இலக்கியம்

‘கிராமச் சித்திரம்’ முதல் ‘மரபுப்பா வடிவில் இணையத் தமிழ்’ | நூல் நயம் 

செய்திப்பிரிவு

மானிடவியலாளர் பக்தவத்சல பாரதியின் இந்நூலில், 54 ஆளுமைகளின் கிராம வாழ்க்கை சார்ந்த சித்திரம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கட்டுரையாளர்கள், தங்கள் நினைவுகளில் இருந்து பால்யகாலக் கிராமத்தை மீட்டெடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கிராமம் குறித்த பெயர்க்காரணமும் சுவாரசியமாக இருக்கின்றன. கதை கேட்பதிலுள்ள சுவாரசியம் இந்தக் கட்டுரைகளைப் படிப்பதிலும் கிடைப்பதுதான் இந்நூலின் சிறப்பு. தமிழகம், இலங்கையின் அரைநூற்றாண்டுக்கு முந்தைய கிராமங்களையும் அதன் இயக்கத்தையும் தெரிந்துகொள்ள இந்நூல் பயன்படும்.

இந்நூலின் கட்டுரைகள் பெரும்பாலும் அவரவர்களின் வட்டார மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. ‘தமிழ் ஊர்கள்: பருப்பொருளும் நுண்பொருளும்’ என்ற பக்தவத்சல பாரதியின் முதல் கட்டுரை, சங்க காலம் முதல், ஊர் எனும் நிலையான வாழ்விடங்கள் எப்படி உருவானது என்பதைத் தகுந்த இலக்கியத் தரவுகளின் துணையுடன் விளக்குகிறது.

குறிஞ்சி நிலத்தில் வீடுகள் ஓரிடத்தில் தொகுப்பாக இல்லை; நேர்க்கோட்டுக் குடியிருப்புகள் உருவானபோதுதான் தெருக்கள் உருவாகியிருக்கின்றன. சங்க காலத்தில், சேரி என்பது ஒத்த வகையின மக்களின் குடியிருப்பு என்ற பொருளிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. இடைக்காலத்தில்தான் தொழில் சார்ந்து சேரிகளுக்குப் பெயர் வைக்கும் முறை உருவாகியிருக்கிறது.

பெரும்பாலான கிராம தெய்வங்கள் கொலையில் இருந்தே பிறந்திருக்கின்றன என்கிறது பேரா.வீ.அரசுவின் கட்டுரை. இவரது கட்டுரையில் கிராமம் பெருமிதத்தின் ஒரு பகுதியாகப் பதிவாகியுள்ளது. ஆனால், அதில் மாற்றம் நிகழ்ந்திருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். கிராமம் என்பது நெகிழ்ச்சியான அனுபவங்கள் என்பதைக் கடந்து, பல கசப்பான அனுபவங்களும் நிரம்பியதுதான் என்கிறது அழகிய பெரியவனின் கட்டுரை. ஏனெனில், சாதியை, நகரங்களைவிடக் கிராமங்களே இன்றும் பாதுகாத்து வருகின்றன.

ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கிராமம் என்பது சாதியோடு தொடர்புடைய ஒரு நிலம். கிராமத்தில் தன் குடும்பம் என்னவாக இருந்தது என்பதைப் பொறுத்தே அதன் உன்னதங்கள் கட்டமைக்கப்படுகின்றன. பலரது கட்டுரைகள் கிராமங்களின் நெகிழ்ச்சியுடன் அதன் போதாமைகளையும் சேர்த்தே பேசியிருக்கின்றன. அதனால்தான் இந்த நூல் ஒரு முன்மாதிரியாக இருக்கிறது.

ஈழத்தைச் சார்ந்த ஆளுமைகளுக்குச் ‘சொந்த ஊர்’ என்ற சொற்சேர்க்கையே பதற்றத்தை உருவாக்குகிறது. உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர்களது நினைவுகளில், சொந்த நிலம் என்பது கொடுங்கனவாகவே பதிவாகியிருக்கிறது.

அதனைப் பற்றிய நினைவுகள்கூடத் துயரத்திற்கே இட்டுச் செல்கின்றன என்ற தன்மையில் பலரது கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இந்நூல், கிராமத்தின் தன்மை அறியாதவர்களுக்குப் புதிய திறப்பினை உருவாக்கும். பணியின் நிமித்தம் கிராமத்தைவிட்டு பெயர்ந்தவர்களுக்கும் நல்லதொரு நினைவு மீட்டலாகவும் இருக்கும். - சுப்பிரமணி இரமேஷ், பேராசிரியர்.

எங்கள் ஊரில் எங்கள் வாழ்க்கை
தொகுப்பாசிரியர்: பக்தவத்சல பாரதி
அடையாளம் பதிப்பகம்
விலை: ரூ.960
தொடர்புக்கு: 9444772686

இலங்கையின் இடதுசாரி அரசியல் முகம்: அநுர குமார திசாநாயக்க (ஏ.கே.டி) கடந்த ஆண்டு செப்டம்பர் 21இல் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் 55.89 சதவிகிதம் வாக்குகள் பெற்றுவென்றார். இடதுசாரி குறிக்கோளுடன் இயங்கும் கட்சியை சேர்ந்த ஒருவர், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

ஜேவிபி தலைமையிலான கூட்டணி மக்கள் செல்வாக்கைப் பெற்றது எப்படி? இந்தச் செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்ளுமா? இடதுசாரி அரசால் இலங்கையின் தடுமாறும் பொருளாதாரத்தைச் சீர்தூக்க இயலுமா? என்கிற கேள்விகளுக்கு விடைகாண முயலும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.

