இலக்கியம்

படைப்புகளுக்கு மதிப்பீடுகள் அவசியம் | எஸ்.ராமகிருஷ்ணன் நேர்​காணல்

மண்குதிரை

இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கான பாரதிய பாஷா பரிஷத் விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய பாஷா பரிஷத் அமைப்பின் பொன் விழா ஆண்டில் பொருத்தமான எழுத்தாளருக்கு விருது வழங்கப்படவுள்ளது.

‘யாமம்’, ‘உறு​பசி’, ‘உபபாண்​ட​வம்’ உள்ளிட்ட பல நாவல்களை எழுதி​யுள்​ளார். இருபதுக்​கும் மேற்​பட்ட சிறுகதைகள் வெளிவந்​துள்ளன. திரைத்​துறை​யிலும் பங்களித்​துள்ளார். சாகித்திய அகாடமி விருது, தாகூர் விருது, இயல் விருது உள்ளிட்ட பல விருதுகளை​யும் பெற்றுள்​ளார்.

பாரதிய பாஷா பரிஷத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எனது 22ஆம் வயதில்தான் கல்கத்தாவுக்கு முதன்முறையாகப் போனேன். ஆனால், கல்கத்தாவின் பகுதிகள் எல்லாம் அதற்கு முன்பே வங்க நாவல்கள் மூலம் எனக்கு நல்ல பரிச்சயம். விபூதிபூசன், தாராசங்கர் என எல்லா வங்க எழுத்தாளர்களையும் வாசித்திருக்கிறேன். இந்த எழுத்தாளர்கள் எல்லாம் கல்கத்தாவில் இருப்பார்கள். அங்கு எல்லாரும் புத்தகம் படிப்பார்கள். இடதுசாரிகள் ஆளக்கூடிய மாநிலம், ஒரு பெரிய அரசியல் பண்பாடு இருக்கும் என்றெல்லாம் நினைத்திருந்தேன்.

ஆனால், நான் பார்த்த கல்கத்தா முழுக்க வேறு. எங்கு திரும்பினாலும் தூசி, குப்பை, மனிதர்கள், அழுக்கடைந்த நகரம், காலனியத்தின் மிச்சம். நான் அங்கிருந்து தாகூரின் சாந்திநிகேதனைப் பார்க்கச் சென்றேன். அது நான் பார்த்த கல்கத்தாவிலிருந்து மாறுபட்டு இருந்தது. பசு, மரம், கலைக்கூடம் என இந்த வங்கம் வேறு மாதிரி இருந்தது.

இந்த வங்கம்தான் இலக்கியத்தில் இடம்பெற்றது. நான் பார்த்த கல்கத்தா கொஞ்சம்தான் இடம்பெற்றுள்ளது. நான் பல முறை கல்கத்தா சென்றிருக்கிறேன். அங்குள்ள எழுத்தாளர்கள் காட்டிய வீடுகள், மனிதர்கள் என அவர்கள் வழியாக கல்கத்தா எனக்கு நெருக்கமான நகரமாக இருக்கிறது. இந்த விருது அறிவிப்புகூட எனக்கு நெருக்கமான வீட்டிலிருந்து ஒருவர் கைகூப்பி என்னை வரவேற்பது மாதிரிதான் பார்க்கிறேன்.

இந்தியாவின் பல மொழிகளில் உங்கள் எழுத்துகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அங்கு உங்கள் எழுத்துகளுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது? - இங்கு எப்படி நாம் மொழிபெயர்ப்புப் படைப்புகளை வாசிக்கிறோமோ அப்படி அவர்களும் வாசிக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் இலக்கிய விழாக்களில் கலந்துகொள்வதன் வழியாக இந்திய அளவில் நமக்கு ஒரு கவனம் கிடைத்துள்ளது.

ஆனால், அங்குள்ள இலக்கியப் போக்கை மாற்றக் கூடியவர்களாக, இலக்கியத்துக்குப் புதிய அம்சத்தைக் கொண்டுவருபவர்களாக நாம் இருக்கிறோமோ என்பது தெரியவில்லை. எனக்கு அளிக்கப்படும் இந்த விருதுகூட அந்த இலக்கியம் தன்னை விரிவுபடுத்திக் கொள்ளும் ஒரு பணிதான் என நான் நினைக்கிறேன்.

மானிடவியல், சமூகவியல் சார்ந்த நாவல்கள்தான் தமிழ் எழுத்துகளாக வெளி மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? - எல்லா வகையான எழுத்துகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சுந்தரராமசாமி, மெளனி, ந.முத்துசாமி, தி.ஜானகி ராமன் போன்ற முக்கியமான எழுத்தாளர்களின் ஒன்றோ, இரண்டோ படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள் எந்த மாதிரியான எதிர்வினையைத் தமிழில் உருவாக்கினார்கள் எனத் தெரியவில்லை. தனிப்பட்ட உரையாடல்கள் வழியாக நமது எழுத்தாளர்களின் படைப்புகள், அங்குள்ள கதை சொல்லும்முறையை, கவிதை வடிவத்தை மாற்றியிருக்கின்றன.

இந்திய அளவிலான விழாக்களுக்குச் செல்லும் போது ஆச்சரியமாகப் பகிர்ந்துகொள்ளப்படும் ஒரு விஷயம்: “இந்தியாவில் புதிய முயற்சிகள் தமிழிலும், உருதுவிலும் மட்டும்தான் வெற்றிகரமாக நடந்துள்ளது” என்பதுதான். இது உண்மையும்கூடத்தான். நமக்குப் பின்னால்தான் மலையாளம் எல்லாம் வருகிறது. சமூகப் பிரச்சினை சார்ந்து நாவல் எழுதப்படும்போது அதற்குக் கூடுதல் கவனம் கிடைக்கிறது. இந்த அங்கீகாரம் மற்ற எழுத்துகளுக்கு கிடைக்கவில்லை.

