இலக்கியம்

ரத்தங்களின் கூப்பிடல்கள் | நூல் வெளி

அகரமுதல்வன்

நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவை. துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவை; வேதாகமத்தின் இந்தக் கூற்று, ஈழத்தமிழரின் மாபெரும் துயரத் தொடர்ச்சியோடும் பொருந்துகின்றன. முன்னர், தாம் கொல்லப்படுவதற்கு எதிராகப் போராடினார்கள். இன்றோ கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூரவும் போராடுகிறார்கள். இனப்படுகொலைக் களத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மகவுகளையும், அம்மைகளையும், அப்பன்களையும் எங்கேயெனக் கேட்டுப் போராடுகிறார்கள்.

சமகால ஈழ இலக்கிய ஆன்மாவின் குருதியூற்றில் ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ என்பது ஆதாரமானதாய் உருப்பெற்றுள்ளது. போர் சார்ந்த மானுடத் துக்கத்தை இனிவரும் நூற்றாண்டுகளுக்கும் ஈழத் தமிழர்கள் எழுதுவார்கள். கவிஞர் கருணாகரனின் ‘காணாமலாக்கப்பட்டோருக்காக இரண்டு செயலிகள்’ கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள், மூச்சூறி மூளும் பிரார்த்தனையின் கடும் தவமாய்த் கொதிக்கின்றன.

ஆதியில் கனவின் மீது எழுப்பப்பட்ட யுகமொன்றின் அந்தம் அணைந்த நாட்களில், விண் எழுந்த ஓலங்களின் நோவை மொழிபிளந்து, ஆறாத காயத்தின் அனலாக தகிக்க வைத்திருக்கிறார் கருணாகரன். யுத்தத்திற்குப் பிந்தைய வாழ்வின் பிடிமானத்திற்கு நினைவுகளும் – நினைவுகூரல்களும் அவசியமாகவே உள்ளன.

போரின் எச்சங்களாய்த் தப்பி நிற்கும் தெய்வங்களுக்கு முன்பாகத் தங்கள் கண்ணீரைப் படையலிட்டபடி இருக்கும் சனங்களுக்கு இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. அப்பாவிகளின் கண்ணீரால் முடிவிலா ஈமத்தீ மிளாசுகிறது. அதன் மூட்டம் இந்தத் தொகுப்பு முழுவதும் பரவியிருக்கிறது.

கருணாகரனின் கவிதைகளில் காலம், ஓர் ஆற்றலுடைய சக்தியாக அமைந்துள்ளது. ஈழக் கவிதைகளின் தனித்துவமாகக் கருதப்படும் மரபுச் செறிவும், கலை மனதால் உள்வாங்கப்பட்டு வெளிப்பட்ட வாழ்வனுபவமும் அவரது படைப்புக்களுக்கு இன்றுவரை சிறப்பையே தருகின்றன.

இத்தொகுப்பில் முக்கிய அம்சங்கள் நான்கு உள்ளன. ஒன்று: அழித்தொழிப்பின் சாட்சியங்களாகியிருக்கும் பெண்களின் உத்தரிப்பு. இரண்டு: ஊழிக்காலத்தின் சாட்சியாகவும் ஒப்பாரியாகவும் தொடரும் ஒரு வாழ்க்கை முறை. மூன்று: என் பிள்ளை எங்கே? என் தந்தை எங்கே? என் அம்மா எங்கே? என் சோதரர் எங்கே? என்று கேட்கும் கதியற்றோரின் நோன்பு.

நான்கு: ஈழக் கவிதைகளின் பொதுவான போர் சித்திரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இன்னும் அழுத்தமாகச் சொன்னால் நேரடியான போர் விவரிப்புகளை – அதனது அவல அனுபவங்களை விட்டு வெளியேறிய முதல் கவிதைத் தொகுப்பு எனவும் இதனைக் கூறலாம். ஈழ இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞர்களின் நிரையில் கருணாகரனுக்கு எப்போதும் இடமுண்டு. இத்தொகுப்பு இன்றுள்ள இளைய படைப்பாளிகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது.

