அ.முத்துலிங்கத்தின் மொழி பெயர்ப்பில் வெளியாகியிருக்கும் 'பூனை மனிதன்' சிறுகதைத் தொகுப்பில் 16 கதைகள் உள்ளன. ஃபாரா அகமது ஒரு பாகிஸ்தானியர். லண்டனில் வசிக்கிறார். ஓர் அலுவலுக்காக லாகூர் வந்தவர், அங்கு உயர்நீதி மன்றத்தைப் பார்க்கச் செல்கிறார். அங்கே ஆண்கள்தான் நிறைந்திருக்கிறார்கள். நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தர்கள், வாதிகள், பிரதிவாதிகள், சாட்சிகள், காவலர்கள் எல்லோரும் ஆண்கள். நூலகத்தில் பெண் எழுத்தாளர் எழுதிய ஒரு புத்தகம் போலும் இல்லை.
“ஏன் இங்கே பெண்களே இல்லை, நீதிமன்றம் இருபாலருக்கும் சமநீதி வழங்கும் இடமல்லாவா”- ஃபாராவின் கேள்விக்கு, வளாகத்திற்கு வெளியே பென்சில், நோட்டுப் புத்தகம் விற்கும் ஒரு பெண் சுருக்கமாகப் பதில் சொல்கிறார்: “இங்கே அப்படியல்ல, நீங்கள் வெளிநாட்டவர் போல் இருக்கிறது”.
ஜோசிப் நோவோகோவிச் யூகோஸ் லாவியாவில் பிறந்து வளர்ந்தவர். மருத்துவர். அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தவர். ஓர் அலுவலுக்காக ரஷ்யாவில் உள்ள புனித பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வருகிறார். ஒரு காவல் அதிகாரியோடு காரில் போகிறார். அதிகாரி சீருடை அணியவில்லை. அவர் சாலை விதிகளை மதிப்பதுமில்லை.
ஒரு பாதசாரியை மோதி இடித்துவிட்டு அவர் பாட்டுக்குப் போகிறார். மருத்துவ ஊர்தியையோ காவலரையோ அழைக்கவில்லை. அந்தப் பாதசாரி உடலில் ஓடிய ரத்தம் இப்போது சாலையில் ஓடுகிறதே என்று ஜோசிப் மனம் பதைக்கிறது. அவர் காரிலிருந்து இறங்கிக்கொள்கிறார். லாகூர்ப் பெண்ணின் வார்த்தைகளை பீட்டர்ஸ்பர்க் அதிகாரி வேறு வார்த்தைகளில் சொல்கிறார்: “இது ரஷ்யா நண்பரே”.
நூலின் மூன்று கதைகள் பதின்பருவப் பெண்களுடையது. தலைப்புக் கதையான ‘பூனை மனித’னில் வரும் பெண் கல்லூரி மாணவி. அவள் வாலிப வயதைக் கடந்த ஒருவனோடு நட்பாகிறாள். அவனுக்கு நல்ல முத்தம் கொடுக்கத் தெரியவில்லை. ஓர் இளம் பெண்ணிற்கு விருப்பமான பானம் எதுவென்று தெரியவில்லை. உறவில் அவனால் நசுக்கப்படுவதாக அவள் உணர்கிறாள். அந்த உறவை அவளால் தொடர முடியாது. முறிக்கிறாள். ஆனால் அவனது ஆண் மனத்தால் அந்த முறிவைக் கடக்க இயலவில்லை.
இந்தக் கதை, 2017இல் ‘நியூயார்க்கர்’ இதழில் வெளிவந்தது. இரண்டு வாரங்களில் இந்தக் கதையை 15 இலட்சம் பேர் படிக்கிறார்கள். ஆண்கள் அநேகருக்குக் கதை பிடிக்கவில்லை. பெண்களில் பலர் கதையை வரவேற்கின்றனர். கதையின் நிறை குறைகளை பத்திரிகைகள் விவாதிக்கின்றன. சமூக ஊடகம் பற்றி எரிகிறது. 'பூனை மனிதன்' உலகின் முதல் வைரல் சிறுகதையாகிறது.
இப்படியாக, கதைகளின் பின்புலங்களையும் முத்துலிங்கம் விவரிக்கிறார். இந்தக் கதைகள் ஆங்கில இலக்கிய இதழ்களில் வெளியானவை, அல்லது ஆகச் சிறந்த கதைகளின் தொகை நூல்களில் இடம் பெற்றவை. இவற்றைத் தமிழுக்குக் கொணர்ந்திங்கு சேர்த்துள்ளார் முத்துலிங்கம். ஆனால், அந்தப் பணி எளிதாக இருக்கவில்லை. அங்கு கதாசிரியர்களைப் பிடிப்பது கடினம். அவர்களுக்கு முகவர்கள் இருப்பார்கள். அவர்களை அணுகியுள்ளார். தழாசிரியர்களை, பதிப்பாளர்களை அணுகியுள்ளார். கைக்காசிலிருந்து உரிமத்தொகை கொடுத்துத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இது அரும்பணி.
பூனை மனிதன்
உலகச் சிறுகதைகள்
அ. முத்துலிங்கம்
நற்றிணைப் பதிப்பகம்
விலை: ரூ.230
தொடர்புக்கு: 94861 77208
- தொடர்புக்கு:mu.ramanathan@gmail.com