புத்தரின் சொற்களைத் தன் நினைவிலிருந்து மீட்டெடுத்து, தம்ம பிடகத்தை கட்டமைத்த ஆனந்தரின் கதையிலிருந்து இந்த நாவல் தொடங்குகிறது. ஆனந்தி, யசோதா, கௌதமி எனப் புத்தர் வாழ்க்கையில் தொடர்புடைய பெயர்களே சமகாலத்தில் நிகழும் இந்தக் கதையிலும் புழங்குகின்றன.
மரபான கதை சொல்லலாக இல்லாமல் ஆனந்தியின் வாழ்வின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் நூலில் கடைபரப்பப் படுகிறது. மாற்றுப் பாலினத்தவரின் வாழ்வில் ஏற்படும் மகிழ்வான தருணங்கள், நொய்மையான தருணங்கள் என கலவையாகக் காட்சிகள் விரிகின்றன.
புத்தரின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்த அவரது சிற்றன்னை கௌதமியின் பெயரைக் கொண்டவர்தான் ஆனந்தியின் தாய். இளம்பருவத்தில் கல்வியும், தோழமையும் மறுக்கப்பட்டதால் காயப்பட்ட கௌதமி, தனக்குப் பெண் குழந்தையே வேண்டாம் என்று நினைக்கிறார். அவர் விருப்பிற்கு ஏற்ப பிறந்த மகனே பின்னால் தன்னை ஒரு பெண்ணாக முன்வைக்கும்போது, அவ்வுறவு விருப்பும் வெறுப்பும் கலந்த கலவையாகிறது.
பொதுவாகவே அம்மா மகன் உறவைப் போன்றதல்ல; அம்மா மகள் உறவு. அது பெரும்பாலும் சேர்ந்திருக்கையில் வெறுப்பும், இழந்தபின் அன்புமாக விரிவடையும் வினோதமான ரசாயனம். அதிலும் மாற்றுப் பாலின அடையாளத்தை முன் வைக்கும் மகளோடு கௌதமி கொண்டிருக்கக்கூடிய உறவு நுட்பமான சிடுக்குகள் நிறைந்தது.
தாயுடன் மட்டுமல்லாது, துணையாக வரும் யசோதா, தோழர்களான யாஸ்மின், கவின்,சிவா என அனைவருடனுமே ஆனந்தி கொள்ளும் உறவின் சிடுக்குகளே கதையின் பேசுபொருள். எல்லாச் சிடுக்குகளும் சேர்ந்து ஆனந்திக்கு மனச்சோர்வை அளிக்கின்றன. அது உற்சாகக் குறைவு, எதிலும் நாட்டமின்மை, குற்றவுணர்வைத் தூண்டுதல் எனப் பல்முனைத் தாக்குதலை நம் மீது நடத்தக் கூடியது. அதே கோணங்களிலேயே கதை விரிகிறது.
நாவலில் எல்லாச் சம்பவங்களும் விரிவாக உரையாடலுடன் முன் வைக்கப்படுவதற்கு மாறாக, தீற்றல்களாக அங்கங்குச் சிந்திச் செல்லும் முறை, வயலட்டுக்கு லாகவமாகக் கைவந்திருக்கிறது. கதையல்லாத கதை சொல்லல், நிகழ்காலத்திற்குப் பின்னணியாக வரும் கடந்த கால விவரிப்புகள் எனக் கரடுமுரடான பாதையில் மிக அநாயசமாகக் காற்றில் மிதப்பதுபோலச் செல்கிறது மொழிநடை.
