நம்பி கிருஷ்ணனின் 'நரி முள்ளெலி டூயட்' எனும் கட்டுரைத் தொகுப்பு அழகியலை ரசிப்பதன் வழியே நம் அன்றாடத்தைச் செப்பனிட்டுக் கொள்வதற்கான வழியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இருபது கட்டுரைகளை அடங்கிய இந்தத் தொகுப்பில் எட்டு கட்டுரைகள் திரை மேதைகளைக் குறித்தும் பன்னிரெண்டு கட்டுரைகள் இலக்கிய ஆளுமைகள் குறித்துமாகச் செப்பனிடப்பட்டிருக்கிறது. இந்த இருபது கட்டுரைகளின் வடிவமும் சீராக அமைந்திருக்கின்றன.
சுயானுபவத்தில் தொடங்கும் கட்டுரைகள் ஆளுமைகளின் அறிமுகம், அவர்கள் குறித்தான அடிப்படைத் தகவல்கள், கட்டுரையில் கையாளப்படும் படைப்புகள் குறித்த தகவல்சார் முன்னுரை, அதை வாசிக்கும்போது / பார்க்கும்போது ஏற்பட்ட முழுமையான அனுபவம், பின் அவற்றிலிருந்து பிரித்தறிந்து ரசித்த பகுதிகள் என ஒவ்வொரு கட்டுரையும் முழுமையுடன் நிறைவு பெறுகிறது.
திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளுக்கென தனித்த வரையறைகளை கட்டுரைகள் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு முதல் கட்டுரை ஆனியெஸ் வர்தா எனும் பெண் இயக்குநரை மையப்படுத்தியது. அவர் கறுப்பு வெள்ளை திரைப்படங்களிலிருந்து தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர்.
இவரைப் புதிய அலை இயக்குநர்களின் வரிசையில் திரைப்பட ஆர்வலர்கள் சேர்க்கின்றனர். கட்டுரை புதிய அலை இயக்குநர்கள் என்பதற்கான கோட்பாட்டை விரிவாக, எளிமையாக விளக்குகிறது. எந்த அலகுகளில் இந்தப் புதிய அலையை மேற்குலகம் வரையறுத்துக்கொண்டது என்று அந்த விளக்கங்கள் புரியவைக்கின்றன.
இந்த விளக்கங்கள் மொழித் திரிபுகள் இல்லாமல், திரைப்பட ரசனையற்றவர்களுக்கும் புரியும்வண்ணம் எழுதப்பட்டிருப்பதே அதன் சிறப்பு. விளக்கும் கோட்பாட்டில் எந்த இடத்தில் இந்த இயக்குநர் பொருந்திப் போகிறார் என்பதை நிறுவுகிறார். திரைப்படங்கள் வெறும் கதையினால் முழுமையடைவதில்லை.
கதையோடு இணைந்து நடிப்பு, கேமிரா கோணம், அதன் வழி சொல்லப்படும் கதையின் கூற்று, நடிகர்களின் சாமர்த்தியம், திரைப்படமாக்கலில் இயற்கையின் ஒத்துழைப்பு, பொருட்செலவு என்று ஒரு திரைப்படமாக்கலின் அத்தனை அம்சங்கள் குறித்தும் விளக்கப்படுகிறது. இடையிடையே பேசப்படும் திரைப்படங்கள் குறித்தான தகவல்களையும் பகிர்கிறார். ஆனால் அதற்குப் பின்னாக விவரிக்கப்படும் திரைப்பட காட்சியமைப்புகளின் ரசனை சார்ந்த அம்சங்கள் தகவல்களை பின்னுக்குத் தள்ளிவிடுகின்றன.
கறுப்பு வெள்ளைத் திரைப்படங்கள் குறித்த பகுதிகள் ஏனைய திரைப்படங்களைக் காட்டிலும் வசீகரமாக கட்டுரையாக்கப்பட்டிருகின்றன. ‘Cape Cod Noir’ புத்தகம் குறித்த கட்டுரையின் ஆரம்ப பத்திகள் மொத்த தொகுப்பின் தன்மையை நமக்கு கடத்துகிறது. கடற்கரைக்கு குடும்பத்துடன் செல்லும் நம்பியின் குடும்பத்தினர் ஆளுக்கு ஒரு இலக்கிய புத்தகத்தை எடுத்து வைத்துக்கொள்கின்றனர். இந்த விவரமே மாபெரும் கற்பனையின் தொடக்கப்புள்ளியாகிறது.
