இலக்கியம்

பார்வைக் குறைபாடு கற்பிதங்களை உடைக்கும் நூல் | நூல் வெளி

வறீதையா கான்ஸ்தந்தின்

இந்த நூலை வாசிக்கையில் ஏழு வயதில் பார்வையிழந்துபோன எழுத்தாளர் தேனி சீருடையானின் தன்வரலாறான ‘நிறங்களின் உலகம்’ நினைவுக்கு வந்தது. சீருடையான் 17 வயதில் மீண்டும் பார்வை பெற்றார். மு.முருகேசன் என்கிற பார்வை மாற்றுத் திறனாளி எதிர்கொள்ளும் சவால் வித்தியாசமானது. காட்சிப் பரிமாணம் அற்ற மனிதன், அது வாய்க்கப்பெற்ற மனிதர்களின் உலகத்தில் வாழ்வது.

'மாற்றுத் திறனாளர்கள் திறனற்றவர்கள் என்கிற பார்வை தட்டையானது. அதன் விளைவுகள் மோசமானவை' என்கிறார், முருகேசன். பதவி உயர்வில் பாரபட்சம், பணியிடத்தில் உரிய வேலைகள் மறுப்பு இவையெல்லாம் அவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் பிரச்சினைகள்.

மாற்றுத் திறனாளர்களுக்குச் சமூகம் சொல்லும் தீர்வு என்ன? ‘சும்மா வீட்ல கெடக்கணும்’. பேருந்தில், சாலையில், பொதுவெளியில், பணிக்களத்தில் அவர்கள்மீது எள்ளலோடு வீசப்படும் தீர்ப்புகள் ஏராளம். பார்வை மாற்றுத் திறனாளர்கள் வேலை செய்யும் முறைமை பற்றிக் கிஞ்சித்தும் அறியாதவர்கள் நாம்.

நம் அறியாமையை அவர்கள் மீது அதிகாரமாய்ச் செலுத்துவது எப்படிச் சரியாகும்? போலவே, அவர்களது குடும்ப வாழ்க்கை குறித்தும் நிறைய கற்பிதங்கள் நிலவுகின்றன. ஒரு வழக்கில், “பார்வை மாற்றுத் திறனாளிகளுக்குப் பாலுறவில் ஈடுபடவே தெரியாது” என்று மருத்துவர் வாக்குமூலம் கொடுக்கிறார்.

‘எங்கள் காதல் உலகமும் பாலியல் வெளியும் நுண்ணிய உணர்வுகளைக் கொண்டவை’ என்று அவர்கள் சொல்லவேண்டிய நெருக்குதலை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். பார்வை மாற்றுத் திறனாளிகள் குறித்த கற்பிதங்களை முருகேசன் இந்த நூலில் மீண்டும் மீண்டும் கவனப்படுத்தியுள்ளார்.

‘மேலை நாடுகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் வெறும் பயனாளர்களாக மட்டும் பார்க்கப்படுவதில்லை, அவர்களின் சமூகப் பங்கேற்பிற்கான வாய்ப்பும் அதற்கான அங்கீகாரமும் அளிக்கப்படுகின்றன. அவர்களின் தேவை அறிந்து அதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன’ என்கிறார் நூலாசிரியர்.

அறிவுத் தளத்தில் தன்னை நிறுவிக்கொண்ட முருகேசன், கடந்துவந்த பாதையில் உழன்று கொண்டிருக்கும் தன் தரப்பினரின் வாழ்வுரிமைக்காக இடையறாது சிந்திப்பதும், அதைச் செயலாக்கும் திசையில் இயங்குவதும் மானுட அறத்தின் வெளிப்பாடு. அவர் சிறப்புப் பள்ளியில் பயின்றவர்.

‘கல்வியில் நாட்டம் ஏற்படுவதற்கும் தன்னம்பிக்கை உருவாகுவதற்கும் களம் அமைத்தவை அந்தப் பள்ளிகள்தான்’ என்கிறார். ‘அரசு அறிவித்துள்ள உள்ளடங்கிய கல்வித் திட்டம் அவர்களுக்குச் சிறப்புப் பள்ளியில் கிடைத்துவந்த தனித்துவமான கவனிப்பை இல்லாமலாக்கி, கல்விக்கூடத்தை நோக்கிய அவர்களது நகர்வைத் தடுத்துவிடும்’ என்கிற முருகேசனின் முன்னெச்சரிக்கை துல்லியமானது. உள்ளிருந்து எழும் இக்குரல்தான் நாளை ஓர் இயக்கமாக மாறும்.

கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள்
மு.முருகேசன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.240
தொடர்புக்கு: 044 2433 2924

- தொடர்​புக்கு: vareeth2021gmail.com

SCROLL FOR NEXT