பத்திரிகையாளரான டேவிட் பியூவெல் சபாபதி (டி.பி.எஸ்) ஜெயராஜ், இலங்கை ஆங்கில இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ‘தினக்குரல்’ பத்திரிகை முதன்மை ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் இவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இதன் தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இதன் முதல் கட்டுரை, ‘அநுர திசாநாயக்க இலங்கை வானில் இடதுசாரி நட்சத்திரம்’ ஏ.கே.டியின் எளிய குடும்பப் பின்னணியையும், அவரது அரசியல் பிரவேசத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது. கடந்தகாலங்களில் ‘இந்திய எதிரி’, ‘தமிழர் எதிரி’,‘மார்க்சிய பயங்கரவாதி’ ஆகிய மகுடங்களை ஏ.கே.டிக்கு எதிரிகள் சூட்டியுள்ளார்கள்.

ஆனால், கடந்த ஏழு மாதங்களில் சமயோசித அரசியலுக்கு எடுத்துக்காட்டாக ஜனாதிபதியாகச் செயல்பட்டு வருகிறார். ஜேவிபி கட்சியில் அநுரவின் வளர்ச்சியைப் பற்றி விவரிக்கிறது இரண்டாவது கட்டுரை. ஜேவிபி 1980-90 காலகட்டக் கிளர்ச்சியில் ரணசிங்க பிரேமதாசா அடக்குமுறையைக் கட்ட விழ்த்துவிட்டு ஜேவிபியின் தலைவர்களை அழித்தபோது சோமவன்ச அமரசிங்க தலைமையில் அநுர எவ்வாறு ஜேவிபியை மீண்டும் உயிர்ப்பிக்கச் செயல்பட்டார் என விளக்குகிறது.

கட்டுரைகள் மூன்றும் நான்கும் ஜேவிபி, தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் வளர்ச்சியில் ஏ.கே.டியின் பங்கைத் தெரிவிக்கின்றன. ஐந்தாம் கட்டுரை. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி காணலாம் என்பதை அநுர எவ்வாறு உணர்ந்தார் என விளக்குகிறது.

என்னைப் பொருத்தவரை, இந்தப் புத்தகத்தில் வடக்கு மாகாணத்தில் அநுரவுக்கு அளித்த தமிழர் ஆதரவை அலசும் கட்டுரைகள் முக்கியமானவை. அவை தேசிய மக்கள் சக்தி சற்றும் எதிர்பாராத விதமாகப் நாடாளுமன்றத்தில் மூன்று இடங்களைக் கைப்பற்றியதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அதுபோலவே எட்டாவது கட்டுரை, கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சியின் வெற்றியை விமர்சிக்கிறது. இலங்கையிலும் தெற்காசிய உபகண்டத்திலும் அரசியல், சர்வதேசச் சூழ்நிலைகள் மாறிவருகின்றன. இத்தகைய சூழலில், இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர இப்புத்தகம் மிகவும் உதவும். - கேணல் ஆர் ஹரிஹரன்

அதிகாரத்தின் வர்க்க மாற்றம்
டி.பி.எஸ் ஜெயராஜ் (தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்)
குமரன் புத்தக இல்லம்
விலை: ரூ.229 (இந்திய ரூபாயில்)

மரபுப்பா வடிவில் இணையத் தமிழ்: மத்திய அரசின் செம்மொழி இளம் அறிஞர் விருதைப் பெற்ற முனைவர் மு.இளங்கோவன், இணையப் பயன்பாட்டைப் பரவலாக்கியதிலும், இணைய வழி தமிழறிஞர்களின் வாழ்வியலைப் பதிவு செய்ததிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியவர். இணையத்தின் வழியாக அணுகப்படும் ‘உலகளாவிய வலை’ப் பின்னலான ‘WWW’-வின் மூலமாக, செம்மாந்த தமிழின் இலக்கிய – இலக்கணச் சிறப்புகளையும், அறிஞர் பெருமக்கள் ஆற்றிய தமிழ்ப் பணிகளையும் பலரும் அறியும் வகையில் பதிவுசெய்ததோடு, இணையத் தமிழின் வரலாற்றையும் மரபுப்பா வடிவில் ஆவணப்படுத்தியுள்ளார்.

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான ஆற்றுப்படை நூலைப் போல், இக்காலத்தின் தேவையைக் கருத்தினில் கொண்டு இந்த இணைய ஆற்றுப்படை நூலைப் படைத்துள்ளார். தமிழகச் சிறப்பு, தமிழ் மக்களின் எழுச்சி, தமிழர்களின் உலகப் பரவல் என்பதாகத் தொடங்கும் இந்த மரபுப்பா நூலில், கணினி-இணையத்தின் வரவு, இணையப் பல்கலைக்கழகத்தின் தோற்றமும் பணிகளும், உலகத் தமிழ் இணைய மாநாடுகள், இணையத்தால் தமிழுக்கு விளைந்த பயன்கள் என 563 பாடலடிகளில் சுருக்கமாகவும் சுவைபடவும் எழுதியுள்ளார்.

நூலின் பின்னிணைப்பாக தமிழ் வளம் தாங்கிய 50 இணையதளங்களின் பட்டியலையும், தமிழ் இணையத்துறைக்குப் பங்களித்தோர் என 30 மூத்த, இளைய தமிழறிஞர்களைப் பற்றிய குறிப்பைப் படத்தோடு தந்திருப்பதும் பாராட்டத்தக்கது. - மு.முருகேஷ்

இணைய ஆற்றுப்படை -
முனைவர் மு.இளங்கோவன்
வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு.
விலை: ரூ. 100/- செல்: 9442029053

SCROLL FOR NEXT