நெருப்பு மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு. ஆனால், இதைப் பாகுப்பாட்டின்பேரில் சக மனிதர்களை அழிப்பதற்காகச் சிலர் பயன்படுத்துகின்றனர். மராத்தி எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலே எழுதிய ‘கும்பல்’ நாவல் இதை அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. மகர் (பட்டியல்) இனத்தைச் சேர்ந்த சுதாமா, சாதிக்காரத் தெருவில் நடந்து சென்றதற்காக அவருடைய வீடு கொளுத்தப்படுகிறது. எரியும் வீட்டில் அவருடைய தந்தை உயிரோடு கொல்லப்படுகிறார்.
எலீ வீஸலின் ‘இரவு’ நாவலில் யூத இன அழிப்புக்காக நாஜிப்படை அமைத்திருந்த வதைமுகாம் நெருப்புக்குழியில் ஒவ்வொருவராக விழச் செய்கிற கொடூரம் உண்டு. அந்தக் கொடூரத்துக்கும் சுதாமாவின் தந்தையை எரியும் வீட்டுக்குள் தூக்கிப் போட்டுக் கொன்றதற்கும் இடையில் ஒரு வேறுபாடு மட்டும் உண்டு. அது சர்வாதிகார நாட்டில். இது ஜனநாயக நாட்டில். இங்கு சாதிதான் மிகப் பெரிய நெருப்புக்குழி.
இந்த நெருப்புக்குழியில் தந்தையைப் போல தன் மகன் ஆனந்தும் பலியாகிவிடக் கூடாது என நினைக்கிற சுதாமா, சாதிக்குப் பதில் ‘மனிதன்’ எனக் குறிப்பிட்டு, பொதுப்பிரிவிலேயே அவனைப் படிக்க வைக்கிறார். அவன் படித்து ஆசிரியராக அதே பிரிவில் ஒரு பள்ளியில் பணிக்குச் சேர்கிறான். அவனை உயர்குடியாகக் கருதியே அனைவரும் பழகுகிறார்கள்.
மரியாதையும் அளிக்கிறார்கள். அதே பள்ளியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த தவ்லத் காம்ப்ளே ஆசிரியராக உள்ளார். அவர் மகர் சாதியினர் எதிர்கொள்ளும் அத்தனை அவமானங்களையும் அவமதிப்புகளையும் சந்திக்கிறார். இந்த இரு கதாபாத்திரங்களின் வழியே பிற கதாபாத்திரங்களுக்குள் நுழைந்து, இந்திய சாதிய மனங்களின் அத்தனை அழுக்கான குறுக்குவெட்டுத் தோற்றங்களையும் சரண்குமார் லிம்பாலே கூறாய்வு செய்துள்ளார்.
சாதியை மறைத்து வாழும் தலித் கதா பாத்திரங்களை வேறு படைப்புகளிலும் லிம்பாலே ஆய்ந் திருந்தாலும், இதில் ஆனந்த் வழியே புதிய திறப்புகளை அளிக்க முற்படுகிறார். சாதியைக் கேட்கும் இடங்களில் எல்லாம் ஆனந்த், மனிதன் என்கிற உண்மையைக் கூறுகிறான். அதேநேரம் குற்றவுணர்வுக்கு ஆளாகிறான். இங்கு ‘மனிதன்’ என்று கூறுவது போலியாகிவிட்டது.
சாதிதான் மனிதனாக இருக்கிறது. மனித நேயம் என்பதும் அவரவர் சாதிக்கு இடையே ஆனதாகக் குறுக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஆனந்த் சாதியை மறைத்தாலும் அறத்துடன் கூடிய மனிதனாக இருக்க முற்படுகிறான். அதுவே அவன் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவனோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அறம் என்பதும் சந்தேகத்துக்குரியதாக மாறிப் போயிருப்பது நாவலின் உணர் வலியாக இருக்கிறது.
யு. ஆர். அனந்த மூர்த்தியின் `சம்ஸ்காரா’ நாவலில் நாரணப்பா, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த சந்திரியோடு சேர்ந்து வாழ்கிறார். நாரணப்பா இறந்த பின்பே சாதிய வெறியிலான அநீதி இழைக்கப்படுகிறது. இந்த நாவலில் நாராயண் என்கிற பட்வால் இனக் குடும்பத்தினரோடு வாழும் ஆனந்த், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் என வெளிப்படுத்தித் கொண்ட மறுகணமே ‘ஜல்லிக்கட்டு’ என்கிற மலையாளத் திரைப்படத்தில் ஓர் எருமையை ஊரே துரத்துவதைப் போன்ற வெறி வெளிப்படுகிறது.
ஆனந்த் வழி உண்டான கருவைக் கலைக்க சுஷ்மா பட்வாலிடம் அவளின் அண்ணி கூறும்போது, “நான் ஒரு மனித உயிரைக் கொல்லமாட்டேன்” என்று உறுதிபடச் சொல்கிறாள். இது வயிற்றுக்குள் இருக்கும் உயிர் சுழலச் செய்யும் தர்மமாக இருக்கலாம். எது எப்படியிருப்பினும் இதுதான் மனிதனுக்கான தர்மம்.
இந்தத் தர்மத்துக்கும் இயற்கைக்கும் நீதிக்கும் எதிராகச் செயல்படுவோரைக் கும்பல் என லிம்பாலே சுட்டிக் காட்டுகிறார். பெரும்பான்மைவாதக் கருத்துகளால் சிறுபான்மைவாதக் குரலை நசுக்குபவர்களும் கும்பலில் அடங்குகின்றனர். அவர்கள் அரசியல்வாதி என்கிற பெயரில் செயல்படுவோராகவும் இருக்கின்றனர். அதேநேரம் நீதிக்காகக் கூடும் கூட்டத்தை அவர் அப்படிச் சொல்லவில்லை என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டியுள்ளது.
லிம்பாலேவின் எழுத்து மேற்பூச்சு தன்மை உடையது அன்று. எரியும் எண்ணெய்ச் சட்டியில் கலை வேலைப்பாடுகள் இருந்தாலும் அது கரி படிந்து மறைந்து போய்விடும். நெருப்பும், எண்ணெய்க் கொதிப்பும்தான் சட்டியின் ஆதாரம். நெருப்பை மேலே போட்டதும் பொசுக்குவது போல லிம்பாலே மனங் களைப் பொசுக்கும் வகையில் சமூகக் கொடூரத்தின் உண்மையை முழு நிர்வாணமாக்கியுள்ளார். அதை அப்படியே ம.மதிவண்ணன் தமிழுக்குத் தந்துள்ளார்.
கும்பல்
சரண்குமார் லிம்பாலே, தமிழில்: ம.மதிவண்ணன்
கருப்புப் பிரதிகள், விலை ரூ. 500, தொடர்புக்கு: 94442 72500