அந்த கடற்கரையின் அருகாமை அவர்களுக்குள் ஆர்ப்பரிக்கும் புனைவுகளால் முழுமையடைகிறது. கலை இலக்கியத்தின் மேன்மைகளை தனிப்பட்ட வாழ்வனுபவங்களின் துணைகொண்டு அறிய முற்படுவதும், வாழ்வனுபவங்களை கலை இலக்கியத்தின் வழியே கூர்படுத்துவதும் பொறாமையை அளிக்கிறது. எழுதப்படும் கட்டுரைகளிலும் திரைப்படங்களை வாசிக்கும் தன்மையாக கொடுப்பதும் இலக்கியங்களை காட்சி பொருளாக உருவகப்படுத்துவதும் தொகுப்பின் முக்கிய அம்சமாகிறது.
கலை இலக்கியம் மானுடத்தை முழு துணர்ந்துகொள்வதற்கான மற்றொரு கருவி. அது எவ்வடிவிலானதாக இருந்தாலும் அதற்கான மெனக்கெடல்கள் எப்போதும்பாராட்டு தலுக்குரியவை. காழ்ப்புடன் வெளிப் படுத்தாத எதிர் விமர்சனங்கள் அந்த முயற்சிக்கு துணைபோகின்றன. நம்பி கிருஷ்ணனின் இந்த தொகுப்பு கலை இலக்கியத்தை நோக்கி நம் பயணத்தை மறுபரிசீலனை செய்வதற்காக ஆயத்தப்படுத்துகிறது.
நரி முள்ளெலி டூயட்
நம்பி கிருஷ்ணன்
யாவரும் பதிப்பகம்
விலை: ரூ. 450
தொடர்புக்கு: 9024261472
- தொடர்புக்கு: krishik10@gmail.com
விருது பெற்ற படைப்புகள் காட்டும் வாழ்க்கை: தமிழுக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற 20 படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் வழியே வெளிப்படும் வாழ்க்கை தரிசனங்களைக் குறித்துக் கட்டுரைகளை வடித்துள்ளார் ஆசிரியர். தன் ரசனைக்கேற்ப 1961இல் மு.வ. தொடங்கி, நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன் போன்ற முந்தைய தலைமுறை எழுத்தாளர்களிலிருந்து எஸ்.ராம கிருஷ்ணன், இமையம், தேவிபாரதி (2023) போன்ற இந்தத் தலைமுறை எழுத்தாளர்கள் வரையிலான படைப்புகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.
அந்தப் படைப்புகள் பிரதிபலிக்கும் வாழ்க்கை குறித்தும், வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்கும் இடையிலான உறவைப் பற்றியும் இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன. இந்தக் கட்டுரைகளை வாசிப்பதன் மூலம் அந்தப் படைப்புகளை வாசிப்பதற்கான தூண்டுதல் கிடைக்கும். - நேயா
கதைகளில் ஒளிரும் வாழ்க்கை,
சுகுமாரன்,
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.180,
தொடர்புக்கு: 99404 46650
புனைவும் வரலாறும்: நாலந்தாவைப் பற்றிய பல வரலாற்றுத் தகவல்களும் கட்டுக் கதைகளும் உலவுகின்றன. கட்டுக் கதைகள் காலங்காலமாகக் கையளிக்கப்பட்டு உண்மையாகும் அவலமும் நடப்பதுண்டு. அந்தக் கட்டுக் கதைகளையெல்லாம் விலக்கி நூலாசிரியர் நாலந்தா குறித்த திடகாத்திரமான தகவல்களை பல வரலாற்றாய்வாளர்களின் கண்டுபிடிப்புகளிலிருந்து திரட்டி இந்த நூல் வழி அளித்திருக்கிறார்.
பொது ஆண்டுக்காலத்துக்கு முன்பே நாலந்தாவில் பல்கலைக்கழகம் இயங்கியது என்பதற்கான சான்றுகளை ஆய்வுபூர்வமாகத் தந்துள்ளார் நூலாசிரியர். ஏ.எல்.பாஷம், டி.டி.கோசம்பி போன்ற அறிஞர்களின் மேற்கோளுடன் எழுதப்பட்டுள்ள நூல் என்பது இந்த நூலின் வலுவுக்குச் சான்றாகும். - குமரன்
நாலந்தா
செ.திவான்
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ. 150
தொடர்புக்கு: 9080330200