இலக்கியம்

புனைவில் மாறும் புதிய வெளிகள் | நூல் நயம்

செய்திப்பிரிவு

காலம், வெளி ஆகிய கருத்​தாக்​கம் உலகம் முழுவதும் இலக்​கிய, பண்பாட்​டாய்​வு​களில் தொழிற்படு​வதைப் பார்க்க முடிகிறது. தமிழிலும் வெளி குறித்த ஓர்மை உண்​டு. அதுவே தமிழரின் முதற்பொருளாக​வும் கருதப்​படு​கிறது. இக்​கருத்​தாக்​கத்​தைக் கோட்​பாட்டு நிலை​யாக்கி ஆராய்​தல் அவசி​யம். அதைத் தொடங்கி வைத்​துள்​ளார் காசி​மாரியப்​பன்.

காலச்​சுவடு பதிப்​பகத்​தின் வாயி​லாக வெளியாகி​யுள்ள ‘கள் மணக்​கும் பக்​கங்​கள் – தமிழ்ச் சிந்​தனை மரபில் வெளி​யும் கால​மும்’ எனும் நூலில் இவர் முன்​வைத்​திருக்​கும் அரசி​யற் பார்வை சமகால ஓர்​மை​யுடையது. வெளி எனும் கருத்​தாக்​கத்தை அகம் x புறம், வைதி​கவெளி x அ-வை​தி​கவெளி; பிராமணவெளி x சிரமணவெளி; ஆண்​வெளி x பெண்​வெளி; சீறூர்​வெளி x பேரூர்​வெளி என்​ற​வாறு அமைத்​துக்​கொண்டு சிறு​பான்மை வெளி​யில் அமர்ந்​து​கொள்​கிறார்.

பருண்​மை​யானது மட்​டுமின்​றிக் கட்​புல​னாகா வெளி​யும் உண்​டு; அதுவே பேரா​திக்​கம் செலுத்​து​வ​தாகக் கருதுகிறார் காசி​மாரியப்​பன். திணைத் தன்​மை​யில் அமைந்த பழந்​தமிழர் வெளி, சோழர் காலத்​தில் சாதி​ய​வெளி​யாக மாற்​றமடைவதைச் சுட்​டிக்​காட்​டு​கிறார். குழந்தை விளை​யாட்​டிலிருந்து இறப்பு வரை​யில் நிகழும் வெளி​சார் அரசி​யலை முதல் இயலில் விவரிக்​கிறார். பத்​துக் கட்​டுரைகள் இந்​நூலில் இடம்​பெறுகின்​றன.

பட்​டினப்​பாலை, மதுரைக்​காஞ்​சி, பதிற்​றுப்​பத்து உள்​ளிட்ட பழந்​தமிழ் இலக்​கி​யங்​களும் நவீன நாவல்​களும் அவருடைய ஆய்​வுப் பொருள்​களாகின்​றன. ஆய்​வின்​வழி அவர் கண்​டடைவது, பட்​டினப்​பாலை தாந்​திரீகத் தன்​மைக் கொண்ட உலகாயத நூல். மதுரைக்​காஞ்​சி, பதிற்​றுப்​பத்து உள்​ளிட்ட நூல்​களில் இனக்​குழுத் தன்​மையழிந்து ஆண் மையம்​கொண்ட வேந்​துரு​வாக்​கம் நிகழ்​கிறது. தலித்​திய நாவல்​களில் புனை​வியற் பாங்​கான மண்​சார் பிடிப்​பு​கள் உள்​ளன. இப்​பண்பு சாதிய விடுதலைக்​குத் துணைநிற்​காது.

பெரு​மாள் முரு​கன், இமை​யம், பூமணி, சோ.தர்​மன், சிவ​காமி, பாமா உள்​ளிட்​டோர் கிராம வெளியையே கதை​யாக்​கு​கின்​றனர். நகரவெளியைப் புறந்​தள்​ளுகின்​றனர். சோலை சுந்​தரப்​பெரு​மாளின் நாவல்​களில் சமயசாயல் படிகிறது. அவை வட்​டாரத் தன்மையில் நுட்​ப​மாக அமைந்​துள்​ளன. தி.ஜா.​விடம் மாற்​றுமரபு தொடங்​கி​னாலும் கம்​யூனிஸஎதிர்ப்பு மேலோங்​கி​யுள்​ளது உள்​ளிட்டஆய்​வு​முடிவு​களை வெளி எனும் அணுகுமுறையைக்​கொண்டு முன்​வைத்​துள்​ளார். பகடிமொழி​யில் நுட்​ப​மான ஆய்​வுச்செய்​தி​களை அளிக்​கும் சொல் மணக்​கும் பக்​கங்​களாக இந்​நூல்​ தி​கழ்​கிறது. - கா.விக்னேஷ்

கள் மணக்கும் பக்கங்கள்
க. காசிமாரியப்பன்
காலச்சுவடு பதிப்பகம்,
விலை: 260
தொடர்புக்கு: 04652 278525

எதிர் அழகியலின் உயிர்நாடி: தமிழின் அச்சுத் துறை சார்ந்து இயங்கிய செயற்பாட்டாளர் பொதியவெற்பன் ஆவார். சிற்றிதழ்கள், பதிப்பகம் வழிக் காத்திரமாக இயங்கியவர் அவர். அவரது பங்களிப்புக்குக் கெளரவம் செய்யும் நூல் தொகுப்பு. இதில் பொதியின் பங்களிப்பைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

பொதியின் நேர்காணல்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. பொதியின் இயல்பான தடாலடிப் பதில்கள் வாசிப்புக்குச் சுவாரசியமும் கருத்துக்கு வலுவும் சேர்ப்பவை. பேரா. வீ.அரசு பொதியின் பங்களிப்பை முழுமையாகப் பட்டியலிட்டுள்ளார். புதுமைப்பித்தன் இயலின் முதல் பயணி என பொதியைச் சொல்லலாம்.

