இலக்கியம்

நினைவுகளைப் பேசும் நாவல் | நூல் நயம்

செய்திப்பிரிவு

முதுமைக்குப் பழைய நினைவுகளே, ஆறுதல். அசை போட்டு மகிழ்தல் எப்போதும் ஆனந்தம். தேனி சீருடையான் எழுதியிருக்கும் ‘ஊத்து’ நாவலும் அப்படித்தான். பார்வை மங்கிவிட்ட அறுபது வயதான பாலமுருகனின் நினைவைத் தூண்டுகிறது, ஒரு ஃபோன் அழைப்பு. அது அவரை காலத்தின் பின்னோக்கி, தனது பள்ளிப் பருவத்துக்கு அழைத்துச் செல்கிறது.

அது, பார்வையிழந்தோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி. ஆந்திரா, கேரளா, உ.பி என பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களில், பாலமுருகனுக்கும் மகாலட்சிமிக்குமான காதல், படித்து முடித்த பின் பார்வை கிடைக்கிற பாலமுருகன் கால ஓட்டத்தில் என்னவாகிறார் என்பதைச் சொல்லும் நாவல் இது.

இவற்றின் பின்னணியில் அவர் காட்டுகிற தேனி வட்டார நிலவியலும் அந்தப் பேச்சு வழக்கும், விவரணைகளும் அடடா என ஆச்சரியப்பட வைக்கின்றன. பார்வை குறைபாடு உடையவர்கள் பிரைலியில் எழுதும் முறை, குரங்கின் தன்மைகளைச் சொல்லும் பூசாரியம்மா, தோட்டக்கார அண்ணன் பச்சைமலை, திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் விலகிய போது தேனியில் நடந்த விஷயங்கள், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த பாலுவுக்கும் செண்பகாவுக்குமான காதல், கல்யாணம், அவர்களுக்கான காதல் உரையாடல்கள், காதலுக்கு உதவும் பாஞ்சாலியக்கா, பணமதிப்பிழப்புக் காலத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினை என இதில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் நாம் சந்தித்தவர்களாகவும் இதன் பல சம்பவங்கள் நாம் நேரில் கண்டது போலவும் இருப்பதும் இந்நாவலின் சுவாரசியம். - அழகு

ஊத்து
தேனி சீருடையான்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.400
தொடர்புக்கு: 99404 46650

திரையும் ஊடகமும்: சில எதிர்நிலைகள்: சமூகத்தில் கருத்தை பரப்பக்கூடிய திரைப்படத் துறை, ஊடக உலகம் ஆகிய சக்திமிக்க துறைகள் இன்றைக்கு யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பது பற்றியும், மாறாக இதே துறைகளில் இருந்தபடி மக்களுக்காகச் செயல்படுபவர்கள் பற்றியும் இந்தக் குறுநூலில் விவரித்துள்ளார் அ.ப.அருண்கண்ணன். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியத் தலைமை ஒளிப்படக் கலைஞராக இருந்த டேனிஷ் சித்திக், புகழ்பெற்ற புலிட்சர் விருதைப் பெற்றவர்.

தாலிபான் உள்நாட்டுக் கலவரத்தை படமெடுக்கச் சென்றபோது கொல்லப்பட்டவர். அவரது செயல்பாடுகள் பற்றி ஒரு கட்டுரையும், பாலஸ்தீனத்தை வலிந்து ஆக்கிரமித்த இஸ்ரேல், சில ஆவணப்படங்கள் வழியாக அந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொண்டது என்பதைப் பற்றி ஒரு கட்டுரையும் பேசுகின்றன. இறுதிக் கட்டுரையாக பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக சிறையில் இருந்தபடி போராடி வரும் மர்வான் பர்கௌதி பற்றி அமைந்துள்ளது. - அன்பு

விலக மறுக்கும் உண்மைகள்
அ.ப.அருண்கண்ணன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.70
தொடர்புக்கு: 044 24332924

SCROLL FOR NEXT