தமிழில் தலித் இலக்கிய உருவாக்கத்தின் பின்புலத்தையும் முன் நகர்வையும் குறித்த செறிவான உரையாடலாக அமைந்துள்ளது இந்த நூல். மராட்டிய, கன்னட, குஜராத்திய தலித் இலக்கியங்களின் தொடக்க முயற்சிகள், தலித் சிந்தனைகளிலும் அரசியல் புரிதல்களிலும் நிகழ்ந்த விவாதங்கள், தலித் இயக்கங்கள், கவிதைகள், புனைவுகள், அல்புனைவுகள், அரங்கச்செயல்பாடுகளில் தலித், தலித் அல்லாதோரின் பங்களிப்புகள் ஆகியன பற்றி வரலாற்றுணர்வோடு எழுதப்பட்ட பதினேழு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைக்க ஜோதி ராவ்புலே உருவாக்கிய ‘தலித்’ என்ற சொல் குறித்து அம்பேத்கருடைய நிலைப்பாட்டையும் பின்னாளில் இச்சொல் ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்த சொல்லாகச் சுருங்கிப் போனதுடன் சாதிக்கும், அதிகாரத்திற்கும் எதிராக எழுந்த தலித் இலக்கியம் குறிப்பிட்ட சாதியினர் எழுதும் இலக்கியமாகப் புரிந்து கொள்ளப்படுவதற்குப் பின்னுள்ள அரசியலையும், தலித் சொல் குறித்த ஆய்வாளர்களின் அறிஞர்களின் விமர்சனங்களையும், விவாதங்களையும் இந்நூலில் ஆசிரியர் தொகுத்துத் தந்திருக்கிறார்.
இந்திய அளவில் தலித் இலக்கியம் உருவானதன் பின்னணியில் பங்களிப்பு செய்த இயக்கங்களான நாமசூத்ரா இயக்கம், சத்யசோதாக் சமாஜம், மகர்கள் சபை, சித்தார்த்தா இலக்கிய சங்கம், புலையர் இயக்கம் ஆகிய அமைப்புகளின் செயல்பாடுகளையும், தமிழ் மண்ணில் திராவிட மகாஜன சபை, பறையர் மகாஜன சபை ஆகியவை மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான குரலாக அயோத்திதாசப் பண்டிதர், இரட்டை மலை சீனிவாசன் ஆகியோர் தொடங்கிய இதழ்களின் பங்களிப்பையும் விவரித்திருக்கிறார். மேலும் பௌத்தமும் தலித்தியமும் ஒன்றோடொன்று இணைந்தவை; எனவே தலித் இலக்கியத்தைப் புரிந்துகொள்ள பூர்வ பௌத்தத்தின் வரலாற்றையும் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற புரிதலையும், வாசகர்களுக்குத் தருகிறார்.
தலித் இலக்கியத்திற்கான வேர் அல்லது நால்வருணத்திற்கெதிரான கலகக்குரல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கினாலும், அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டியே தமிழ் மண்ணில் எழுச்சி பெற்றது. அம்பேத்கர் எழுத்துகள் மட்டுமின்றி பிற மொழி தலித் இலக்கியங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.
அர்ஜூன் டாங்ளே மராட்டியில் எழுதி தமிழில் தி.சு.சதாசிவம் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘தலித் இலக்கியம்: போக்கும் வளர்ச்சியும்’ என்ற நூலும், கவிஞர் இந்திரனின் ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானமும்’ வெவ்வேறு நிலம் சார்ந்த ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களை எதிரொலித்து தலித் இலக்கிய தொடக்கத்திற்கு எவ்வாறு உந்துதலாக அமைந்தன போன்ற தகவல்களையும், தலித் இலக்கிய அரசியலை உருவாக்குவதில் தீவிரம் காட்டிய தொடக்க கால ஆளுமைகளையும் இன்றைய தலைமுறைக்கு அடையாளம் காட்டியிருக்கிறார்.
