இலக்கியம்

ராபர்ட் கிளைவின் கதை | நூல் நயம்

செய்திப்பிரிவு

இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை நிலைபெறச் செய்தவர்களில் ஒருவர், ராபர்ட் கிளைவ். இவர் அன்றைய சென்னை மாகாணத்தில்தான் கிழக்கிந்தியக் கம்பெனி எழுத்தராக வாழ்க்கையைத் தொடங்கியவர். பிறகு இவர் அன்றைய இந்திய பிரெஞ்சு ஆளுநர் டூப்ளே மேற்கொண்ட கிழக்கிந்தியக் கம்பெனி படைமீதான தாக்குதலை முறியடிக்க உதவினார் என கிளார்க் பெயர் பெற்றார்.

எதிரிகளை நேரடியாக எதிர்கொள்ளாமல் சூழ்ச்சிகரமாக எதிர்கொண்டு வீழ்த்தும் நயவஞ்சகத்துக்கும் பெயர் பெற்றவராக விளங்கினார். இவர் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதனால் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கியும் சேமித்துவைத்த லஞ்சப் பணத்தில் ஒரு பெரும் பணக்காரராகவும் வாழ்ந்து மறைந்தார். பெண் தொடர்புகளை முதன்மைப்படுத்தி அவரது வாழ்க்கை வரலாற்றை இந்த நாவல் பேசுகிறது. - விபின்

காதல் அசுரன் கிளைவ்
எம்.எம்.தீன்
படைப்பு பதிப்பகம்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 73388 97788

ஆசிரியரின் வாழ்க்கை: நாகர்கோவில், கோட்டார்-பார்வதிபுரம் சாலை இன்றைக்குப் பரபரப்பான வர்த்தகப் பகுதியாகிவிட்டது. அந்தப் பகுதியில்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கிறது. அந்த அலுவலக வாசலில் முதியவர் நிலை தடுமாறி விழுகிறார். காரில் செல்லும் மாவட்ட ஆட்சியர் அதைக் கண்டு கீழே இறங்கி ஓடிச் சென்று அந்த முதியவரிடம் தன்னை ரேவதி என அறிமுகப்படுத்திகொள்கிறார்.

அவருக்கு நினைவில்லை. அருகில் உள்ள திரவியல் மருத்துவமனையில் அவரைச் சேர்க்கச் சொல்லி ஆட்சியர் தன் உதவியாளரிடம் சொல்கிறார். இங்கு தொடங்கும் நாவல் பல வருடங்கள் பின்னோக்கிப் பயணித்து நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் விரிகிறது. அங்கு இருக்கிறார் ஜூலியஸ் சார். மாணவர்களை ஆளுமை மிக்கவராக மாற்றிய ஒரு சிந்தனைப் பள்ளியான அவரை இந்த நாவல் விவரித்துச் செல்கிறது. - ஜெய்

ஓதுகலை
ஜி.கிளமென்ட்
கதவு பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 94431184050

திகட்டாத தேன்மிட்டாய்! - ‘இந்து தமிழ் திசை’ இணைப்பிதழான மாயாபஜாரில் இளம் வாசகர்களுக்கு ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கும் மருதனின் எழுத்துகளைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய உள்ளன. எந்த ஒரு சிறிய விஷயத்தையும் எடுத்துக்கொண்டு, அதைத் தன் அபாரமான கற்பனைத் திறனால் அற்புதமான எழுத்தாக மாற்றிவிடும் வல்லமை மருதனுக்கு உண்டு.

இவரின் எழுத்துகள் மூலம் நமக்கு அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் நபர் அல்லது விஷயம் அல்லது கதை மீது அளவு கடந்த ஆர்வமும் மரியாதையும் வியப்பும் ஏற்பட்டுவிடுகின்றன. கட்டுரைகள் அனைத்தும் அன்பையும் அமைதியையும் நட்பையுமே போதிக்கின்றன. அகிம்சையையே வலியுறுத்துகின்றன. நல்ல செயல்களையே ஆணித்தரமாக எடுத்து இயம்புகின்றன. எளியவர்களிடம் அன்பையும் இரக்கத்தையும் காட்டி அரவணைக்கச் சொல்கின்றன.

தேன் மிட்டாய் | நம் வெளியீடு
மருதன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.150
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562

SCROLL FOR NEXT