இலக்கியம்

சினிமா ஆளுமைகள் குறித்த அலசல் | நூல் நயம்

செய்திப்பிரிவு

சினிமாத் துறை பேராசிரியர் சொர்ணவேல் எழுதிய சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அகிரா குரோசவா தொடங்கி பல இந்திய, உலக சினிமா ஆளுமைகளின் ஆக்கங்கள் குறித்த விரிவான பார்வையை இந்தக் கட்டுரைகள் வழி அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் குறித்த விசேஷமிக்க கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. சத்யஜித்ரேயின் தமிழ்த் தடங்களாக சொர்ணவேல், பாலுமகேந்திராவையும் மகேந்திரனையும் முன்னிறுத்துகிறார். இயக்குநர் ஸ்ரீதரின் படங்கள், இன்றும் வியக்கவைக்கும் ஷாட்களைக் கொண்டவை.

‘ஊட்டி வரை உறவு’ படத்தில் கதாபாத்திரச் சித்தரிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஷாட், புத்திசாலித்தனமானது. ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ ஒரு பாடலை காட்சிப் படுத்தியவிதமும் எடுத்துச் சொல்ல வேண்டிய ஒன்று. இப்படங்களின் ஒளிப்பதிவாளர் வின்செண்ட் மாஸ்டரை நேரில் சந்தித்த அனுபவத்தை சொர்ணவேல் இதில் எழுதியிருக்கிறார்.

ஜூம் லென்ஸ் குறித்தும் அதன் தமிழ் உதாரணங்களான ‘அக்ரஹாரத்தில் கழுதை’, ‘அவள் அப்படித்தான்’ ஆகிய இரு படங்கள் குறித்தும் விரிவாகக் குறிப்பிடுகிறார். சென்ற ஆண்டு மறைந்த குமார் சஹானியின் ‘மாயா தர்பன்’, ‘தரங்’ ஆகிய படங்களைப் பற்றியும் அலசலை ஒரு கட்டுரை முன்வைக்கிறது. - ஜெய்

ஆளுமைகள் எனும் ஆடி
சொர்ணவேல்
பதியம் பிலிம் அகாடெமி
விலை: ரூ.450
தொடர்புக்கு: 9003144868

டாம் என்கிற சாகசச் சிறுவன்: உலகக் கிளாசிக் சிறார் கதைகளில் ஒன்று ‘டாம் சாயரின் சாகசங்கள்’. மார்க் ட்வைன் எழுதிய இந்த நாவல், நூற்றாண்டைக் கடந்துவிட்ட நிலையிலும் இன்றும் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவருகிறது. தன் அத்தையின் வீட்டில் வளரும் சிறுவன் டாமின் குறும்புத் தனங்களை இந்த நாவலில் ட்வைன் பதிவுசெய்திருப்பார்.

சிறார்களின் வாழ்க்கையில் தினப்படி நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் சாக உணர்வு இருக்கும். அவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் இந்தச் சுவாரசியத்துடன் அணுகுவார்கள். அத்தை தண்டனையாக மறைப்பு வேலிக்கு வண்ணமடிக்கச் சொன்னால் அதை ஒரு விளையாட்டாக மற்ற சிறுவர்களுக்கும் கையளிக்கிறான் டாம். புதையல் தேடுவது போன்ற அதிசாகசங்களும் இதில் உண்டு. தமிழுக்கு ஏதுவான எளிய நடையில் இந்த நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. - விபின்

டாம் சாயரின் சாகசங்கள்
மார்க் ட்வைன்
(தமிழில்: பிரேமா இரவிச்சந்திரன்)
மேஜிக் லாம்ப் வெளியீடு
விலை: ரூ.299
தொடர்புக்கு: 9942511302

விலங்குகளுக்குமானது பூமி! | நம் வெளியீடு: இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்க்கோளம் என அழைக்கப்படும் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கான இயற்கைத் தகவமைப்பு இருக்கிறது. நுண்ணுயிரிகள் தொடங்கி அனைத்து உயிரினங்களும் இந்தப் பூமியில் வாழ்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கின்றன.

ஆனால், மனிதன் தனது சுய நலத்துக்காக, தன்னுடைய தேவைக்கு அதிகமாக பூமியின் செல்வங்களைச் சுரண்டுகிறான். மனிதனின் இந்தப் பேராசையால் பிற உயிரினங்களின் பாதுகாப்பு இங்குக் கேள்விக்குறி ஆகியிருக்கிறது. ஏராளமான உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன.

பூமியில் மற்ற உயிரினங்கள் இல்லை என்றால் மனிதனால் வாழ முடியாது. மனிதன் மற்ற உயிரினங்களுடன் இணக்கமாக இருந்தால் மட்டுமே வாழ முடியும். விலங்குகள் வாழ்ந்த காட்டை ஆக்கிரமித்து அதன் வாழ்விடங்களை அழித்தவன் மனிதன். இதனால் பல அரிய விலங்கினங்கள் அழிந்துவிட்டன; பல உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன.

மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இந்தப் பூமியில் எப்படி இடம் கொடுக்கப்பட்டுள்ளதோ, அதுபோலவே மற்ற உயிரினங்களும் செழித்து வாழ இங்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற உயிரினங்களுக்கான இடங்களையும் நாம் அபகரிப்பது என்பது பெரும் சூழலியல் அழிவுகளை ஏற்படுத்தும். ஆகவே, நம்மால் உயிரினங்களுக்கு அழிவு ஏற்படக் கூடாது. அதன் அவசியம் பற்றி இந்நூல் வாசகர்களுக்கு உணர்த்துகிறது.

வியக்க வைக்கும் விலங்குகள்
ஏற்காடு இளங்கோ
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.290
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு : 7401296562

SCROLL FOR NEXT