புத்தரை ஒரு மதத் துறவி என்பதற்கு அப்பாற்பட்டு அவரைச் சமூகச் சீர்திருத்தவாதி என்று அடையாளப்படுத்தலாம். பிற்காலத்தில் அம்பேத்கர் அவரை ஏற்று அந்த வழி பயணித்ததை இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கலாம். புத்தர் எல்லைகளைக் கடந்து பலரையும் பாதித்தவர்.
இந்தியாவைத் தாண்டி உலகத்தின் பல பகுதிகளில் புத்த மதம் பரவியுள்ளது. புத்தரின் வாழ்க்கையை பல இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸே ‘சித்தார்த்தன்’ என்னும் நாவல் எழுதியுள்ளார். தமிழ் நவீன எழுத்தாளர்கள் பலரும் புத்தரின் கதையை குறுக்கிட்டு விசாரித்துள்ளனர்.
கன்யூட்ராஜின் இந்த நாவல், சித்தார்த்தன் கபிலவஸ்துவில் இருப்பதிலிருந்து தொடங்கி அவர் ஏன் புத்தர் ஆனார் என்பதை விசாரிக்கிறது. புத்தர் குறித்து முறையான ஆய்வில்லை என்பதைக் கருத்தில்கொண்டு தத்துவார்த்த ரீதியிலும் புத்தத்தைச் சொல்கிறது இந்த நாவல். - விஜித்ரன்
கெளதமன் புத்தரான கதை
கன்யூட்ராஜ்
நாற்கரம் வெளியீடு
விலை: ரூ.560
தொடர்புக்கு: 9551065500
வாழ்க்கையைச் சொல்லும் கதைகள்: நாட்டார் கதைகள் காலங்காலமாக கையளிக்கப்பட்டு இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரு கலை வடிவம். தமிழில் அதற்கு வலுவான பண்பாடு உண்டு. நாட்டார் கதைகளை ஓர் அம்சமாகக் கொண்டு இன்று வரலாறுகூடத் திருத்தி எழுதப்படுகிறது.
இம்மாதிரியான நாட்டார் கதைகளின் தொகுப்பு இது. பர்மிய நாடோடிக் கதைகளை மாத்தளை சோமு இதில் மொழிபெயர்த்துத் தொகுத்துள்ளார். ஒரு சிறு பிழை அது உடனடியாகக் களையப்படாததால் ஏற்படும் பெரும் விளைவு ஒரு கதையில் சொல்லப்பட்டுள்ளது. அரசரும் முதல்வரும் தேன் சாப்பிடும்போது ஒரு துளி ஜன்னலுக்கு வெளியே சிந்திவிடுகிறது.
அது வழிந்து கீழே விழ அதில் எறும்புகள் மொய்க்கின்றன. எறும்புகளைத் தின்ன பல்லி வருகிறது. பல்லியை ஒரு பூனை பிடிக்கிறது. பூனையை ஒரு நாய் பிடிக்கிறது. இது வரை இதை ஒரு சாதாரண விஷயமாக அரசரும் முதல்வரும் வேடிக்கை பார்த்துவந்தனர்.
ஆனால், பூனை உரிமையாளருக்கும் நாய் உரிமையாளருக்கும் சண்டை வந்து அது தெருக் கலவரமாக மாறி, ஊர்க் கலவரமாக விரிவடைகிறது. இந்தச் சண்டையை ஒடுக்கப் போன அரண்மனை வீரர்கள் நாய்க்காரனுக்கும் பூனைக்காரனுக்கும் ஆதரவாகப் பிரிந்து சண்டையிட்டுக்கொள்கிறார்கள். உள்நாட்டுக் கலவரத்தில் அரண்மனைக்குத் தீவைக்கப்படுகிறது. இம்மாதிரியான அர்த்தச் செறிவும் சுவாரசியமும் கொண்ட கதைகள் பல இதில் உள்ளன. - விபின்
பர்மிய நாடோடிக் கதைகள்
தமிழில்:
மாத்தளை சோமு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி. லிட்.
விலை: ரூ. 190
தொடர்புக்கு: 044 26251968
துலங்கும் ஆளுமை: சத்யஜித்ரே உலகின் சிறந்த இயக்குநராக அடையாளம் பெற்றவர். அவரைப் பற்றி இன்னொரு திரைப்பட ஆளுமையான ஷியாம் பெனகல் இயக்கிய படம், ‘சத்யஜித் ரே’. இந்தப் படத்தின் எழுத்து வடிவம்தான் இந்த நூல்.
சத்யஜித்ரேவின் சிறந்த படங்களில் ஒன்றான ‘காரே பைரே’ படப்பிடிப்புத் தளக் காட்சியுடன் ஷியாமின் இந்தப் படம் தொடங்குகிறது. ரே என்னும் ஆளுமை இந்தப் படக் காட்சிகளின் எழுத்துவடிவம் வாசிக்கும்போது துலங்கிவருகிறது. இந்தப் படத்தில் ரேயுடனான உரையாடலும் இடம்பெற்றுள்ளது. திரை ஆர்வம் உள்ளவர்கள் வாசித்துப் பார்க்க வேண்டிய
நூல் இது.
சத்யஜித்ரே: ஒரு திரைப்படம்
ஷியாம் பெனகல் (தமிழில்:சா.தேவதாஸ்)
கருத்து = பட்டறை
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9842265884