அங்கீகாரம் கிடைக்காததற்கு என்ன காரணம்? - இந்தப் புத்தகங்களை மொழி பெயர்ப்பதற்கான ஆட்கள் இல்லை. நம்முடைய மொழியின் பண்பாடு சார்ந்த கூறுகளை மொழிபெயர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. பிறகு தமிழிலிருந்து ஒரு ஆண்டுக்கு மொழிபெயர்க்கப்படும் நூல்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால், தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் நூல்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டும்.

அமெரிக்கா, ஜப்பான், ஸ்பானிஷ், சீனா என இந்த நூறும் பல வகையைச் சேர்ந்தவை. இப்படிப் பல வகையான எழுத்துகளைக் கொண்டுவந்து சேர்க்கிறோம். ஆனால், நமது எழுத்துகளில் உள்ள வகை வகையான அம்சங்களைக் கொண்டு சேர்ப்பதில்லை. இந்த இடைவெளி இருக்கிறது.

இந்த இடைவெளியை எப்படிக் குறைப்பது? - ஊடகங்களில் அந்த மொழிசார்ந்தவர்கள் அவர்களின் படைப்புகள் குறித்து எழுதுவார்கள்; மேற்கோள் காட்டப்படும். கல்வித் துறைகளில் இந்தப் படைப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். லத்தீன் அமெரிக்க இலக்கியத்துக்கான சர்வதேச அங்கீகாரம் அங்
குள்ள எழுத்தாளர்களால் மட்டும் கிடைக்கவில்லை. அமெரிக்க கல்வித் துறையால் கிடைத்தது. அமெரிக்கக் கல்வித்
துறைகளில் லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் குறித்துத் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. கூட்டம் நடத்தப்பட்டது. கல்விப் புலம் சார்ந்து நமது இலக்கியங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போது அவற்றுக்குக் கவனம் கிடைக்கும்.

பிஓடி, சமூக ஊடகங்கள் போன்ற காரணத்தால் எழுத்தாளர்கள் அதிகரித்துள்ளார்கள். இவர்களுக்கு ஒரு எடிட்டர் இல்லாதது ஒரு குறையா? - எல்லாரும் எழுதுவது வரவேற்கத்தக்க விஷயம். எல்லாரும் அவர்களின் அனுபவத்தை எழுதிப் பார்க்கலாம். ஆனால், இந்த எழுத்துகளை யாராவது, ‘இவர் ஆரம்ப நிலையில் இருக்கிறார். இவர் நல்லா எழுதியிருக்கிறார்’ என மதிப்பீடுசெய்ய வேண்டும். மதிப்பீடுசெய்து அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும்.

அப்படித்தான் எனக்கு நடந்தது. அதுபோல் அனுபவத்தை எழுதுவது கதையின் ஒரு பகுதிதான். அதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் கற்பனைகளும் அகத்தின் வாதைகளும் சேர்ந்துதான் உங்கள் படைப்பை உருவாக்கும்.

முன்பு ஒரு சிறுபத்திரிகையில் கதை வருவது சாதாரண காரியமல்ல. இன்றைக்கு வெளியிடுவதற்கான சூழல் அதிகமாக இருப்பதால் எல்லாரும் அவர்களே புத்தகம் பதிப்பித்துக்கொள்கிறார்கள். அதன் மீது எதிர்வினை இருக்காது; பாராட்டுதான் இருக்கும். அதனால் அந்தப் படைப்புகள் நன்றாக இருக்கிறதா என்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போகும்.

முன்பு ஒரு நல்ல நாவல் வந்தால் அதைப் பற்றியே பேச்சாக இருக்கும். ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’ வந்த பிறகு ஒரு பத்து வருஷத்துக்கு எங்கே போனாலும், “ஜே.ஜே. படிச்சிட்டீங்களா?” என்று கேட்பார்கள். எனது ‘உபபாண்டவ’த்தையும் அப்படிக் கேட்பார்கள். இன்றைக்கு அந்தச் சூழல் இல்லை. அதற்கு மதிப்பீடு இல்லாததுதான் காரணம். ஆனால், தமிழ் மொழியில் சிறந்த படைப்பாளர்கள் உருவாகுவார்கள். ஏனென்றால் இந்த மொழி, எல்லாரும் கையாளும் அளவுக்கு மிருதுவானது.

மதிப்பீடு என்கிற போக்கு தமிழில் இல்லாமல் ஆகிவிட்டது... பாராட்டு பெறுவது ஒரு பாதிதான். இன்னொரு பாதி, கடுமையான விமர்சனம் இருக்கிறது. தஸ்தயேவ்ஸ்கி , டால்ஸ்டாய் போன்ற மகத்தான எழுத்தாளர்களின் தோல்வி அடைந்த படைப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், இங்கு பாராட்டப்படவில்லை என்றால் அதை உருவாக்குகிறார்கள்.

நல்ல இலக்கியம் பாராட்டப்பட்டாலும் இல்லையென்றாலும் அது தனது வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே இருக்கும். ஹெப்ஸிபா ஜேசுதாசன், ப.சிங்காரம் நாவல்கள் எல்லாம் எழுதவந்த காலத்தில் கொஞ்சம்பேர்தான் வாசித்திருந்தார்கள். ஆனால், இன்றைக்கு எவ்வளவு பேர் அந்த நாவலை வாசிக்கிறார்கள்.

பாரதிய பாஷா பரிஷத் விருது: எஸ்.ராமகிருஷ்ணன்

- தொடர்​புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

SCROLL FOR NEXT