மணல்வீடு இதழின் இந்தாண்டுக்கான முதல் இதழ் வந்துள்ளது. அயல் மொழி இலக்கியங்களுடன் தமிழ்ப் படைப்புகளும் இந்த இதழுக்கு வலுச்சேர்க்கிறது. கவிஞர் பிரம்மராஜன் பிரெஞ்சு மார்டினிக்வாய்ஸ் கவிஞர் எமி சிசர் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அவரது கவிதைகளும் இத்துடன் மொழிபெயர்க்கப்படுள்ளன. க.நா.சு.வின் ‘ஒருநாள்’நாவல் மீது நஸீமா பர்வீனின் கட்டுரை திடமான விமர்சனத்தை முன்வைக்கிறது. சதக் ஹசன் மாண்டோவின் சிறுகதை, மு.இக்பால் அகமது மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது.
மலையாளக் கவிதைகளின் மொழிபெயர்ப்பும் இந்த இதழின் விசேஷமான அம்சங்களில் ஒன்று. ‘விடுதலை’ படத்தை மலையாள அரசியல் படமான ‘நிங்களெனெ கம்யூனிஸ்டாக்கி’ உடன் ஒப்பீட்டு மு.இராமசுவாமி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் எஸ்.செந்தில்குமார், சு.வேணுகோபாலின் சிறுகதைகளும் இந்த இதழில் வாசிக்கப்பட வேண்டியவை.
மணல்வீடு
ஆசிரியர்: மு.ஹரிகிருஷ்ணன்
காலாண்டிதழ்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 98946 05371
முன்மாதிரிச் சிறார் கதைகள்: தமிழில் வெளிவந்த 100 சிறந்த சிறார்கதைகளின் தொகுப்பு இது. நவீனத் தமிழ் இலக்கியத்தில் எதற்கும் தொடக்கம் பாரதிதான் என்பதற்கு உதாரணமாக அவரது சிறார் கதையை தொடக்கமாக இதில் தொகுத்துள்ளார்கள். யானைக்கால் நோயுள்ள ஒருவரைப் பற்றிய சித்தரிப்பாக இந்தக் கதை பின்னப்பட்டிருந்தாலும் மறைமுகப் பொருளை உணர்த்துவதாக இருக்கிறது. சொல் முறையில் சிறார்களுக்கான எளிமை இந்தக் கதையில் இருக்கிறது. ஆனால், உட்பொருள் சற்று இருண்மையாகவே வெளிப்பட்டுள்ளது.
ராஜாஜியின் கதை எருமைப் பால் குடித்தால் புத்தி மழுங்கிப் போய்விடும் என்ற ரீதியில் வெளிப்பட்டுள்ளது. ந.பிச்சமூர்த்தியின் இரு கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று, சமூகத்தில் நிலவும் சாதிபேதக் கற்பிதங்களை எளிமையாக உணர்த்துகிறது.
சி.சு.செல்லப்பாவின் கதையும் காட்டுக்குத் திரும்பும் ஒரு சர்க்கஸ் சிங்கத்தைச் சுவாரசியமாகச் சித்தரிக்கிறது. அழ.வள்ளியப்பா கதை, சிறார்கதைகளுக்கான லட்சணங்களுடன் வெளிப்பட்டுள்ளது. நாட்டுக்குப் போக ஆசைப்படும் காட்டு மானின் கதையை சிறார்களுக்கு ஏற்றார்போல் வண்ணமயமாகச் சொல்லியிருக்கிறார். பூவண்ணனின் ஒரு கதை சதுரங்க ஆட்டப் பிரியரான ஒரு ராஜாவை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது.
ராஜாவுடன் விளையாடி ஒரு சிறுவன் சதுரங்க ஆட்டத்தில் வென்றுவிடுகிறான். அவனது திறனை மெச்சி ராஜா பரிசு தர விரும்புகிறார். சிறுவன் விரும்பும் பரிசும் ஒரு புதிர் விளையாட்டுப் போல இருக்கிறது. அவன் கேட்டது ஓலை பட்டாசுதான். ஆனால், அதற்குள்ளும் ஒரு புதிரை வைக்கிறான். ராஜா அதிலும் தோற்றுப் போகிறார். சிறார்களுக்கு அறிவைக் கூர்மையாக்கும் கதை இது.
மூத்த சிறார் எழுத்தாளர்கள் வாண்டுமாமா, தி.ஜ.ரங்கநாதன், ரேவதி ஆகியோரின் கதைகள் நடைவாசல் அலங்காரமாக இந்தத் தொகுப்புக்கு அழகு சேர்க்கின்றன. இத்துடன் பாவண்ணன், யூமா வாசுகி, ஆயிஷா இரா.நடராசன், உதயசங்கர், விஷ்ணுபுரம் சரவணன், விழியன், யெஸ்.பால பாரதி உள்ளிட்ட எழுத்தாளர்களின் கதைகளும் அடுத்தடுத்ததாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்ச் சிறார் எழுத்து வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதுபோல் இந்தத் தொகுப்பு உள்ளது. - குமார்
100 சிறந்த சிறார் கதைகள்
தொகுப்பாசிரியர்: சுகுமாரன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.400
தொடர்புக்கு: 99404 46650