இந்தியாவின் முன்னணி பிராண்டுகளாக இன்று வளர்ந்திருக்கும் தொழில்களின் சுவாரசியமான பின்னணியை நூலாசிரியர் இந்த நூலில் சொல்லியிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த எம்.ஆர்.எஃப். டயர் உற்பத்தி நிறுவனம் இந்திய அளவில் டயர் உற்பத்தியில் கணிசமான பங்கு வகிக்கும் நிறுவனமாக மாறிய கதை இதில் சொல்லப்பட்டுள்ளது.
கே.எம்.மாமன் மாப்பிள்ளை என்கிற ஒரு மலையாளி சென்னை திருவெற்றியூரில் ஒரு விளையாட்டு பலூன் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். பிறகு அதுதான் குட் இயர், டன்லப் போன்ற வெளிநாட்டு பிராண்டுகளுடன் போட்டிபோட்டு அவற்றையும் முந்தி முன்னணி டயர் பிராண்ட் ஆகியது.
இந்தக் கதையை இதில் சொல்லியிருக்கிறார். அதுபோல் எம்.டி.எச். மசாலாவின் கதையும் சொல்லப்பட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த தமிழாசிரியர் அய்யம்பெருமாள் கோனாரின் உரை, நமது தமிழ்ப் பண்பாட்டின் ஓர் அடையாளமாகிவிட்டது. அந்த கோனார் உரை என்கிற பிராண்டின் கதை இந்த நூலில் சிறப்புக்குரிய ஒன்று. மதுரையைச் சேர்ந்த காளி மார்க் சோடாவின் வெற்றிக் கதை போன்ற உள்ளூர் பிராண்டுகளின் பின்னணியையும் இந்த நூலில் கவனத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது. - விபின்
தெரிந்த பிராண்டுகளின் தெரியாத கதைகள்
சுப.மீனாட்சி சுந்தரம்
பழனியப்பா பிரதர்ஸ்
விலை: ரூ.170
தொடர்புக்கு: 7358594111
மறைமலையடிகளின் வரலாற்றுத் தடங்கள்: தனித் தமிழ் இயக்கத்தின் முன்னோடி மறைமலையடிகள் ஆவார். இன்று நாம் பயன்படுத்திவரும் தனித் தமிழ் நடைக்கு அவர் அளித்த பங்களிப்பு முக்கியமானது. இந்தி மொழி ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடந்த முதலாம் போராட்டங்களின் முனைப்புடன் செயல்பட்டவர். மறைமலையடிகளின் சமூக வரலாற்றை அவரது பெயரன் மறை.தி.தாயுமானவன் திறம்படத் தொகுத்துள்ளார். மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த பாண்டித்துறைத் தேவர் அடிகளாரை அறிந்து தமிழ் வளர்ப்பில் இணைந்த செய்தியை அழகாகச் சொல்லி நூலைத் தொடங்குகிறார் தாயுமானவன்.
நாகை வாழ்க்கை, பல்லாவரத்துக்குக் குடி வந்தது எனத் தனிச் செலவுகளும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதனுடன் விவேகானந்தர் சபையில் உரையாற்றியது, வள்ளலாளர் குறித்த அவர் அபிப்ராயம் எனப் பலவும் இதில் சொல்லப்பட்டுள்ளன. தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றம் போன்ற முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. பெரியாருடன் அவருக்கு இருந்த தொடர்பு குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. புனைவுக்கு உரிய சுவாரசியமும் கட்டுரைகளுக்கு உரிய ஆவணப்படுத்தும் தன்மையும் ஒருங்கே கொண்ட நூல் இது. - ஜெய்
தனித்தமிழ்த் தந்தையின் வரலாற்றுச் சுவடுகள்
மறை. தி.தாயுமானவன்
மறைமலையடிகள் பதிப்பகம்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 9840988361
எளிமையான மனிதர்களின் கதைகள்: ஜி.எஸ்.எஸ். என்கிற பெயரில் பத்திரிகைத் துறையில் அறியப்பட்ட ஜி.எஸ்.சுப்ரமணியனின் கதைகள் இவை. அருண் சரண்யா என்கிற புனைபெயரில் அவர் எழுதியுள்ள இந்தக் கதைகள், வாசிப்புச் சுவாரசியம் கொண்டவை. எளிமையான மனிதர்களின் இயல்பான பலவீனங்களை இந்தக் கதைகள் வழி ஜி.எஸ்.எஸ். சொல்லியிருக்கிறார்.
கணவனை இழந்த பெண்ணைப் பற்றிய கதையில் இழப்புக்குப் பின்னால் உள்ள இன்னொரு பக்கத்தைத் திறந்துகாட்டுகிறார் கதையாசிரியர். காதல் கணவனை இழந்ததால் அவளைத் தலை முழுகிவிட்டதாகப் பேசாமல் இருந்த அப்பா, அம்மா அவளைச் சுவீகரித்துக்கொள்கிறார்கள்.
அவளுக்கு ஒரு வீட்டை வாங்கித் தரவும் முடிவெடுக்கிறார்கள். அலுவலகத்தில் அவள் மீது எரிந்து விழும் அதிகாரி கரிசனையுடன் நடந்துகொள்கிறார். கல்லூரிக் கால நண்பன் காதலுடன் வருகிறான். இவையெல்லாம் இழப்பால் அவளுக்குக் கிடைத்திருக்கும் நன்மைகள்.
ஆனால், இறந்த முரண்பாடுகள் கொண்ட காதல் கணவன் திரும்பி வந்தால் அவளுக்குச் சந்தோஷம் தருமா? இந்தக் கேள்வியை எழுப்புகிறார் அவர். இன்னும் சில கதைகளில் அப்பா-மகள் போன்ற உறவுகளுக்கு இடையிலான பதற்றங்களையும் துணிச்சலுடன் சொல்லியிருக்கிறார். - குமார்
அருண் சரண்யா
சிறுகதைகள்
தாமரை பிதர்ஸ்
மீடியா பி.லிட்.
விலை: ரூ.300
தொடர்புக்கு: 7550009565