தமிழ் இதழியல் துறையில் பிரபலமான பெயர் எஸ்.பாலசுப்ரமணியன். தமிழின் முன்னணி வார இதழான ‘ஆனந்த விகடன்’ பொற்காலத்தில் அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர். ஸ்மார்ட்போன் வருகைக்கு முந்தையை தலைமுறை ஆளுமைகளை உருவாக்கியதில் இவரது ஆசிரியத்துவத்தின் பங்களிப்பு முக்கியமானது. பாலசுப்ரமணியனின் தனிப்பட்ட ஆளுமைப் பண்புகள் பத்திரிகைத் துறையில் பரவலாகப் பேசப்பட்டதுதான்.
ஊழியர், முதலாளி என்கிற நிலைகளுக்கு அப்பாற்பட்டு அவர் விகடன் ஊழியர்களை அணுகுவார் என்பதற்கான உதாரணமாக இந்த நூல் பல சம்பவங்களை முன்னிறுத்துகிறது. விகடன் குழுமத்தில் பத்திரிகையாளராகவும், நிர்வாகப் பொறுப்பிலும், பாலசுப்ரமணியனின் உதவியாளராகவும் பணியாற்றிய ஜே.வி.நாதன் இந்த நூலை எழுதியிருப்பது இந்த உண்மையைத் துலங்கச் செய்கிறது.
பாலசுப்ரமணியன் ‘சேவற்கொடியோன்’ என்கிற புனைபெயரில் எழுதிய கதைகள் குறித்து இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. சென்னை புறநகர் படப்பையில் பாலசுப்ரமணியனின் பண்ணை குறித்து பத்திரிகைத் துறையில் அடிக்கடி விதந்தோம்பப்படுவதுண்டு. வேளாண்மை, பறவை வளர்ப்பு போன்றவை குறித்து அவருக்கு இருந்த நாட்டம், ஊழியர்களுக்குச் சமைத்து அவர்கள் ருசிப்பதைக் கேட்டறிந்து மகிழும் அவரது குணம், இவையெல்லாம் இன்றைய பெருநிறுவனச் சூழலில் அரிதினும் அரிது எனச் சொல்லலாம். நூலாசிரியரிடம், பாலசுப்ரமணியன் கழுதைக் குட்டிகள் வாங்கிக் கேட்டிருக்கிறர். இந்தச் சம்பவத்தை இவர் சுவாரசியமாக எழுதியுள்ளார்.
தேவை இருப்போரைக் கண்டடைந்து உதவும் பாலசுப்ரமணியத்தின் அருங் குணத்தையும் சில சம்பவங்கள் மூலம் நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். எழுத்தாளார் ஸ்டெல்லாபுரூஸ் தன் மனைவி இழந்த துக்கத்தைப் பகிர பாலசுப் ரமணியத்தைத் தேடி வந்த ஒரு நிகழ்ச்சி இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. பாலசுப்ரமணியன் தனது அறையிலிருந்து வெளி வந்து அவரை வரவேற்றுள்ளார். பாலசுப்ரமணியனைப் பார்த்ததும் கதறி அழுதிருக்கிறார் புரூஸ்.
தனக்கு ஆறுதலும், ஆதரவும் தரக்கூடியவர் என புரூஸ் உணர்ந்ததால் வந்த அழுகை. இது பாலசுப்ரமணியனின் பண்புக்கு மற்றுமோர் சான்று. ஊழியர்களின் பிழைகளை அவர் எதிர்கொள்ளும் தன்மையான முறை, அவர்களை உற்சாகப்படுத்த அவர் அளிக்கும் புதுப் புது யோசனைகள் எல்லாம் இதழியல் பணிகளுக்கான முன்னுதாரணங்கள். பாலசுப்ரமணியன் என்கிற ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை இந்த நூல் வழி ஜே.வி.நாதன் துலங்கச் செய்துள்ளார்.- ஜெய்
சேவற்கொடியோன்
ஜே.வி.நாதன்
புஸ்தகா
விலை: ரூ.140
தொடர்புக்கு: 7418555884
தேவையான அரசியல் பாட நூல்: முன்பெல்லாம் பள்ளி – கல்லூரி வளாகங்களில், தங்கும் விடுதிகளில் மாணவர் தலைவர்கள் உடனிருந்து வழிநடத்துதல் இயல்பாக இருக்கும். ஆலை, தொழிற்சாலைகளில் வாயிற்கூட்டங்களும், தொழிற்சங்க அலுவலகங்களும் அரசியல் பட்டைத் தீட்டும் களங்களாக இருக்கும். தேநீர்க் கடை இருக்கைகளும், முடித்திருத்தகங்களும் அரசியல் விவாத அரங்கங்களாக ஜொலிக்கும். இந்தச் சூழல் இப்போது முற்றாகத் தகர்ந்தே போய்விட்டது.
யாருக்கும் நின்று பேச நேரமில்லை. இன்றைக்கு, நாளைக்கு, இந்த வாரம், மாதம் என எல்லோர் தலையிலும் இலக்குகளைச் சுமைகளாக்கி இறக்கி வைத்திருக்கின்றன நிர்வாகங்கள். மூச்சு முட்டும் சுமையில் களைத்துக் கிடப்பவர்களிடம் ஆரவாரங்களே அதிக இடத்தைப் பிடிக்கின்றன. இந்த நிலையில் சரியானதைக் கூடச் சுருக்கமாகக் கொண்டு சேர்க்க முடியும் என்று நூலாசிரியர் தா. சந்தரன் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்கு உரியது.
லெனினின் நினைவு நூற்றாண்டை ஒட்டி அவரது படைப்புகளிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தேர்ந்தெடுத்துத் தினமும் முகநூலில் பதிவாக்கி வந்தார் சந்தரன். அவையனைத்தும் அரசியலை கூர்மையாகப் பார்க்க துணைசெய்யும் கண்ணாடியாக இருந்தன. அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட தோழர்கள் பலர் வலியுறுத்தியதன் விளைவே இந்நூல். - ஜீவா
லெனினிடம் கற்போம்
தா.சந்தரன்
பொன்னுலகம்
புத்தக நிலையம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 88707 33434
நாடக நூலுக்குக் கூட்டம் | திண்ணை: நடிகரும் நாடகவியலாளருமான சி.கார்த்திகேயனின் ‘நிலமாடிய பொழுது’ என்னும் நாடக நூல் குறித்த கூட்டம் இன்று (29.03.25) மாலை 4 மணி அளவில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறவுள்ளது. நாடகவியலாளர்கள் பிரளயன், வெளி ரங்கராஜன், பேரா.கோ.பழனி உள்ளிட்டோர் உரை நிகழ்த்தவுள்ளனர். போதிவனம் பதிப்பகம் ஒருங்கிணைக்கிறது.
அஞ்சலிக் கூட்டம்: முத்துக் காமிக்ஸ் நிறுவனர் செளந்திர பாண்டியனுக்கு இன்று (29.03.25) மாலை 6 மணிக்கு சென்னை கே.கே.நகர் டிஸ்கவரி புக்பேலஸ் அரங்கில் அஞ்சலிக் கூட்டம் நடைபெறவுள்ளது. நடிகர் பொன்வண்ணன், ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கர், கிங் விஸ்வா, யுவகிருஷ்ணா உள்ளிட்டோர் பேசவுள்ளனர். தமிழ்காமிஸ் உள்ளிட்ட அமைப்புகள் ஒருங்கிணைக்கிறது.