தங்கள் வலிகளையும், துயரங்களையும் எழுதுவதற்கு ஒடுக்கப்பட்டவர்கள் ‘தன்வரலாற்றெழுதிய’லைக் கையிலெடுத்த வரலாற்றை மராட்டிய மண்ணின் முதல் தலித் தன்வரலாறான ‘பலூட்டா’வில் தொடங்கி, கன்னட தன்வரலாற்று நூல்களையும் விளக்கிப் பின் தமிழில் நடைபெற்ற முயற்சிகளை விளக்குகிறார்.
விரிவான நூலாக இல்லையென்றாலும் இரட்டை மலை சீனிவாசனின் ‘ஜீவிய சரித்திர சுருக்க’த்திற்குத் தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கிய இடமுண்டு என்று கூறும் ஆசிரியர், புனைவு தன்மையிலமைந்த பாமாவின் ‘கருக்கு’, ‘சங்கதி’ தொடங்கி, திருக்குமரன் கணேசன் எழுதிய ‘கறிவிருந்தும் கவுளி வெற்றிலையும்’ வரை பரந்த வாசிப்பை நிகழ்த்தி அவை வெளிப்படுத்தும் ஒடுக்கப்பட்டவர்கள் வாழ்வையும் வலியையும் பதிவுசெய்திருக்கிறார்.
எவ்வளவு தான் அரசியல், இலக்கிய எழுச்சி ஏற்பட்டாலும் எதுவுமே இன்றுவரை மாறவில்லை என்பதனையும், தீண்டாமையின் வடிவங்கள் புற வடிவத்திலிருந்து அக வடிவத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது என்பதையும்தான் இந்தத் தன்வரலாற்று நூல்கள் வெளிப்படுத்துகின்றன. தலித் ஆண்களாலேயே ஒடுக்கப்படும் பெண்களின் பிரச்சினைகளைப் பேசும் ‘தலித் பெண்ணியம்’ ஆகியவற்றையெல்லாம் தங்களுக்கான இலக்கியங்கள் வழியாக தலித்துகள் எவ்வாறு கட்டமைத்துக் கொண்டனர் என்பதையும் ஆசிரியர் நுட்பமாக விவரித்துச் செல்கிறார்.
தலித் இலக்கியம் கவிதை, புனைகதை, நாடகம், கட்டுரை ஆகிய வடிவங்களில் தங்கள் துயரங்கள், கொண்டாட்டங்கள், வாழ்க்கை முறைகள், வழக்காறுகள் ஆகியவற்றைப் பதிவு செய்வதுடன், ஒடுக்கப்பட்ட சாதிகள் ஒன்றுமில்லாதவர்களாகவும் அனுதாபத்திற்குரியவர்களாகவும் காட்டப்பட்டு, பரப்பப்பட்டு வரும் அவதூறுகளை மாற்ற முற்படும் எதிர்ப்புக் குரல்கள் இவ்விலக்கியங்களில் தொடர்ந்து ஒலிப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்கள் வெகுசிலரால் அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பின இலக்கிய வரலாற்று மீட்டெடுப்பு முயற்சிகள் அங்கு தொடர்ந்து நடத்தியதன் மூலம் அது பரவலாகக் கவனிக்கப்பட்டு பின்னாளில் அமெரிக்க அரசே அதனை விழாவாக ஏற்று நடத்தும் சூழல் வந்தது.
தமிழிலும் தொடர்ந்து நடைபெற்றுவரும் தலித் இலக்கிய, வரலாற்று, பண்பாட்டு மீட்டெடுப்பு முயற்சிகள் கவனம் பெற்றதன் விளைவே அண்மையில் தமிழக அரசு பொறுப்பேற்று நடத்திய ஆதிக் கலைக்கோல் விழா. இந்த இடம் வரை வருவதற்கு கருத்தியலிலும் களத்திலும், நின்று ஒரு நெடும் போராட்டத்தைத் தலித் சிந்தனையாளர்களும் படைப்பாளர்களும் நிகழ்த்தியுள்ளனர். இப்பெரும்பயணத்தின் ஆவணமாகவும் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழில்
தலித்தியம்
சுப்பிரமணி இரமேஷ்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ. 260
தொடர்புக்கு: 044 42009603
- தொடர்புக்கு: sudaroviya@gmail.com