பத்திரிகையாளர் சாவி நடத்திய ‘சாவி’ வார இதழ், பல புதுமைகளுக்குக்களமாக இருந்தது. வாசகர்களுக்கு மரியாதை செலுத்தும்வகையில் விழா நடத்தியது அவற்றில் ஒன்று. இப்படிப் பல செய்திகளை நினைவுகூரும்வகையில் ‘குடும்ப நாவல்’ இதழ், சாவி சிறப்பிதழை வெளியிட்டுள்ளது.
சாவியின் நிர்வாகத் திறன், சமூக அக்கறை, பயண அனுபவங்கள், அவர் காந்தியடிகள் மீது கொண்ட அன்பு, முன்னாள் முதல்வர்கள் காமராஜர், மு. கருணாநிதி போன்றோர் உடனான உறவு என அவரது வாழ்க்கையின் முக்கியத் தருணங்கள் இதழில் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்களான பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேஷ்குமார், ஓவியர் ஜெயராஜ் போன்றவர்களின் நெகிழ்ச்சியான நினைவு கூரல்கள் கூடுதல் சிறப்பு. - ஆனந்தன் செல்லையா
சாவி சிறப்பிதழ்
பொறுப்பாசிரியர்: பாலகணேஷ்
ஜீயே பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ. 50
தொடர்புக்கு: 98409 94189
வெற்றியின் சூத்திரம்: வாழ்க்கையில் வெற்றி அடைய நாம் எல்லோருக்கும் விருப்பம். ஆனால், அதை அடைவதற்கான வழிகள் நமக்குத் தெரியாது. அதைச் சொல்லித் தரும் புத்தகம் இது. தொழில், வேலை, சாதனை எல்லாவற்றின் வெற்றியிலும் நமக்குப் பொருளாதாரப் பலம் கிடைக்கும். அதைச் செயல்படுத்த முதலில் இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். நாம் கொண்ட காரியங்களில் எந்தக் காரியத்தை முதலில் செய்ய வேண்டும் என்பதை முதலில் நாம் முடிவுசெய்ய வேண்டும் என இந்த நூலின் தொடக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. பிறகு வெற்றிக்குத் தொடர்புகள் முக்கியம்.
தொடர்புகளை உருவாக்குவது, அதைப் பராமரிப்பது எனப் பல நுட்பங்களை இந்த நூல் நமக்குச் சொல்கிறது. பிறகு நம் கையை மீறி நடக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காகப் புலம்பக் கூடாது என்கிறார் நூலாசிரியர். அதற்கு ஒருஎளிய கதையைச் சொல்கிறார். குதிரை தொலைந்துவிட்டது என வருத்தப்பட்டுப் புலம்பாமல் இருக்கிறார் ஒருவர். பக்கத்து வீட்டுக்காரர்கள் ‘உச்..’ கொட்டுகிறார்கள். குதிரை இன்னும் நாலைந்து குதிரைகளைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறது. இப்படிச் சுவாரசியமாக வெற்றியின் சூத்திரத்தை இந்த நூல் ஓதுகிறது. - விபின்
கரன்சி கனவுகள்
இராம்குமார் சிங்காரம்
ஒய்.ஏ. பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9840996745
உணவுக் கையேடு | நம் வெளியீடு: உணவு, நம் கொண்டாட்டங்களில் ஒன்று. ஆனால், உடல் உழைப்பு,வீட்டு வேலைகள்,நடப்பது போன்ற உடல் செயல்பாடுகள் ஒருபுறம் குறைந்து விட்ட நிலையில், உணவு சார்ந்த சாத்தியங்கள், சுவைகள் மறுபுறம் அதிகரித்துவிட்ட நிலையில், அதிகம் உண்பதே பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது.
உடல் பருமன், சர்க்கரை நோய், இதயப் பிரச்சினைகள், ரத்த அழுத்தம் போன்ற தொற்றாத நோய்கள் பெருகுவதற்கு உணவும் முக்கியக் காரணம். நம் தாத்தா-பாட்டிகள், அப்பா-அம்மா காலத்தில் மருத்துவ, நவீன வசதிகள் குறைவு. அதேநேரம் அவர்கள் திட்டவட்டமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்ததால் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
இன்றைக்கு வசதிகள் இருந்தும் வாழ்க்கைமுறை சார்ந்த-தொற்றா நோய்களால் பலரும் திடீரென உயிரிழக்கின்றனர். அவசர வாழ்க்கையில் உணவு சார்ந்த கவனம் பிசகி, வீட்டுக்கே சக்கை உணவு வகைகளை பெருமளவு வரவழைத்துச் சாப்பிடும் போக்கு அதிகரித்துவிட்டது.
இந்தப் பின்னணியில் எதைச் சாப்பிடுகிறோம், எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவுக்குச் சாப்பிடுகிறோம், எதைச் சேர்க்கிறோம் - எதைத் தவிர்க்கிறோம் என்பது குறித்து நிறைய கேள்விகள், குழப்பங்கள், சந்தேகங்கள் நமக்கு இருக்கும். இதற்கெல்லாம் தெளிவான விளக்கத்தை இந்த நூலில் மருத்துவர் வி.விக்ரம்குமார் அளிக்கிறார்.
உணவோடு உறவாடு
டாக்டர் வி. விக்ரம்குமார்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை : ரூ.130
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு : 7401296562