அந்த இயலில் நூல் வெளியிட்டுள்ள வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் கட்டுரை புதுமைப்பித்தனின் ‘மூணாவருணாசலமே...’ பாடலை முதன்முதலில் பதிப்பித்தது பொதிதான் என மேற்சொன்ன கூற்றுக்குச் சான்றளிக்கிறார். எழுத்தாளார் செல்வ புவியரசனின் சிலிக்குயில் வெளியீடாக வந்த ‘பறை’ நூல்கள் குறித்துச் சொல்லியிருக்கிறார்.

அதனுடன் அவரது இலக்கிய, பதிப்புச் செயற்பாட்டையும் பகிர்ந்துள்ளார். கவிஞர் விஷ்ணுபுரம் சரவணன் ‘எதிர் அழகியலே உயிர்நாடி’ எனக் கவிதை வடிவில் பொதிக்குப் பொன்னாடை போர்த்தியுள்ளார். இன்னும் பல கட்டுரைகள் பொதிக்கு மதிப்புக்கூட்டுகின்றன. - ஜெய்

பொதியவெற்பன் மதிப்பீட்டுத் தொகை நூல் 3
தொகுப்பு: அ.பழனிச்சாமி, பதிப்பு: இரா.கந்தசாமி
உயிர் பதிப்பகம்
விலை: ரூ.450
தொடர்புக்கு: 98947 74213

வாழ்க்கையின் கலைடாஸ்கோப் | நம் வெளியீடு: வாழ்க்கையின் அனைத்து நிலைகளி​லும் அனுபவங்​களே நமக்​குப் பாடம் எடுக்​கின்​றன. அவையே ஆசா​னாக​வும் இருந்து வழி​காட்​டு​கின்​றன. அனுபவங்​களின் வழிப் பெறப்படு​கின்ற பாடங்​கள் ஏதோ ஒன்றை உணர்த்​தி​விட்டே செல்​கின்​றன. எழுத்​தாளர் பாவண்​ணனின் ‘வண்​ணக் கிளிஞ்​சல்​கள்’ என்​கிற அனுபவங்​களின் தொகுப்​பும் அப்​படித்​தான்.

இந்​தத் தொடரின் வழியே பாவண்​ணன், தன் அனுபவங்​களோடு மனித மனங்​களின் ஈரத்​தை, சக மனிதனுக்​குத் தோள் கொடுக்​கும் இயல்​பை, இருப்​பை, யதார்த்த அழகியலுடன் விவரித்​திருக்​கிறார். இந்​தத் தொகுப்​பில் இடம்​பெற்​றிருக்​கும் ஒவ்​வொரு கட்​டுரையி​லிருந்​தும் வாசகர்​கள் பெற்​றுக்​கொள்​ள​வும் கற்​றுக்​கொள்​ள​வும் ஏராள​மாக இருக்​கின்​றன.

உச்சி வெயில் நேரத்​தில் மரத்​தடி​யில் அமர்ந்து வெல்​லம் விற்​கும் ஏழைப் பெண் ஒரு​வர், பசி​யால் வெல்​லத்​தைத் தவிப்​போடு பார்க்​கும் மாணவர்​களுக்​குச் சிறிதும் தயங்​காமல் வெல்​லத்தை உடைத்​துக் கொடுக்​கும் கட்​டுரையைப் படிக்​கும்​போது, ‘வெல்​லம் நம் கைகளில் பிசுபிசுப்​பாக உருகி வழி​வதை​யும் அதைச் சுவைக்​கும் பரவசத்​தை​யும்’ நம்​மால் உணர முடிகிறது என்​றால், அது பாவண்​ணனின் அசாத்​தி​ய​மான எழுத்​துக்​குச்​ சான்​று எனலாம்​.

வண்ணக் கிளிஞ்சல்கள்
பாவண்ணன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.170
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562

ஆவணப்படத் திரையிடல் | திண்ணை: ஈழ நாடக ஆளுமை ஏ.சி.தாசீசியஸ் ஆவணப்படத் திரையிடல் இன்று (22.03.25) காலை 11 மணி அளவில் சென்னை கே கே நகர் டிஸ்கவரி புக்பேலஸில் நடைபெறவுள்ளது. இப்படத்தின் இயக்குநர் அம்ஷன் குமார் ஆவார்.

நாவல் போட்டி: தேநீர் பதிப்பகம் நாவல் போட்டியை அறிவித்துள்ளது. தேர்வுபெறும் மூன்று நாவல்களுக்குத் தலா ரூ.10,000 வழங்கப்படும். நாவல், குறைந்தபட்சம் 25,000 சொற்கள் இருக்க வேண்டும். வெளிவராத புதிய நாவலாக இருக்க வேண்டும். அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 15.08.2025. மேலதிகத் தொடர்புக்கு: theneerpathippagam@gmail.com

SCROLL FOR NEXT