்​படுத்​தக்​கூடியது​தான். இந்​தப் பின்​னணி​யில் அம்​மாவைப் பற்றி கன்னட எழுத்​தாளர் வசுதேந்த்ரா எழு​திய இந்த நினை​வுக் குறிப்​பு​கள் விசேஷ​மானது.

அம்​மா​வின் நினை​வுக் குறிப்​பு​கள் என்​கிற பெயரில் எழுதப்​பட்​டாலும் இவை எல்​லை​யில்​லாச் சுதந்​திரத்​துடன் எழுதப்​பட்​டுள்​ளன. தனது பால்ய காலம், கிராமம் குறித்​துச் சுவாரசி​ய​மாக எழுத இந்​தக் குறிப்​பு​களைப் பயன்​படுத்​திக்​கொண்​டுள்​ளார் அவர். அதில் அம்மா ஒரு பங்​கு​தான். ஆனால், ஆதார மைய​மாக அவளை வசுதேந்த்ரா சுழலச் செய்​கிறார். வீட்​டுக்கு டிவி வந்த அனுபவத்​தில் அந்​தக் கால​மும் மனித உணர்​வு​களும் அவ்​வளவு வெள்​ளந்​தித்​தனத்​துடன் பதிவுசெய்​யப்​பட்​டுள்​ளது.

பொறி​யியல் படித்த எல்​லோரிடமும் டியூப் லைட், ஃபேன் மாட்​டத் தெரி​யுமா எனக் கேட்​பது​போன்ற ஒரு கொடூரம் வசுதேந்த்​ரா​வுக்குச் சம்​பவிக்​கிறது. வீட்​டுக்கு வந்த புது டிவி, புள்​ளி​யாகத் தெரி​கிறது. பொறி​யியல் நன்​றாகப் படிக்​கும் தன் மகன் அதைச் சரிசெய்​து​விடு​வான் என அப்பா நம்​பு​கிறார்.

ஊர்ச்​சன​மும் அக்கா​வும் அம்​மா​வும், வசுதேந்த்ரா ரிப்​பேர் செய்​யும் அழகைப் பார்க்​கக் காத்​திருக்​கிறார்​கள். உள்​ளூரில் ரேடியோ ரிப்​பேர் செய்​பவனும் டிவி ரிப்​பேர் செய்​வதைக் கற்​றுக்​கொள்​ளலாம் என்​கிற ஆசை​யுடன் காத்​திருக்​கிறான். வசுதேந்த்ரா உண்​மை​யில் அப்​போது​தான் டிவி என்​கிற சாதனத்​தைப் பார்க்​கிறார். இந்​தப் பிரச்​சினை​யில் அம்​மா​தான் தலை​யிட்​டுச் சரிசெய்​கிறார். இப்​படி அவர் அனுபவத்​தில் அம்மா தன் தலை​யைக் காட்​டு​கிறார்.

டவுசரில் மலம் போய்​விடும் ஒரு சிறு​வன் இந்த எழுத்​துகளுக்​குள் இருக்​கிறான். எள்​ளலுடன் அவனைப் பற்றி வசுதேந்த்ரா சொல்​கிறார். அப்​படி அந்​தப் பையன் எங்கு நின்​றாலும் அம்​மா​தான் துணி​யும் குடத் தண்​ணீரு​மாக வரு​கிறாள். அந்த அம்மா வயதாகி, திராணி​யற்று ஆடை​யிலேயே மலத்தை விட்​டு​விடு​கிறாள். இந்​தச் சூழலில் மகன் என்ன செய்​வான், என்ன செய்​தான்? வசுதேந்த்ரா அதைச் சொல்​கிறார். முன்​பகுதி எள்​ளலை, ஒரு உணர்ச்​சிவச​மான இடத்​துக்கு நகர்த்​தி​விடு​கிறார். இந்த இரண்டு விஷ​யங்​களுக்​கும் வசுதேந்த்ரா காலத்​தைச் சாட்​சி​யாக்​கு​கிறார்.

வாய் விட்​டும் சிரிக்​குமளவுக்​கான அங்​கதம் வசுதேந்த்​ரா​வுக்கு வசப்​பட்​டுள்​ளது. எவர் சில்​வர் பாத்​திரங்​களின் மீதான அம்​மா​வின் ப்ரி​யம் அவளின் குணாம்​ச​மாகவே வெளிப்​பட்​டுள்​ளது. அந்​தக் காலத்​துப் பெண்​களின் பாத்​திரப் பற்று வியக்​கத்​தக்​கது​தான். ரயில் பயணத்​தில் ஒரு சொந்​தக்​கார பையன் ஒரு டம்​பளரைக் கழு​வி வைக்​கிறேன் என வெளி​யில் தவற​விட்​டு ​விடு​கிறான். அது ‘டன்’ என்​கிற சத்​தத்​துடன் விழுந்​து​விட்​டது. அம்மா அபாயச் சங்​கி​லியைப் பிடித்து ரயிலை நிறுத்​தப் போய்​விட்​டாளாம்.