‘நீ இன்னும் வரவில்லை/உனக்கென எடுத்து வைத்த சோற்றுள்/இன்றும் நீரூற்றுகிறேன்/வருவாய் நீயெனத் திறந்து வைத்த/கதவுகளை சாத்தவில்லை/நீ வரவில்லை இன்னும்/இரவும்/மென்குளிரோடு அதிகாலையும் வரும்/பிறகொரு/செம்மாலைப்பொழுதும்/நீயின்றி.../நீயின்றித்தானா?’ இந்தியாவின் நெருக்கடிநிலை காலத்தில் கேரளத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பேராசிரியர் டி.வி.ஈச்சரவாரியரின் மகன் ராஜன் வழக்கை, சிலர் அறிந்திருக்ககூடும்.

காணாமலாக்கப்பட்ட பிள்ளைகள் வீடு திரும்புவார்கள் என்று காத்திருக்கிறார்கள். நம்புகிறார்கள். ‘ராஜன் வந்துவிடுவான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையிருந்தது. இரவு எப்போதுமே ஒரு இலைச்சோறு தயாராக வைத்திருக்கும்படி நான் என் மனைவியிடம் சொல்லி வைத்திருந்தேன்.

அவன் திடீரென்று வந்துவிடுவான். பட்டினி கிடந்தது பசித்த வயிற்றுடன் சோர்ந்துபோன சரீரமுமாக அவன் வருவான். அப்போது சாப்பாடு தயாராக இருக்க வேண்டும். நிச்சயமாக அவன் வருவான். அவனால் வராமலிருக்க முடியாது’- ஈச்சரவாரியரின் நினைவலைகளில் என்னைப் பீடித்த வார்த்தைகள் இவை. பிராந்தின் நிழல் கவிந்தும், தமது சிறகுகளைத் துரிதமாக்கித் தன்னுடைய கூடடையும் குஞ்சுப் பறவையாக மகவுகள் தப்பிக்கவேண்டுமென எண்ணுகிறார்கள். கருணாகரனின் இந்தக் கவிதையில் அன்றாடம் அழிந்திருக்கிறது.

பொழுதுகள் குலையாமல் நிகழ்கின்றன. ஆனால் எல்லாப்பொழுதிலும் காத்திருத்தலே இயற்கையாக அமைகிறது. இத்தொகுப்பின் கவிதைகளில் விவரிப்பின் துல்லியமும் கலையமைதியும் வலுவாயுள்ளன. மீண்டும் மீண்டும் காலத்துடனும் இயலாமையுடனும் போரிட்டபடியே இருக்கும் ஒரு தொல்குடியின் நீதிக்கான பரிதவிப்பு தீவிரமாக்கப்பட்டிருக்கிறது.

துயரம் கொண்ட எந்த மானுடரும் அவரது கவிதைகளோடு நெருக்கம் கொள்வார். ‘காணாமலாக்கப்பட்ட தந்தையை தேடிக் கண்டறிய ஒரு செயலி வேண்டுமென்று’ சிந்திக்கும் சிறுவனின் குரல், வாசிக்கும் நம்மை நடுங்கச் செய்கிறது. ஈழத் தமிழருக்கு நேர்ந்த கோரங்களையும் சிறுமைகளையும் எண்ணி உலக நாகரிகம் வெட்கப்படுமென்று நம்பிய காலங்கள் குருதிக் குமிழிகளாய் உடைந்து மாய்ந்து போயின. துக்கம் என்றொரு வார்த்தையால் படுகொலைகள் மறக்கடிக்கப்பட்டன.

கருணாகரனின் கவிதைகள் இழப்பையோ அவலத்தையோ அறிக்கை செய்யவில்லை; கண்பிளந்திருக்கும் காயங்களோடு ஈழத்தில் எஞ்சியிருக்கும் வாழ்க்கையின் சாத்தியத்தை விசாரணை செய்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகச் சதா கதவுகளை அகலத் திறந்து காத்திருக்கும் ஈழத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் அலைவுறும் வார்த்தைகள்தான் இந்தக் கவிதைகள்.

காணாமலாக்கப்பட்டோருக்காக இரண்டு செயலிகள்
கருணாகரன்
வையம் பதிப்பகம், விலை: ரூ.80
தொடர்புக்கு: 97151 46652

- தொடர்புக்கு: akaramuthalvan01@gmail.com

SCROLL FOR NEXT