வில்லியம் ரைஸ் டேவிஸ், ஹெர்மன் ஓல்டன்பெர்க் , எரியும் நூலகத்தைக் கனவில் கண்டலறும் புத்த பிக்கு, கே.எஸ். எனத் தொடரும் வரிசையில் ஆனந்தியும் தம்ம பதத்தின் பிரதிக்குள் தொலைந்து போகிறாள். தம்ம பதத்தின் தத்துவச் சுழல்களுக்குள் அமிழும் ஆனந்தியின் முன் கலங்கரை விளக்காகச் சுடர்வது சிறிய குருசடியில் ஒளிரும் மேரியின் முகம்தான். அந்த முகமே கௌதமியைப் புரிந்து கொள்ள ஆனந்திக்கு உதவுகிறது. வழக்கமான கதை, அதற்கொரு முடிவு என்றில்லாது ஆனந்தியின் நாட்குறிப்பை எட்டிப் பார்ப்பது போன்ற வாசிப்பனுபவத்தைதந்த நாவல் இது. - லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
இதோ நம் தாய்
வயலட்
சால்ட் பதிப்பகம்
விலை:ரூ.125
தொடர்புக்கு: 99941 54104
அரசியலும் மெல்லுணர்வும்: மலையாள நவீனக் கவித்துவத்துக்கு வித்திட்டவர் களில் சச்சிதானந்தன் முதன்மையானவர். சச்சிதானந்தன் மலையாளத்தைத் தாண்டி தமிழ்க் கவிதைகளிலும் பாதிப்பை விளைவித்தவர். சுகுமாரன், சச்சிதானந்தன் கவிதைகளால் பாதிக்கப்பட்டவர். சச்சிதானந்தன் கவிதைகளில் கையாளும் மலையாளச் சொற்களுக்கு உரிய மெல்லிசைத்தன்மையும் தமிழில் இன்று ஒரு போக்காக விரிவடைந்துள்ளது.
மனுஷ்யபுத்திரனிடம் இந்தத் தன்மையைப் பார்க்கலாம். தமிழ்க் கவிதைக்கு நன்மை சேர்க்கும் நோக்கத்துடன் சச்சிதானந்தனின் இந்தச் ‘சொற்களின் சிற்பமும்’ வடிக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் சிற்பி இதைத் தமிழுக்கு நெருக்கமாக மாற்றியிருக்கிறார்.
சமூகப் பிரச்சினைகளை எழுதுவது இன்றைக்குத் தமிழிலும் ஒரு பெரும்போக்குதான். ஆனால், அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதை மகாகவிகள் மட்டுமே அறிவார்கள் எனலாம். சச்சிதானந்தனின் இந்தக் கவிதைகளில் அந்தத் தன்மையைப் பார்க்கலாம். புதிய சட்டத் திருத்தங்களால் மலைகள் சிதைக்கப்படுவதை, தலைநகரில் நடைபெற்ற உழவர்களின் போராட்டம் என எல்லாவற்றையும் கவிதைக்குள் கொண்டுவந்திருக்கிறார்.
அவை கவிதையாகவே வெளிப்பட்டுள்ளது. ‘வீடிருந்த இடத்தில் வீடில்லை/ இருப்பது கான்கிரீட்டில் கட்டப்பட்ட ஒரு கூக்குரல் மட்டுமே’ என்கிற ஒரு கவிதையை இந்தத் தன்மைக்கான ஒரு பதமாக முன்வைக்கலாம். அரசியல் அல்லாத உணர்வுகளைச் சொல்லும் கவிதைகளும் ஒரு மெல்லிசை போல் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. - மண்குதிரை
உழவனின் பாடல்
சச்சிதானந்தன் (தமிழில்:சிற்பி)
அருட்செல்வர் நா.மகாலிங்கம்
மொழிபெயர்ப்பு மையம்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 04259 236030
பால்வண்ணம் விருதுக்குப் பரிந்துரை | திண்ணை: தோழர் பால்வண்ணம் நினைவாக சிறந்த சிறுகதைத் தொகுப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. சிறந்த சிறுகதைத் தொகுப்புகள் மூன்றுக்கு தலா ரூ.10,000 ரொக்கமும், நினைவுப் பரிசும் வழங்கப்படவுள்ளன. 2024ஆம் ஆண்டு வெளியான சிறுகதைத் தொகுப்புகளாக இருக்க வேண்டும். அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 20.04.2025. தொடர்புக்கு: 9486715755.
பெண் எழுத்துகளுக்குப் பரிசு: பெண் எழுத்துகளை ஊக்குவிக்கும் வகையில் ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகம் சிறந்த பெண்ணியச் சிறுகதைத் தொகுப்பு, நாவல், வரலாற்று நூல், அறிவியல் நூல், பெண்ணிய நூல், சிறார் நூல் ஆகிய நூல்களுக்கு விருது வழங்கவுள்ளது. நூல்களுக்குத் தலா ரூ.10,000 பரிசு வழங்கப்படவுள்ளது. மேலதிகத் தொடர்புக்கு: 75500 98666