திரும்பி வரும்​போது தண்​ட​வாளத்​தில் அந்த டம்​பளரை ஒரு​முறை பார்த்​து​விட​மாட்​டோமா எனப் பார்த்​த​படியே வந்​தாளாம். தனக்​குப் பிடித்த தெலுங்கு சீரியலை அப்​பாவைப் பார்க்​க​ வைத்​துள்​ளார் அம்​மா. அப்பா இறந்த காரி​யத்​தின்​போது “அந்த சீரியல் முடி​யம்​வரை உன் அப்பா உயிரோடு இருந்து அதைப் பார்த்​து​விட்​டார்” என உணர்ச்​சிவசப்​பட்​டாளாம். ஆனால், இவருக்​குத்​தான் காரிய நிகழ்ச்​சி​யிலும் சிரிப்பு வந்​து​விட்​ட​தாம்.

அக்​கா​வின் திரு​மணச் சீர்​வரிசைப் பாத்​திரங்​களைக் கொடுக்கப்​போன அனுபவ​மும் இவரது அங்​கச் சுவைக்​கான சான்​று.
பேருந்​தில் சீர்​வரிசை​யுடன் ஏறி​விடு​கிறார். பிறகு நடந்​தது இது​தான்: “அம்மா சொன்​னது போல் காலடி​யில் பெட்​டியை வைத்​துக் கொண்​டேன். ஆனால் காலஞ்​சென்ற டி. கே. ராம​ராயருடைய விறு​விறுப்​பான துப்​பறி​யும் நாவல் ஒன்றை வாசித்​துக் கொண்டு உட்​கார்ந்​திருந்​தேன். ராயர் அடுத்​தடுத்​துப் பிணத்தை விழ​வைத்​துக் கொண்​டிருந்​தார்.

நான் யாரைக் கொலை​காரன் என்று ஊகித்​துக் கொண்​டிருந்​தேனோ அவனே கொலை​யா​னான். யாரோ காலைக் கொஞ்​சம் நகர்த்​துங்க என்​றார். நகர்த்​தினேன். பெட்​டியை நைசாக அவர் ஏதோ நிறுத்​தத்​தில் எடுத்​துக் கொண்டு போய்​விட்​டார். கொலை எல்​லாம் முடிந்​து, குற்​ற​வாளி யார் என்று தெரி​யும்​முன் அக்கா ஊர் வந்து​விட்​டது” ஆனால், சீர்​வரிசைப் பாத்​திரங்​கள் போய்விட்டன.

இந்த நூலுக்​குள் அம்மா எங்​கும் நிறைந்​திருக்​கிறாள்; அவள் பார்வை இல்​லை. ஆனால், அது குறை​யில்​லை. புனை​வுக்கு உரிய லட்​சணங்​கள் இந்த அனுபவங்​களில் தோய்ந்​திருக்​கின்​றன. ஆனால், வாழ்க்​கை​யைக் குறித்த ஆழமான பார்வை இல்​லை. இந்த நூலின் மனிதர்​கள், மனித சங்​கல்​ப​மாக இருக்​கிறார்​கள்; கேலிச் சித்​திரக் கதை​யின் கதா​பாத்​திரங்​களைப் போல் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளனர். ஒரு விகல்​பமில்​லாத்​தன்மை அதனால் தான் வெளிப்​பட்​டிருக்கிறது.

இந்த எழுத்துகளுக்கு யார் மீதும் எந்​தப் புகாரும் இல்​லை. மாறாக அவர்​களது இயல்​பு​கள் என அவை ஆனந்​த​மாகச் சொல்​லப்​பட்​டுள்​ளன. வாழ்க்கை பற்​றிய குதூகலம் நூலில் வெளிப்​பட்​டுள்​ளது. ‘தவறுகள் செய்​தால் சாமிகண்​களைக் குத்​தும் என்​றாய்​/ஒரு​முறை தவிட்​டுக்​காக/​வாங்​கினேன் உன்னை என்​றாய்​/...எத​னால் இன்று பொய்​களை நிறுத்​திக் கொண்​டாய் அம்​மா?’ என்​கிற ஞானக்​கூத்​தன் கவிதை​யில் காட்​சிப்​படுத்​தும் அம்​மாவைப் போல் ஒரு அம்​மா​வைத்​தான் வசுதேந்த்ரா இந்த நூல் வழி திருத்​த​மாகச் சொல்​லி​யுள்​ளார். அவரும் அம்​மாவு​மான உலகம், இந்த நூல் வழித் தனித்து மேலெழும்​பி ஒரு சிட்​டுக்​ குரு​வியைப்​ போல்​ சிறகசைக்​கிறது. அந்​தச்​ சிறகசைவு நமது நினைவுக்​ கட்​டுகளையும்​ அவிழ்​த்​துவிடுகிறது.

- தொடர்​புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்
வசுதேந்த்ரா (தமிழில்: கே.நல்லதம்பி)
டூ ஸ்சோர்ஸ் பிரஸ் விலை: ரூ.350
தொடர்புக்கு: 8903665360

SCROLL FOR NEXT